ஆட்டம்-43
ஆட்டம்-43
“ Fear is just an illusion. Courage above fear ( அச்சம் என்பது வெறும் மாயை. பயத்திற்கு மேல் தைரியம் கொள்)”
அன்னை தன்னிடம் மந்திரமாய் கூறியது நினைவில் வர , தன் முன் நின்றிருந்தவனை வெட்டி போடும் அளவிற்கு ஆங்காரம் கொண்டு வெறித்தவள் , “ யெஸ் . நான் என் புருஷன் கூட ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ” என்று அவனைக் கடந்து நகர முயன்றாள் .
உத்ராவை செல்ல விடாது அவன் குறுக்கே கரம் விட , அக்கேவலமானவனின் கரம் தன் மேல் படாது அருவெறுப்புடன் முகச் சுளிப்பை முகத்தில் அப்பட்டமாய் காட்டி பின்னே நகர்ந்தாள் அபிமன்யுவின் மனையாள்.
தாடை இறுக அவனை நிமிர்வாய் விழியோடு விழி பார்த்தவள் , “ உன் சாவை நீ தேடிட்டு இருக்க” என்று காளி அவதாரம் எடுக்கக் காத்திருந்த முகத்துடன் வார்த்தைகளை வெட்டி எறிய ,
அதில் வாய்விட்டுச் சத்தமாக சிரித்தவன் , “ அன்னைக்கு அழுதவளா நீ ? உன் புருஷன் ட்ரெயினிங்கா இல்ல உங்கம்மா ட்ரெயினிங்கா ?” என்று விழிகள் வெறியில் பளபளக்க பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டவனின் இதயம் , மொத்த குடும்பத்தின் இரத்தத்தை குடிக்க எண்ணிக் காத்திருந்தது.
அவனின் விழிகளில் தெரிந்த பழிவெறியில் உத்ராவின் சப்த நாடியும் உள்ளுக்குள் அதிர்ந்து ஆட , ‘ தன் குடும்பத்தின் மேல் அப்படி இவனுக்கு என்ன வன்மம் ? ‘ என்றே பேதை பெண்ணவளுக்குத் தோன்றியது.
‘ யாரால் இவனுக்கு என்ன ஆனது ? மொத்த குடும்பத்தையும் இப்படி வதைக்கத் துடிக்கிறான் என்றால் , யாரால் என்ன ஆனது என்றே மனம் கேட்டுத் தவித்தது ‘ அவனை நேராக பார்த்து , “உனக்கு எங்க மேல ஏன் இப்படி ஒரு வன்மம் ?” என்று கேட்டே விட்டாள்.
அதற்கு பதிலாய் ஆட்களை அச்சம் காண வைக்கும் ஒரு ராட்சத புன்னகையை கொடுத்தவன் , தன்னுடைய அலைபேசியை எடுத்தபடி , “ அதை தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி இதை பாரு” என்று அதில் ஒரு காணொளியை ஓட விட , மனம் முழுவதும் விவரிக்க இயலாத ஆரவாரத்தில் குமுற , விழிகள் இரண்டும் இரண்டு மடங்காக விரிந்து கொள்ள , அதிர்ச்சியில் இதழ்கள் பிரிந்து நடுங்கியது.
தன் எதிரில் சாவகாசமாக நின்று தன்னுடைய ஒவ்வொரு முக பாவங்களையும் ரசித்துக் கொண்டிருந்தவனை அதிர்ச்சி அலைகள் மேனியை தாக்கிய நிலையோடு பார்த்தவள் , “ ப்ளீஸ் ! டெலிட் பண்ணு” என்றாள்.
ஓர் இளக்கார புன்னகையை கொடுத்தவன் , “ இவ்வளவு நேரம் இருந்த தைரியம் எங்கடி போச்சு ?” என்று கேட்டவனை கலக்கமும் தவிப்புமாக கண்டவள் ,
“ரொம்ப ஈனமா இருக்க நீ” என்று அடிக்குரலில் பற்களைக் கடித்தபடி கர்ஜிக்க , விட்டால் அவனின் குரல்வளையில் பாயும் ஆத்திரத்தில் இருந்தாள்.
சட்டென உத்ராவின் விழிகள் எங்கோ பாய , அவளின் விழிகள் குத்தி நின்ற திசையை அவளை பார்த்தே உணர்ந்தவன் , “ அப்ப நான் கிளம்பறேன் …” என்று உத்ராவிடம் விஷ மானுடனாய் கூறியவன் , தன்னுடைய தொப்பியையும் , கூலர்ஸையும் , மாஸ்க்கையும் அணிந்து கொண்டு அங்கிருந்து அகன்று செல்ல , உத்ராவின் முன் கொதிக்கும் சினத்துடன் செவ்வண்ணம் பூசிய வதனத்துடன் நின்றான் அபிமன்யு .
முக்கியமான மீட்டிங்கில் இருந்து , பாதியில் வந்திருந்தான். நீரஜாவிற்கு அழைத்திருந்தவன் உத்ராவை பற்றி கேட்க , “ அவ சர்ஜரி ப்ளாக்ல இருக்கா ” தகவலாய் கூறிவிட்டு அவர் வைத்துவிட , அங்கிருந்தவர்களுக்கு அழைத்தவன் உத்ரா அங்கில்லை என்பதை அறிந்துகொள்ள , தனது அலைபேசியில் இருந்த ஆக்ஸஸ் மூலம் மருத்துவமனையின் கேமிராக்களை ஆராய்ந்தவனுக்கு உத்ரா வெளியே செல்வது தெரிய , கடுங்கோபம் கொண்டவனின் விழிகள் எல்லாம் எரிமலையாய் கொழுந்துவிட்டு வெடித்துச் சிதறியது .
அடுத்து உத்ராவினை ட்ராக் செய்து வந்தவன் , இப்போது அவள் முன் நின்றிருந்த தோரணையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆத்திரமும் , பெண்ணவளின் உள்ளத்தில் திகிலை கிளப்ப , அவனை மெல்ல மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
அபிமன்யுவின் முகம் கடுமையை தத்தெடுத்திருக்க , அணிந்திருந்த கூலர்ஸை சர்வ சாதாரணமாக கழற்றியவன் , “ உன்கிட்ட என்ன சொல்லி இருக்கேன் ?” என்று வெகு அழுத்தமாக கேட்க , அபிமன்யுவை பார்த்துக் கொண்டு நின்றவளுக்கு கணவன் கேட்டது செவியில் விழுந்தாலும் , சற்று விநாடிகளுக்கு முன் தன்முன் நின்றவன் காட்டிய காணொளியே மனதில் நிற்க , இரு யோசனையில் பதில் அளிக்காது நின்றிருந்தாள்.
பதில் பேசாது நின்றிருந்தவளின் மேல் அபிமன்யுவின் கோபமும் , பொறுமையும் எல்லையை கடந்து கொண்டிருக்க , தனது இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தை அழுந்த வருடி தன்னை அடக்கியவன் , அவளின் கைகளை பிடித்து கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றான்.
அவனின் பின்னேயே வந்தவளை கார் பார்க்கிங்கிற்குள் வந்தவுடன் , தன்முன் இழுத்தவன் விட்டால் கரத்தை ஓங்கியிருப்பான் .
ஆனால் , அவனின் ஆழ்மனமும் புத்தியும் ஒருசேர , ‘ அவள் உன் அடியை தாங்க மாட்டாள் ‘ என்றும் , ‘ கை உயர்த்துவது தவறென்றும் ‘ அபிமன்யுவிடம் கூக்குரலில் உறும , தனது இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தை வருடியவன் , “ கெட் இன்சைட் ( Get inside)” என்று உறும , அரண்டு போய் அபிமன்யுவுடன் அவனது ரேன்ஞ் ரோவரில் ஏறினாள் .
வீடு வந்து சேரும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அபிமன்யு அதீத ஆங்காரத்துடன் அமர்ந்திருப்பது புரிந்த உத்ரா , அவன் புறம் திரும்பக் கூட இல்லை.
காரை செலுத்திக் கொண்டே காரிலிருந்த ப்ளூடூத்தின் மூலம் விஜய்யிற்கு அழைத்து , “ எங்க இருக்கீங்க மாமா ?” என்று வினவ ,
“ ஹாஸ்பிடல் தான்… என்ன விஷயம் ?” என்று கேட்டவரிடம் விவரத்தைக் கூறியவன் , “ அத்தைகிட்ட சொல்ல வேணாம் … நீங்க மட்டும் கிளம்பி வீட்டுக்கு வாங்க” என்றவன் ப்ளூடூத்தினை அணைத்துவிட்டு , தனது அதிகாரத்தை மேலும் காரிடம் காட்டி வேகத்தைக் கூட்டினான் .
அவனருகே அமர்ந்திருந்த உத்ராவிற்கு அவனின் அனல் தன் மேல் அடிப்பதைப் போன்று இருக்க , உள்ளுக்குள் வியர்த்துக் கொண்டிருந்தவள் , உதட்டை கடித்து உணர்வுகளை அடக்க , சிறிது நிமிடங்களில் கார் வீட்டை அடைய ,
கார் வரும் சப்தத்திலேயே , உள்ளே கணவருடன் அம ர் ந்திருந்த இமையரசி , “ அபி கார் மாதிரி இல்ல ? இந்த நேரத்துக்கு வர மாட்டானே ” கணவரிடம் கேட்டுக் கொண்டே வெளியே வந்தார்.
வெளியே வந்தவர் அபிமன்யுவின் முகத்தைப் பார்த்தவராய் கதி கலங்கிப் போக , அவனுடனே சின்ன மானாய் இறங்கிய பேத்தியை பார்த்தவருக்கு ஏதோ தவறாக நடந்திருப்பது புரிய , “ வா அபி … என்ன இரண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கீங்க … சாப்பாடு எடுத்து வைக்கட்டா ?” என்று உத்ராவை பேரனிடம் இருந்து தனியே அழைத்துக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் பேத்தியின் கரத்தை சாமர்த்தியமாக பிடித்தபடி கேட்டார்.
பாட்டியின் பேச்சையும் , அவர் தன் மனையாளின் கரத்தை பிடித்திருந்த விதத்தையும் மாறி மாறி கண்டவனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை யாராலும் கண்டறிய முடியவில்லை.
உத்ராவின் மறு கரத்தை பற்றியவன் , “ எனக்கு உங்க பேத்தி கூட கொஞ்சம் பேசணும் … அதுக்கு அப்புறம் வந்து சாப்பிடுவா … மறக்காம உங்க பேத்திக்கு வைக்கிற ப்ளேட்டுக்கு பக்கத்துல மட்டும் உப்பு ஜாடியை வைங்க ” என்றவன் ,
“ விஜய் மாமா வந்தா … ஆபிஸ் ரூமுக்கு அனுப்புங்க ” என்று உத்ராவை அறைக்குள் இழுத்துச் சென்றான்.
அறைக்குள் வந்ததும் அவளின் கரத்தை விட்டவன் அமைதியாக சென்று , அங்கிருந்த விண்டோவை திறந்துவிட்டு டையை லூஸ் செய்தபடி நிற்க , உத்ரா அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
உள்ளுக்குள் ஒவ்வொரு மணித்துளியும் அச்சமாக இருந்தது.
சிறிது நேரத்திலேயே விஜய் வந்துவிட , மாமனாரிடம் மொத்தமாக நடந்ததைக் கூறிய அபிமன்யு , “ இப்ப கூட உங்ககிட்ட கொண்டு வந்திருக்க மாட்டேன்… பட் நீங்க தான் ஹாஸ்பிடல் வரட்டும்னு கூட்டிட்டு போனீங்க … ஏற்கனவே நடந்தது எல்லாம் சின்ன விஷயம் கிடையாது அங்கிள் … ஸோ இனிமேல் உத்ராவை நான் ஹாஸ்பிடல் அனுப்பறதா இல்ல … அத்தையையும் இதுல தலையிட வேணாம்னு சொல்லிடுங்க ” என்று தன்னை மீறி உத்ரா சென்ற கோபத்தினில் திடமான குரலில் உறுதியான முடிவுடன் அபிமன்யு கூற , மகள் ஏதோ கூற வருவதை விஜய் கண்டார் .
மகளின் அருகே சென்றவர் , “ என்னடா ?” என்று உத்ராவின் கரத்தை பரிவாக பிடித்துக் கொண்டு அமர , அபிமன்யுவை பார்த்தவளின் விழிகள் அதே பரிவை அவனிடம் இருந்து அவளறியாது எதிர்பார்த்தது.
தன் தோளில் இருந்த தந்தையின் கரத்தின் மேல் கரம் வைத்தவள் , “ இன்னிக்கு நான் அவனை பாத்தேன் ப்பா ” என்றாள் குரல் கமற .
அவள் யாரென்று கூறத் தேவையில்லை! அவள் முகமும் குரலுமே கூறியது அவள் யாரை கூறுகிறாள் என்று!
மகளின் கரத்தை தட்டிக் கொடுத்த விஜய் , “ ஓகே… எங்க பாத்த ?” என்று கேட்க , நடந்ததை கூறியவள் ,
“அவனுக்கு நம்ம மேல என்ன பழிப்பா ?” என்று புலம்பியவளை கண்டு மனம் வெதும்பிய விஜய் , அபிமன்யுவை பார்க்க , அவனோ , ‘ இப்போது எதுவும் கூற வேண்டாம் ‘ என்பது போல தலையாட்டினான்.
இ ரை யை வெறியுடன் வேட்டையாட வேங்கை பதுங்கிக் காத்திருந்தது!
மேலும் அனைத்தையும் கூறிய உத்ரா , அவன் காட்டிய வீடியோவை மட்டும் கூறவில்லை .
தயக்கதுடன் தந்தையை பார்த்தவள் , பின் அபிமன்யுவை பார்த்து , “ அவன்…” என்று தொடங்க , அங்கிருந்த மூவரின் அலைபேசிகளுக்கும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்ததிற்கான சத்தம் ஒரே நேரத்தில் வர , உத்ரா , “ ஷிட் !” தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள் .
அதே நேரம் நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவிற்கும் , தனது அலுவலக அறையில் வெளிநாட்டு ப்ராஜெக்ட்டில் மூழ்கியிருந்த விக்ரமிற்கும் , அபிமன்யு விட்டு வந்த மீட்டிங்கில் இருந்த நறுமுகைக்கும் மெசேஜ் சென்றிருந்தது.
மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்த நறுமுகை , அபிமன்யுவின் அறைக்குள் வந்தவள் ஆரவ்விடம் மேலே நடக்க வேண்டிய வேலைகளை கொடுத்து அனுப்பிவிட்டு , அலைபேசியை எடுத்து பார்த்தாள்.
அந்த காணொளியை பார்த்த விநாடி இந்த பிரபஞ்சம் இரண்டாக பிளந்து தன்னை சுழற்றியடித்து இழுத்துக் கொண்டு போவதை உணர்ந்தவள் , உடல் வெடவெடக்க அமர்ந்திருந்த கணம் , படீரென்று கதவு திறக்கப்படும் சப்தத்தில் நாடி நரம்புகள் யாவும் நடுங்க அறையின் வாயிலில் நின்றிருந்தவனை கண்டாள் .
அவளது கணவன் தான்!
அவளுக்காக வந்திருந்தான்!
அவளுக்காக அபிமன்யுவின் அறையை முதல் முறை மிதித்திருந்தான் !
கணவனை பார்த்தவுடன் இயலாமையோடு சோர்வாக இருக்கையில் சாய்ந்தவள் , கணவனையே இமை சிமிட்டாது பார்த்திருக்க , அறைக்குள் முதலில் வர யோசித்தவன் , தன்னவளின் பற்பல உணர்ச்சிகள் கொந்தளிக்கும் வதனத்தை கண்டு தன் பிடிவாதங்களை தூரப்போட்டுவிட்டு தன்னவளிடம் விரைந்தான்.
மனையாளின் அருகே வந்தவன் அவள் கரத்தில் இருந்த அலைபேசியில் ஓடிக் கொண்டிருந்த காணொளியை கண்டு , அலைபேசியை வாங்கி அணைத்து தனது பாக்கெட்டில் போட்டவன் , “ தைரியமா இரு நறு ! ஐ வில் லுக் இன்டூ இட் ( I will look into it)” தன்னவளின் கன்னங்களை பற்றி பேச , விழிகளை மூடி ‘ சரி ‘ என்பது போல தலையசைத்தவளுக்கு தலை சுற்றியது .
விழிகளை திறந்தவள் மீண்டும் கண் சொருகுவதை கவனித்த விக்ரம் , “ நறு !” என்று வஞ்சியவளின் கன்னம் தட்டியவனின் வயிற்றிலேயே சாய்ந்தவளை , தன்னோடு அழுத்திக் கொண்டவன் , அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தன்னவளின் முகத்தில் வேகமாய் அடித்து , வாயில் சிறிது புகட்ட , சற்று தெளிந்தவள் விக்ரமை கண்ணீர் ரேகையுடன் பார்த்தாள்.
“மா… மா…” மெதுவாக அழைத்தவள் , “ ஏதாவது பண்ணுங்க ” என்று அவனின் வயிற்றில் முகம் புதைக்க , தன்னோடு அவளை அழுத்திக் கொண்டவன் ,
“நான் இருக்கேன் நறு … நீ இவ்வளவு பானிக் ஆகாத… நான் வேணா அத்தைக்கு கால் பண்ணட்டுமா ?” என்ற கணவனின் வயிற்றில் நாடி குத்தி அவனை அண்ணாந்து பார்த்தவள் , ‘ இல்லை ‘ என்று தலையசைத்தாள்.
“ரொம்ப வீக்கா தெரியற நறு ” என்றவனிடம் இருந்து விலகயவளின் அருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன் , “ பேசாம அத்தைகிட்ட விட்டுட்டு போகட்டா ?” என்று வினவ , மீண்டும் தலையசைப்பே பதில்.
யோசனையிலேயே இருந்தவள் , கணவனின் விழிகளோடு விழிகள் உரசி , அவனின் கரத்தை எடுத்து தன் வயிற்றில் வைத்தவளின் செய்கையிலேயே விக்ரமின் இதயம் மார்கழி மாத பனி உடலில் ஊடுருவியது போன்று சில்லிட்டுப் போனது.
கணவனின் முக மாற்றங்களை கவனித்து சிறு கோடாய் புன்னகைத்தவள் , “ அப்பா ஆக போறீங்க” என்று அடுத்து கூறிய வார்த்தைகளில் பனி நீரை எடுத்து உள்ளத்தில் தெளித்தது போன்று ஆடவனுக்கு ஆக , மகிழ்ச்சியில் உள்ளுக்குள் துள்ளித் திமிறியவன் , நறுமுகையின் நெற்றியில் இதமாக தன் முத்திரையை பதிக்க , தன்னவனின் உயிரை சுமந்திருந்தவளின் மேனி புல்லரித்தது .
அடுத்த நொடி நறுமுகையிடம் இருந்து விலகி எழுந்தவன் , “ நான் கிளம்பறேன் நறு … நீ கிளம்பு” என்று கூற , ‘ இல்லை ‘ என்பது போல தலையாட்டியவள் ,
“நீங்க போயிட்டு வாங்க மாமா… நான் இங்கையே இருக்கேன் ” என்றவளுக்கு அங்கு பவுன்சர்ஸை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றவன் , நேராக சென்றது கௌதம் பிரணவ்வை பார்க்க.
கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த சிவப்பு நிற ரேன்ஞ் ரோவரில் இருந்த விக்ரமின் புருவங்கள் , அங்கு ஏற்கனவே நின்றிருந்த அபிமன்யுவின் கருப்பு நிற ரேன்ஞ் ரோவரை கண்டு யோசனையுடன் நெருங்கியது .
சிந்தனைகளுடன் காரை நிறுத்தியவன் , கௌதமின் அறையை நோக்கிச் செல்ல , அங்கு ஏற்கனவே அவனை நிறைய பேருக்கு நன்கு தெரியும் என்பதால் அவனை அங்கு தடுப்போர் யாரும் இல்லை.
விடுவிடுவென தன் வேகமும் , தோரணையும் குறையாது உள்ளே நுழைந்தவனை கௌதம் பார்க்க , கௌதமை பார்த்தபடி அமர்ந்திருந்த அபிமன்யுவின் முதுகுப்புறம் விக்ரமினை வரவேற்றது.
கௌதமிற்கு எதிரே அபிமன்யுவிற்கு அருகே சென்று அமர்ந்த விக்ரம் அபிநந்தன் , எப்படி தொடங்குவது என்று வாழ்வில் இரண்டாவது முறை தயங்கினான் . அதுவும் அவனின் அருகே அவனின் சகோதரன் அமர்ந்திருக்க அவனால் இதை பற்றி பேச இயலவில்லை .
சங்கடம்! தன்னுடயை அந்தரங்கத்தை ஒருவரின் முன் பேச யாரால் இயலும்!
அதுவும் வெளிவந்த வீடியோ விக்ரமும் , நறுமுகையும் முதல் முறை ஒன்றாய் இருந்தது!
பேசாது அமர்ந்திருக்கும் விக்ரமையே பார்த்த கௌதம் , “ விக்ரம் ! நீ என்ன விஷயமா பேச வந்திருக்கியோ அதுக்கு தான் அபிமன்யுவும் …” என்று அவன் முடிக்கும் முன் , கோடி மதிப்புள்ள மின்சாரம் தன் உடலில் விழுந்த அதிர்ச்சியில் எழுந்த விக்ரமின் பலத்தில் அவன் அமர்ந்திருந்த நாற்காலி பின்னே நகர்ந்து அதிர்வுடன் படீரென்று விழுந்தது.
தலையை அழுந்தக் கோதி விழிகளை இறுக மூடி , கேட்டதை ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தவன் , சற்று ஆசுவாசப்படுத்த அருகில் இருந்த அறைக்குள் சென்று கைகளை கட்டிக் கொண்டு நின்றுவிட , கௌதமை பார்த்த அபிமன்யு , “ போய் பேசு” என்றான்.
தலையசைப்புடன் எழுந்த கௌதம் , விக்ரமிடம் செல்ல , அவனோ வெளியே தெரிந்த எதையோ வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.
“ விக்ரம் ” என்றழைத்த நண்பனை திரும்பிப் பார்த்தவன் ,
“ஏதாவது பண்ணு கௌதம் … என்னால நறு ஹர்ட் ஆகறதை பாக்க முடியாது” என்று இறுக்கமான குரலில் கூறியவனின் அலைபேசி அடிக்க , அதை எடுத்துப் பார்த்தவன் , அழைப்பை கட் செய்துவிட்டு கௌதமை பார்த்தான்.
“பேசு விக்ரம் ” என்று அதட்டிய கௌதமிடம் மறுப்பாக தலையசைத்தவன் , “ அத்தை தான் கௌதம் … ஐ திங்க் அவங்களுக்கும் …” என்றவன் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு இறுக்கமாய் நிற்க , உள்ளே வந்த அபிமன்யு ,
“ கௌதம் இமிடியட்டா சோர்ஸ் ஃபோன் ( source phone) எதுன்னு கண்டுபிடிச்சு ப்ளாக் பண்ணுங்க … அன்ட் லோகேஷன் ( location) ஷேர் பண்ணுங்க ” என்ற அபிமன்யு முன்னே செல்ல , செல்லும் அபிமன்யுவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவனின் சகோதரன்.
விக்ரமும் கிளம்ப எத்தனிக்க , “ விக்ரம் … நீ முன்னாடி போய் வெயிட் பண்ணு… நான் வர்றேன் ” என்று அனுப்பிய கௌதம் , முக்கியமான நபருக்கு அழைத்து பேசியவன் , “ இங்க பாரு கிஷோர் … விஷயம் வெளிய போக கூடாது… என்னோட பேமிலிக்கு பண்ற மாதிரி நினைச்சு பண்ணு” என்றவன் அவனுக்கென்று வைத்திருந்த காரில் சென்று விக்ரமின் காருக்கு மாறிக்கொள்ள , அங்கு நீரஜா வீடு வந்து சேர்ந்திருந்தார் .
வந்தவுடன் தனது அறைக்கு ஓடியவர் , கணவரை இறுக அணைத்துக்கொள்ள , மனையாளின் பதட்டம் புரிந்தவர் , “ ரிலாக்ஸ் அம்மாடி… அபிமன்யுவும் , விக்ரமும் போயிருக்காங்க … எதுவும் பதட்டப்படாத ” என்று சமாதானம் செய்தவர் பொறுமையாக உத்ராவிற்கு காலையில் நடந்ததை கூற , ஆடிப் போனது தாய் உள்ளம்.
“யாருக்கு எல்லாம் இது போயிருக்கு ? ” என்று அவர் தவிப்புடன் வினவ ,
“ நாம , அபிமன்யு , விக்ரம் , உத்ரா , நறுமுகை ” என்று கூற , “ நறு எங்க ?” என்று கேட்ட நீரஜாவை சமாதானம் செய்தவர் ,
“ நீரஜா ! எதுக்கு இவ்வளவு பதட்டம்… இல்லாத பீபியை வர வச்சுக்காத … நறு பத்திரமா இருக்கா … நான் விக்ரம்கிட்ட பேசிட்டேன் …” என்றவர் மனைவியின் முதுகை ஆறுதலாய் வருடிக் கொடுக்க , நீரஜாவிற்கே புரிந்தது.
தனக்கு பிரச்சனை வந்தபோது கூட அழுதிருக்கிறார் . ஆனால் , என்றும் அவர் பயந்து பதட்டம் கொண்டு எல்லாம் நடுங்கியது இல்லை. மகள் என்று வந்ததும் உள்ளுக்குள் மீண்டும் தசைகள் எல்லாம் அச்சம் கண்டு ஆடத் துவங்கிவிட்டது .
விஜய்யின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்த நீரஜாவின் விழிகள் மூடியிருந்தாலும் , நிற்காமல் அசைந்து கொண்டிருந்த கருமணிகள் கூறியது அவரின் உணர்வை.
விஜய் மனைவியை சமாதானம் செய்திருந்தாலும் , தந்தையாக எழுந்த இரத்தக் கொதிப்பை அவரால் அடக்க முடியவில்லை. தன் மனைவியையும் , மகள்களையும் விடாது துரத்தும் அவனை உயிருடன் எரித்து கொன்று சாம்பலைக் கூட இல்லாது ஆக்கிவிடும் வெறி அவருக்குள் .
மென்மையான மனிதனையே அப்படி சிந்திக்க வைத்துவிட்டான் அந்த ராட்சஷன் .
நேரம் ஏறிக் கொண்டே போக , அனைவருக்குள்ளும் ஒவ்வொரு பதட்டம். உத்ராவோ கட வு ளின் முன் அமர்ந்து , மனதில் வந்து கொண்டிருந்த அனைத்து கடவுள்களையும் வேண்டிக் கொண்டிருக்க , இந்த நேரத்தில் தைரியமாய் இருந்தது என்னவோ நறுமுகை தான்.
தன் சாணக்கிய கணவனின் மேல் கொண்ட நம்பிக்கையில் தைரிய லஷ்மியாய் , அபிமன்யுவின் அறையில் அமர்ந்திருந்த படி , கடிகாரத்தை வெறித்திருந்தாள் .
மணி முன் மாலை மூன்றை தொட்டிருக்க , கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு , மீண்டும் விழிகள் சொருகுவது போன்று இருக்க , கை விரல்களை இறுக மூடி தலை குனிந்து அமர்ந்தவள் , கணவன் வராது சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதத்துடன் இருக்க , அவளின் பொன் வயிற்றில் உருவாகியிருந்த மகவிற்கு பசிக்காது போகுமா ?
வயிற்றை அழுத்திப் பொத்தியவள் , தன்னவனின் உயிரை சிறிது நேரம் பொறுக்க கூற , அன்னையின் சொல்லை தட்டாது கேட்ட விக்ரமின் நீரில் , நறுமுகையின் உதிரத்தில் உருவான மகவு அன்னையை படுத்தாது அமைதியாய் உறங்கத் துவங்க , டேபிளின் மேல் தலை சாய்த்து படுத்தாள் விக்ரமின் காதல் மனைவி.