kv-18
18
வழியெங்கும் ட்ரெக்கிங் செல்பவர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருந்தனர் . அந்த நதிக் கரையில் சிலர் டென்ட் அடித்துத் தங்கியும் இருக்க , விஜயும் ஜானவியும் அங்கிருந்த சிறு பெட்டிக் கடையில் சென்று அமர்ந்தனர் .
அந்தக் கடையில் குளிருக்கு இதமாக நூடுல்ஸ் மற்றும் டீ மட்டுமே விற்பனை செய்தனர் . அது போக சிகரெட்டும் இருக்க , முக்கால் வாசி ஆண்கள் அங்கே ஊதித் தள்ளினர் . அந்த இடமே சிகரெட் வாசனையில் மூழ்கிக் கிடக்க , ஜானவிக்கு குமட்டிக் கொண்டு வந்தது . அதைக் கண்டும் காணாதது போல இருந்தான் விஜய் .
‘ உனக்கு பிடிக்கலனா அது உன்னோட ‘ என தனக்கு மட்டும் ஒரு டீயும் நூடுல்சும் ஆர்டர் செய்தான் . அவளுக்கு வேண்டுமா என்று கூட கேட்கவில்லை .
அவன் முகத்தை வைத்தே அவன் தனக்கு எதுவும் செய்யமாட்டான் என அறிந்து கொண்டவள் , தனக்கு ஒரு டீ மட்டும் ஆர்டர் செய்தாள் .
“ பரவாலையே , ராஜ பரம்பரை டீ கடைலலாம் டீ குடிப்பீங்களா ?” நக்கல் செய்தான் .
“ நான் அப்படி யார் கிட்டயும் காடிட்டது இல்லையே ..” முறைப்புடன் நின்றாள் .
“ ஆமாமா… காட்டிக்காம செஞ்சுடுவீங்க எல்லாத்தையும் .. ம்ம்ம் ” கடுப்பில் சலித்தான் .
“ ஹல்லோ .. நானும் பாக்கறேன் ரொம்ப தான் என்னை மட்டம் தட்டறீங்க ..” சற்று குரல் உயர , சுற்றுபுறம் பார்த்த அவனது விழி சைகையில் அவளும் அமைதியானாள் .
இருவரும் பின் அமைதியாக உண்டுவிட்டுக் கிளம்ப , அப்போது தான் ஒரு ட்ரெக்கிங் க்ரூப் கிளம்பியது . அவர்களுக்கு முன்னே விஜய் கிளம்ப , ஜானவி அவர்களுக்குப் பின்னே சென்றாள் .
வழியெங்கும் அந்தக் கூட்டம் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டு நடக்க , ஜானவி வேகமாக நடந்து செல்லும் அவனைப் பிடிக்க அந்தக் கூட்டத்தில் நுழைந்து செல்லப் பார்த்தாள் .
‘ இவள் தங்களுடன் வரவில்லையே ‘ என நினைத்தவர்கள் அவளையே கேட்க , தான் முன்னே சென்று கொண்டிருப்பவனுடன் வந்தேன் என்று கூறி முன்னேறினாள் .
அதற்குள் அவன் எங்கோ சென்று விட , இவளும் வேக நடை கூட்டிச் செல்ல , கல் இடறி தடுமாறி விழுந்தாள் . கூட வந்தவர்கள் அவளைப் பிடித்து அமர வைக்க , அதில் ஒருவர் “ இருங்க உங்க கூட வந்தவர கூப்பிடறேன் ” என்று ஓடினார் .
அவனிடம் விஷயத்தைக் கூற , “ இது என்ன தேவையில்லாத இம்சை ” என்று முனகிக் கொண்டு திரும்பி நடந்து வந்தான் .
அவன் வந்ததும் மற்றவர்கள் விலகிச் செல்ல , அவன் புருவத்தை உயர்த்தி அவளது கால்களைப் பார்த்து ,
“ ஒன்னும் பெருசா இல்ல .. ரெண்டு தடவ உதறிட்டு எந்திரிச்சு வா .. இந்த மாதிரி எல்லாம் தொட்டதுக்கெல்லாம் உகந்துட்டா ஒரு வேலையும் நடக்காது .
இல்ல நீ இப்படித் தான் னா தயவு செஞ்சு திரும்பி போய்டு . உன்னால நானும் எல்லா இடத்துலையும் இப்படி ரெஸ்ட் எடுக்க முடியாது .” இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அவன் நின்றான் .
பொங்கி வந்த கோபத்துடன் எழுந்து நடக்க ஆரம்பித்தாள் ஜானவி . முதலில் சற்று வலியில் விந்தி நடந்தாலும் , அவன் சொன்னது போல உதறிய பின் சற்று தேவலாம் போல இருந்தது .
“ என் தலைல இடியே விழுந்தாலும் நான் எங்கயும் உட்கார மாட்டேன் போதுமா ..!” பல்லைக் கடித்தாள் .
உதட்டை கஷ்டப்பட்டு இழுத்து சிரித்தவன் , “ நட ” என்று முன்னே நடந்தான் .
“ சரியான ராட்ஷசன் ” ஜானவியின் வாய்க்குள் முனகியது அவனுக்கு நன்றாகவே கேட்டது . இருந்தாலும் அவளிடம் சரிக்கு சரி நின்று வம்பிழுக்க இது நேரமல்ல என்றுணர்ந்து முன்னேறினான் .
அவர்களுக்கு முன்னே சென்றவர்கள் நதிக்கரையின் ஒரு பகுதிக்குச் செல்ல , விஜய் அந்தப் பாதையை தவிர்த்து சற்று தள்ளி வேறு ஒரு பகுதிக்குச் சென்றான் .
இது அனைவரும் புழங்கும் வழி என்பதால் அவன் அங்கு எதுவும் கிடைக்காது என்பதை அறிந்திருந்தான் . அவனைப் பின் தொடர்ந்தாள் ஜானவி . கையில் இருந்த மேப் இந்தப் பகுதி புதர்கள் இருக்கும் பகுதி என்று காட்ட , அதை அவனிடம் கூறலாம் என வாய் திறக்க ,
“ இங்க நெறய புதர்கள் இருக்கும் . பாத்து கால வை . அப்புறம் விழுந்துவெச்சு மறுபடியும் உட்கார்திராத . நான் கெளம்பி போயிட்டே இருப்பேன் .” சிறிதும் இறக்கம் இன்றி கூறினான் .
“ நீங்க அலெர்ட் பண்றதுக்கு முன்னாடியே நான் மேப்ல பாத்து வெச்சிருக்கேன் . ரொம்ப நன்றி உங்க கரிசனைக்கு . ஹ்ம்ம் ” ஆளுக்கு ஒரு திசையில் முகத்தை திருப்பி நடந்தனர் .
சிறிது தூரத்தில் நதியின் சலசலப்பு கேட்க நதியின் பக்கம் சென்றான் விஜய் . குளிர் உடலை குத்தியது . போட்டிருந்த ஜெர்கின்னையும் தாண்டி சில்லிட்டது .
அந்த விஷ்ணுவே இந்த நதியில் குடியிருப்பதாக ஐதீகம் . அதனால் தான் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு சாளக்ராம கல்லுகுள்ளும் அந்த மகாவிஷ்ணுவை பார்க்க முடிகிறது .
அந்த நதியில் இருந்து சிறிது நீரைக் கையில் எடுத்தவன் , கண்மூடி தியானித்து பின் பருகினான் . கண்ணில் தெரிந்தவரை எதாவது சாளக்ராமக் கல் கிடைக்கிறதா என்று பார்த்தான் .
ஆனால் நம் மக்கள் கூடுமானவரை அனைத்தையும் எடுத்து தூர் வாரி விட்டனர் . ஒரு கல் கூட இப்போது கிடைப்பதில்லை . விஜய் சிறிது நேரம் அங்கேயே நிற்க ,
“ அல்ரெடி மதியம் தாண்டிடுச்சு . சீக்கிரம் கிளம்பினா தான் ஒரு நல்ல இடமா பாத்து டென்ட் அடிக்க முடியும் .” அவன் தன்னை மதிப்பதில்லை என்றாலும் இப்போது இருவர் மட்டுமே இந்தப் பயணத்தில் இருக்க , அவனிடம் சொன்னாள் .
“ ம்ம்… போலாம் .” ஒரு நிதானமான பதில் அவனிடமிருந்து வர , ஜானவி ஆச்சரியப் பட்டாள் .
“ சரி இந்த கரையைக் கடந்து அந்தப் பக்கம் போகணும் . அடிச்சுட்டு ஓடுற தண்ணீல பாத்து கால வெச்சு வா .” ஒரு எச்சரிக்கை தந்துவிட்டு ஆற்றில் இறங்கி நடக்க ஆரம்பித்தான் .
ஜானவிக்கு இதெல்லாம் சிறிதும் பயம் இல்லை . அவனுக்கு இணையான தைரியம் அவளிடம் எப்போதும் உண்டு . ஆகையால் அவன் பின்னோடு அவளும் ஆற்றில் இறங்கினாள் .
ஆற்று நீர் முதலில் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது . ஆனால் இடுப்பளவு நீரில் அவர்கள் செல்லும் போது சற்று வேகம் பிடிக்க ஆரம்பித்தது .
இருவருமே அதை உணர ,
“ கொஞ்சம் வேகமா வா . அப்ப தான் நீரோட்டத்தோட வேகத்துக்கு இணையா ஈசியா கடக்க முடியும் .” மீண்டும் விஜய் தானாகக் கூற
“ சரி ” என்றாள் பாதையில் கவனம் வைத்து .
விஜய் மனதில் அந்த பத்மநாபக் கடவுளை நினைத்துக் கொண்டு கடக்க , ஆற்றில் வேகம் இன்னும் அதிகரித்தது . விஜயின் நெஞ்சு வரை நீர் வந்துவிட , ஜானவிக்கு கழுத்து வரை இருந்தது .
“ இன்னும் கொஞ்ச நேரத்துல என் தலைக்கு மேல போய்டும் ” என்றாள் .
அவர்களது பைகளையும் சுமந்து செல்வதால் அவர்களால் பாரத்தோடு நீந்தக் கூட முடியாது .
அவளின் கஷ்டம் உணர்ந்தவன் மனது அவளுக்கு உதவச் சொல்லி அவனை உந்த ,
“ என் கைய பிடிச்சுகிட்டு கொஞ்சம் தண்ணீல கால ஊனி குதிச்சு வ .. அப்போ தான் எம்பி , மூழ்காம வர முடியும் .”
அந்தச் சமயத்தில் சிறிதும் யோசிக்காமல் அவனது கையைப் பற்றிக் கொள்ள ,
இருவர் மனதிலும் ஒரு பாரம் அழுத்தியது . எத்தனை தான் நிமிர்வும் மனதின் திடமும் நிறைந்திருந்தாலும் , வயது என்ற ஒரு கருவி , நேரம் வந்தபோது அதன் ஹார்மோன்களை சுழற்றி விட்டது .
அடுத்த நொடி விஜய் தன்னை சமாளித்து நடக்க , ஜானவிக்கு சில நொடிகள் தேவைப்பட்டது . கண்களில் அதைக் காட்டிவிடாமல் கண்களை மூடி , அவன் சொன்னபடி நீரில் உந்தி நடந்தாள் .
சில நிமிடங்களில் இருவரும் அந்த ஆழமான பகுதிகளைக் கடந்துவிட , இடுப்பளவு நீர் வரும் வரை இருவரும் கையை விடவில்லை . பின்பு சுயம் பெற இருவரும் ஒரே சமயத்தில் கையை விடுவித்துக் கொண்டனர் .
சூரியன் அந்தப்பகுதியைச் சுற்றி இருந்த மலையின் பின் ஒளியத் தொடங்க , இருவரும் வேகமாகக் கரையை அடைந்து காட்டிற்குள் புகுந்தனர் . மணி ஐந்தரைக்கே அங்கே இருள் ஆரம்பித்துவிட , இருவரும் ஹெட்லைட் கொண்ட தொப்பியை அணிந்து கொள்ள , அடர்ந்த காடு புலப்பட்டது .
நடைபாதை என்பது கூட அங்கே இல்லை . கல் வைக்கும் இடத்தில் கூட புற்கள் முளைத்து முழங்கால் வரை இருந்தது . அடியில் எந்த பூச்சி பொட்டு இருந்தாலும் சத்தியமாக கண்ணுக்குத் தெரியாது .
“ போற இடம் பூரா இப்படியே இருந்தா , எப்படி ? டென்ட் அடிக்கக் கூட ஒரு இடம் இருக்காது போலிருக்கே !” சற்று கலக்கம் அவள் குரலில் தெரிய , ஓரக்கனில் அவளின் பயந்த முகம் அவன் கண்ணில் பட்டது .
உள்ளுக்குள் அவளது பயம் அவனுக்கு அறுசுவை உணவு உண்டது போல நிறைவைத் தந்தது . அதில் லேசாகச் சிரித்தவன் ,
“ இன்னும் கொஞ்ச தூரம் போனா , சம தளம் வரும் . பயப்படாத .” நாக்கை கண்ணக்கதுப்பில் அழுத்தி சிரிப்பை அடக்க , ஜானவிக்கு அந்த மங்கிய இருளில் நன்றாக கண்ணில் பட்டது . இந்த நேரத்தில் அவளது கெத்தை அவனிடம் காட்ட முடியாமல் போனதற்கு அவன் பின்னால் அழகு காட்டி முறைத்தாள் .
காட்டிற்குள் புலி உறுமும் சத்தமோ அல்லது கரடியின் சத்தமோ கேட்க , ஜானவியின் உயிர் வரை சில்லிட்டது .
“ கொஞ்சம் வேகமா போங்க . ஏதாவது வந்துடப் போகுது . அவனது கையை அனிச்சையாகப் பிடித்துக் கொண்டு நடக்க ,
“ அப்படி ஒன்னும் வந்து உன்னைத் தின்னுடாது ..” அவளது கையைப் பார்த்துக் கூறினான் .
உடனே அவள் கையை எடுத்துவிட்டு உதட்டை முருக்க , ‘ என்ன பண்ணாலும் நடக்காது ‘ என்பது போல அவன் பாதையை பார்த்து நடந்தான் .
சிறிது தூரம் வரை அந்த உறுமல் சத்தம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது . பின் நின்று விட , ஒரு சமதளம் போன்ற இடமும் வந்தது .
இருவரும் எதுவும் பேசாமல் , அவரவருக்கு கொண்டு வந்திருந்த டெண்ட்டைப் பிரித்து அங்கிருந்த பெரிய கற்களும் , திடமான குச்சியும் எடுத்து வந்து அமைத்துக் கொண்டனர் .
உடைகளை மாற்றிக் கொண்டு வர , காலையில் சாப்பிட்ட நூடுல்ஸ் எப்போதோ செரித்திருக்க , நீரில் நடந்து வந்ததும் சேர்ந்து இப்போது கொலைப் பசியை உண்டு பண்ணி இருந்தது .
ஜானவி உள்ளிருந்து ஆட்டோ காஸ் ஸ்டவ்வைக் கொண்டு அந்து அதில் கொண்டுவந்த ப்ரெட்டை சாப்பிட நினைத்தாள் . அவளுக்கு அப்படியே சாப்பிடப் பிடிக்காது .
அதை அறிந்தவன் , “ ஸ்டவ்வ வேஸ்ட் பண்ணாத . இங்க மரக்குச்சி எல்லாம் இருக்கு . அதை வச்சு தீ மூட்டிக்கலாம் . இன்னும் வேற எங்கல்லாம் போக வேண்டி இருக்குமோ . அங்க இந்த வசதி கூட இல்லாமல் போகலாம் . அப்போ இது தேவைப்படும் . இப்ப நான் தீ மூட்டறேன் . அதுலயே வாட்டி சாப்பிடு .” திடீரென பொறுப்பு வந்தவனாகக் கூற ,
சரியென தலையாட்டி . மற்றவைகளை வைத்து விட்டு ப்ரெட் மட்டும் கையில் எடுத்து வந்தாள் .
அதற்குள் அவன் காய்ந்த சருகுகள் மற்றும் குச்சிகள் என பொறுக்கிக் கொண்டு வந்தான் . வெளிச்சத்திற்காக இருவரது டெண்டிலும் சிறு விளக்கை வைத்திருந்தனர் . அருகருகே டென்ட் இருந்தாலும் இரண்டுக்கும் இடைவெளி இருந்தது .
அவன் கொண்டு வந்த சருகில் தீ மூட்டிப் பற்றவைக்க , அதைக் குளிருக்கு அது சற்று இதமளித்தது .
விஜயும் தான் கொண்டு வந்த பிரெட்டில் இரண்டை எடுத்து உண்ண , ஜானவி நெருப்பில் காட்டி சற்று டோஸ்ட் செய்து கொண்டிருந்தாள் . லேசாக மனம் வீச , அப்போது தான் உணர்ந்தான் , அது மிருகங்களை தூண்டிவிட வாய்ப்புள்ளது என்று .
உடனே அந்த நெருப்பை நீர் ஊற்றி அனைத்து விட்டான் .
“ ஏன் ?” கலக்கமாக ஜானவி பார்க்க ,
“ சுட்ட வரைக்கும் போதும் . இதோ மனம் இங்க இருக்கற விலங்குகளுக்கு தெரிஞ்சா உடனே இங்க வந்துரும் ” என பதறாமல் ஒரு குண்டைப் போட ,
“ என்னது… ? ஐயோ இப்போ என்ன பண்றது… ?” கண்களில் கலக்கம் ஏற்பட ,
“ பாத்துக்கலாம் . நீ சாப்ட்டு போய் படு . எனக்கும் டயர்ட்டா இருக்கு ” என எழுந்து உள்ளே சென்று , ச்லீபிங் பாக் போட்டு , கழுத்து வரை மூடிக்கொண்டு படுத்து விட்டான் .
ஜானவி டெண்டுக்குள் வந்து அதை உண்டவள் . ச்லீபிங் பேகில் மூடிக்கொண்டு படுத்தாலும் , அவன் சொன்னதிலேயே பக் பக்கென்று பயந்து தூக்கம் வராமல் தவித்தாள் .
அவன் தூங்கிவிட்டான் என அவன் மூச்சு சத்தத்தை வைத்தே உணர்ந்தவள் , சுற்றும் முற்றும் வேறு எதாவது சத்தம் கேட்கிறதா என்ற உணர்வுடனே விழித்திருந்தாள் .
களைப்பு அவளையும் வாட்ட சற்று நேரத்தில் தூங்க ஆரம்பித்தாள் . ஆனால் அப்போது தான் ஏதோ ஒன்று அவளது டெண்ட்டை உரசிக் கொண்டு போவது போல் இருக்க , இவளால் கண்ணைத் திறக்க முடியவில்லை . கஷ்டப்பட்டு கண்களைத் திறக்க , அவள் நினைத்தது மெய் என்பது போல ஏதோ ஒரு மிருகம் டென்டின் அருகே இருந்தது .
இவளுக்கு சத்தம் போடவும் முடியவில்லை . கத்தினால் , அந்த சத்தத்திற்கு மற்ற மிருகம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை . இந்த மிருகமும் மிரண்டு விட்டால் வேறு வினையே வேண்டாம் . கப் சிப் என்று படுத்திருக்க , மெல்ல அந்த மிருகம் அந்த வாசனையை மோப்பம் பிடித்து இவளின் டெண்டுக்குள் நுழைந்தது .
அப்போது தான் டெண்ட்டை மூடாமல் விட்டது கருத்தில் பட்டது .
அனைத்துக் கடவுள்களையும் வேண்டியபடி , கழுத்து வரை இருந்த ஸ்லீபிங் பேகின் மேல் ஒரு துண்டைப் போட்டு முகத்தை மூடியபடி படுத்திருந்தாள் .
அது என்ன மிருகம் என்று கூட அவளுக்குத் தெரியாது . ரூமின் விளைக்கையும் அனைத்திருக்க , எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .
அவள் அருகில் அந்த விலங்கு வரும் அரவம் கேட்க , அவளுக்கு உயிர் வெளியே வந்துவிடும் போல இருந்தது .