LNCrawler

kv-20

Kv — www.smtamilnovels.com · All chapters

kv-20

20

“ சரி , இதுக்கு நான் சரியான ஆளா இருப்பேன்னு எப்படி நினைக்கறீங்க ?” தானும் அந்நியன் தானே என்று கேட்க ,

“ நீங்க கேட்கறது நியாயம் தான் . அந்த வேர் உங்க மேல பட்டும் அது எறியாம இருந்துச்சே .. அத வெச்சு தான் சொல்றோம் . எங்களுக்கு உதவக் கூடிய ஒருத்தர் உடலில் ஒரு வித சக்தி இருக்கும் . அந்த உடல் மேல இந்த வேர் பட்டா அந்த சக்தி இந்த வேரை எரிக்காது . அதை வெச்சு தான் சொல்றோம் .” அவன் விளக்கினான் .

“ இது வரைக்கும் எத்தனை பேர் அப்படி வந்தாங்க . உங்கள்ல யாரும் உங்க தெய்வத்த வெளிய கொண்டு வர முயரற்சிக்கலையா ?” விஜயின் கேள்விகள் தொடர ,

“ இது வரை இந்தக் காட்டுக்குள்ள வந்தவங்கள எங்க காவல் மிருகமே உள்ள விடாது . அவங்களுக்கு அந்த சக்தி இருக்கான்னு அதோட மோப்ப சக்தில தெரிஞ்சிடும் . அப்படி இல்லன்னா அவங்கள அது அடிச்சிரும் .” அவன் சொன்னதும் ஜானவியின் உடல் ஒரு நொடி சிலிர்த்தது .

விஜய் மட்டும் நேற்று அவளைக் காப்பாற்றவில்லை என்றால் , இன்று அவள் பிணமாகத் தான் கிடந்திருப்பாள் . நினைக்கவே நெஞ்சம் பதற , காப்பாற்றிய அவனை மெல்ல கண் உயர்த்திப் பார்க்க அவன் அந்தக் காட்டு வாசியிடம் பார்வையை வைத்திருந்தான் .

இவள் பார்ப்பதை உணர்ந்தாலும் , அது அவனுக்கு முக்கியமாகப் படவில்லை .

“ பாக்கறேன்னு தெரிஞ்சாலும் இந்தப் பக்கம் திரும்பமாட்டானே !” வாய்க்குள் முனகிக் கொண்டாள் .

“ இப்ப நான் என்ன செய்யணும் ?” விஜய் அவனுடைய பங்கு என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கேட்க ,

அந்தக் காட்டுவாசி அதற்கான வழிமுறைகளை சொல்ல ஆரம்பித்தான் .

*******************************************************************

கிருஷ்ணமாச்சாரி தனக்கென கொடுக்கப்பட்ட அறையில் மிகவும் சொகுசாகப் படுத்திருந்தார் . நேற்று அந்த அவையில் இருந்தவர்களையும் , அவர்கள் தன்னிடம் சொன்ன விஷயங்களையும் பற்றி ஒரு முறை ஆழ்ந்து சிந்தித்தார் . எத்தனை பெரிய விஷயங்கள் அவை ! நினைக்கவே பிரமிப்பாக இருந்தது !

அங்கே அமர்திருந்த பத்து பேரும் , இவ்வுலகில் உள்ள மிக முக்கியப் புள்ளிகளின் பின்னே இருந்து அவர்களையே ஆட்டி வைப்பவர்கள் என்று தான் கூறவேண்டும் . ஒவ்வொருவரும் ஒரு ஒரு நாட்டில் இருந்து வந்தவர்கள் . ஆனால் , இந்த உலகில் எங்கும் எப்போதும் செல்லும் பவர் அவர்களிடம் இருந்தது .

ஒவ்வொருவர் பற்றியும் அறிந்து கொண்டார் . கிருஷ்ணன் தான் செய்யும் இந்த மந்திர வித்தைகளை பெரிதாக நினைத்துக் கொண்டிருக்க , மற்றவர்கள் அவருக்கும் மேலே பல பல விஷயங்களில் பெரும் புள்ளிகளாக இருந்தனர் .

“ நாங்க எல்லாரும் இந்த உலகில் , அதில் நடக்கும் அனைத்து விஷயங்களும் ஏற்கனவே சொல்லி எழுதி வைக்கப் பட்டது என்பதை அறிந்தவர்கள் .” முதலில் ஒருவர் பேச ஆரம்பிக்க , அந்த வாக்கியத்தை கிருஷ்ணன் உள்வாங்கவே சில நொடிகள் பிடித்தது !

“ என்ன ?!!” அமர்ந்திருந்தவர் எழுந்துவிட்டார் .

“ இதுக்கே ஷாக் ஆகாதீங்க…உட்காருங்க !”

கிருஷ்ணன் மெல்ல அமர ,

“ இதை நீங்க நம்பித் தான் ஆகணும் . இது ஒரு மாய உலகம் . இதுல நடக்கற எல்லாமே , இந்தக் காலத்துல இருக்கற கம்பியூட்டர் ப்ரோக்ராம் மாதிரி தான் . என்ன நடக்கணும் . எப்போ நடக்கணும் , எல்லாமே எழுதி வைக்கப் பட்டது . அதைத் தான் நாம விதின்னு சொல்றோம் . அந்த விதியை எழுதுனவங்க எங்க இருக்காங்க… ? உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா ?” அவரிடம் கேள்வி கேட்க

ஒன்றும் விளங்காமல் அதிர்ச்சியில் இருந்தார் கிருஷ்ணன் .

“ அவருக்கு விஷயத்தை மட்டும் சொல்லுங்க ..” இன்னொருவர் கூற ,

“ சரி . உங்களை எங்க கூட நாங்க சேத்துக்க முக்கிய காரணம் , நீங்க இருக்கற இடம் . அந்த பத்மநாப சுவாமி கோவில் ! அதில் திறக்கப் படாம இருக்கும் அந்தக் கருவறை ! அதுக்குள்ள என்ன இருக்குன்னு நீங்க நினைக்கறீங்களோ அது இல்லை .

அங்கே இருக்கும் அந்த விஷயம் தான் நாம தேடிக்கிட்டு இருக்கற அந்த உலகத்துக்குப் போகற வழிக்கு ஆரம்ப வாசல் .” ஜீரணிக்க முடியாத விஷத்தை அவர் எளிதாகக் கூற ஆடிப் போனார் கிருஷ்ணன் .

கிருஷ்ணன் உண்மையில் இப்படி நினைக்கவில்லை . அந்த அறைக்குள் இருப்பது ஓர் அரிதான விஷயம் என்று தெரியும் . அதை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற வரை தான் அவரது மந்திர சக்தி அவருக்கு உரைத்தது . ஆனால் அது இத்தனை பெரிய இமாலய விஷயமாக இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை .

“ அப்படீனா ? அதை உபயோகப் படுத்த முடியாதா ? அதை வெச்சு நிறையா சாதிக்கலாம்னு நினைச்சேனே ?!” அதிர்வுடன் கேட்க ,

“ இந்த மாதிரி இந்த உலகத்தில் இருக்கும் அற்ப விஷயங்கள் மேல ஆசைய வளத்துக்காதீங்க… அப்படி இருந்தா நீங்க எங்க கூட ஓட்ட முடியாது . நாங்க எதிர்பார்க்கறது வேற .” அவருக்கு சற்று எரிச்சல் வர , மற்றொருவர் தொடர்ந்தார் .

“ இங்க பாருங்க கிருஷ்ணன் . உங்களுக்கு தெளிவா சுருக்கமா சொல்றேன் . கவனமா கேளுங்க .. இந்த உலகத்தில இருக்கற வசதி வாய்புகள் எல்லாம் மாயை . அதவாது மனிதர்களுக்கு இதன் மேல நாட்டம் அதிகமாக அதிகமாக , உண்மையான சொர்க்கம் நிம்மதி இவையெல்லாம் எங்க இருக்குன்னு தேடக்கூடாது என்பதற்காக உருவான விஷயம் .

அப்படிப் பட்ட இடம் இந்த உலகத்தில் யார் கண்ணுலையும் படாம மறஞ்சு இருக்கு . முதல்ல அதைத் தேடடி கண்டு பிடிக்கணும் . அந்த இடத்துக்குப் போகற வழிகள் நிறையா இல்லை . அதைப் பத்தி தெரிஞ்சுகிட்டப்ப தான் , உங்களப் பத்தி கேள்விப் பட்டோம் . நீங்க இருக்கற அந்த இடத்துல தான் ரகசிய அறையில அதுக்கான வழி ஒளிஞ்சுகிட்டு இருக்குனு எங்களோட அனுமானம் . அதுனால அதை அடைய நீங்க தான் உதவனும் .

அந்த இடத்துக்குப் போயிட்டா நாம இருக்கற நிலையே வேற… அதைப் பத்தி அப்பறம் சொல்றேன் . நீங்க சொல்லுங்க .. அதை திறக்கற வழி உங்களுக்குத் தெரியும்னு இவர் சொன்னாரு ” என்று கிருஷ்ணமாச்சரியைக் கூட்டி வந்தவரை கை காட்டினார் .

இத்தனை விஷயங்களையும் ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்த கிருஷ்ணனுக்கு தொண்டை வரண்டது . மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து இரண்டு மிடறு குடித்தவருக்கு சற்று தெளிவு பிறக்க ,

தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார் .

“ ஆமா .. அந்த கதவைத் திறக்கத் தான் நான் இப்ப சில திட்டம் போட்டிருக்கேன் . அது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை . அதை திறக்க ஒருத்தனால தான் முடியும் . அவனையும் நான் இப்ப நெருங்கியாச்சு .

அதுனால இனிமே சுலபம் தான் . கூடிய சீக்கிரமே அதை அடைஞ்சதும் உங்களுக்குத் தகவல் சொல்றேன் .” மிடுக்குடன் சொல்ல ,

“ நீங்க தகவல் சொல்ல வேண்டாம் . உங்க கையில இருக்கற அந்த தொடர்பு பந்தை மட்டும் எப்போதும் உங்க கூடவே வெச்சிருங்க . அதன் மூலம் நாங்க விஷயங்களை தெரிஞ்சுப்போம் .” என்றனர் .

அன்று மயானத்தில் கிருஷ்ணமாச்சாரி இவர்களைத் தொடர்பு கொண்ட அந்தப் பந்தைத் தான் குறிப்பிடுகிறார்கள் என அறிந்துகொண்டார் .

அப்போது தான் கவனித்தார் . அங்கிருந்த எல்லோருமே ஒரு அழகிய நேர்த்தியான சிறு பையில் அந்தப் பந்தை வைத்திருந்தார்கள் .

அந்த இடத்தில் “ சரி ” என சம்மதிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழிகள் இல்லை .

“ உங்களுக்கு எதாவது உதவி வேணும்னா உடனே எங்களைக் கேட்கலாம் ” என்றதும் ,

அவரைக் கிளம்பச் சொல்லி விட்டனர் . அவரைக் கூட்டி வந்தவரே கொண்டு வந்து ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு , “ இப்போது உறங்கி இருந்து விட்டு நாளை கிளம்புங்கள் ” என்று கூறினார் .

“ இது என்ன இடம் . எனக்கு எல்லாமே குழப்பமா இருக்கு .” செல்ல இருந்தவரைத் தடுத்து கிருஷ்ணன் கேட்க ,

“ ஷ்ஷ்… நாளைக்கு வந்து பேசுவோம் .” இப்போது எதுவும் பேசவேண்டாமென சைகை செய்துவிட்டுக் கிளம்பினார் .

அன்றைய இரவு அவருக்குக் குழப்பத்தில் கழிய , மறுநாள் விடியலில் தான் உறக்கம் வந்தது .

காலை கண்விழித்ததும் , அவரது நண்பன் வருவதாகச் சொல்ல அவருக்காக இப்போது காத்திருந்தார் . நேற்று நடந்த அனைத்தும் கேட்ட யாவையும் இன்னும் அவரை ஒரு மாய வலையில் வைத்திருப்பது போலத் தான் இருந்தது .

கதவு தட்டும் சட்டம் கேட்க , நேற்றைய நினைவை விடுத்து அவசரமாக எழுந்து சென்று கதவைத் திறந்தார் . எதிர்ப்பாத்தது போல அவரது நண்பர் தான் வந்திருந்தார் .

“ வாங்க .. உங்களுக்காகத் தான் காத்திருந்தேன் வேணு .” உள்ளே வரவேற்க ,

“ என்ன சந்தேகம் கிருஷ்ணன் சொல்லுங்க ..?” நிதானமாக வந்து அமர்ந்தார் .

“ வேணு , முதல்ல இது என்ன இடம் சொல்லுங்க ..?” அவருக்கு எதிரே இருந்த நாற்காலியில் கிருஷ்ணன் அமர ,

மெல்ல சிரித்தார் வேணு .

“ இது நாம வாழற உலகத்தோட ஒட்டாத ஒரு பகுதி . அங்க வந்த மனுஷங்க எல்லாம் வேற மாதிரி . இந்த உலகத்தை ஆளனும்னு நெனச்சா , அத விட்டு வெளிய வந்தா தான் , அதோட தன்மையும் அதன் சக்தியும் எந்த அளவுன்னு தெரியும் . அதுலயே இருந்து பார்த்தா தெரியாது . அதுனால தான் அப்படி ஒரு ப்ளான் போட்டு , பூமியைத் தாண்டி இந்த இடத்தை நிர்மானிச்சு இருக்காங்க .

நீ வந்தியே லிஃப்ட் .. அது ஒரு மார்டர்ன் ராக்கெட் . அதை அஃபீஷியலா இந்த உலகத்துக்கு அறிமுகப் படுத்த இன்னும் இருநூறு ஆண்டுகள் கூட ஆகலாம் . சில விஷயங்களை வெளிய சொல்லாம விஞ்ஞானிகளை வெச்சு செஞ்சுக்குவாங்க . அப்படிப் பட்ட செல்வாக்கு உடையவங்க இவங்க .

இன்னும் சொல்றேன் கேளு . ஏலியன் கிட்டயே தொடர்பு வெச்சிருக்காங்க . அப்போ இவங்க கிட்ட நீ எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும்னு யோசி . அதுமட்டுமில்லாம , இன்னொரு முக்கியமான விஷயம் கவனி .

இவங்க இந்த உலகத்தைத் தாண்டி வெளிய வந்து ஒரு உலகத்தை நிர்மானிச்சவங்க . அப்போ அவங்க தேடற ஒரு விஷயம் அந்தக் கோவில் நிலவரைல ஒளிஞ்சு இருக்குன்னா , அது எப்பேர்பட்ட விஷயம்னு யோசி . அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் சுயநலமா யோசிச்சுடாத . ஒரு ஒரு மாபெரும் சக்தி . சோ ரொம்ப ரொம்ப கவனமா இரு .”

தொண்டையில் இருந்த எச்சிலைக் கூட விழுங்க மறந்தார் கிருஷ்ணன் . தலை சுற்றியது அவருக்கு . இன்னும் அது பற்றித் தெரிந்து கொள்ள ஏகப் பட்ட விஷயம் இருந்தது அவர் மூளைக்குள் . எதைக் கேட்பது , எதை விசுவது என்றே தெரியவில்லை .

“ எனக்கு இதெல்லாம் ஜீரணமாக இன்னும் நேரம் வேணும் போலிருக்கு . அது சரி , இந்த உலகத்துல நடக்கற எல்லாமே ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டதுன்னு சொன்னாங்களே ! அது நிஜமா ?” பேயரைந்த முகத்துடன் காணப்பட்டார் கிருஷ்ணன் .

“ அது ஒரு லாஜிக்ல அவங்க சொல்றாங்க . அதாவது …” என்று இழுத்தவர் ,

“ இது ஒரு அதி நுண்ணிய இயற்பியல் விஷயம் . சில பேர் நம்பறாங்க .” பொதுப்படையாகக் கூற , கிருஷ்ணனுக்கு அதை விட முடியவில்லை .

“ இல்ல எனக்குத் தெளிவா சொல்லு . எதையும் அரை குறையா புரிஞ்சுக்க என்னால முடியாது .” தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் .

“ உனக்கு ஒரு உதாரணம் சொல்றேன் . ராமர் கடைசி காலத்துல அவர் உயிரை எடுத்துட்டுப் போக யமன் காத்திருந்தாராம் . ஆனா ஹனுமான் யமனை உள்ளே விடலயாம் . இத தெரிஞ்சுகிட்ட ராமர் , தன்னோட மோதிரம் ஒன்றை கழட்டி அந்த மாளிகை தரைல இருந்த ஒரு இடுக்குல போட்டாராம் .

பிறகு ஹனுமானை விட்டு அதை எடுத்து வரச் சொன்னாராம் . ஹனுமானும் , ராமர் சொல்லைத் தட்டாம , தன்னோட உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு அந்த பள்ளத்துல விழுந்து தேட , அது பாதாள லோகம் வரை போச்சாம் .

அப்போ அந்த இடத்துல ஒரு மோதிரக் குவியலே இருந்துச்சாம் . அந்த லோகத்தக் காவல் காத்த வாசுகி பாம்பு ஹனுமானுக்கு விளக்கம் சொல்லுச்சாம் .

ஒவ்வொரு முறை த்ரேதாயுகம் முடியறப்ப ராமர் இப்படி ஒரு மோதிரத்தை வேணும்னே தவற விட்டு , ஒரு வானரத்த விட்டு கொண்டு வரச் சொல்லுவாராம் . அப்போ தான் அவர் இந்த உலகத்தை விட்டு போய் மீண்டும் அடுத்த ஜென்மம் எடுக்க முடியுமாம் .

அதுனால இரு ஒரு வழக்கமா , யுகம் யுகமா நடக்கற விஷயம் தான் . இந்த உலகம் சுத்திக்கிட்டே தான இருக்கு . அப்போ ஒரு இடத்துல இருந்து போனா , மீண்டும் அந்த இடத்துக்கு வந்து தான ஆகணும் . அது போலத் தான் , இது எல்லாமே திரும்பத் திரும்ப நடந்துக்கிட்டே இருக்கற விஷயம்னு விளக்கம் தந்து அனுப்புச்சாம் அந்தப் பாம்பு .

அந்தக் கதைய நாம நம்பினா , இப்போ இந்த உலகத்துல இருக்கற நடக்கற எல்லாமே , ஏற்கனவே நடந்து தானே இருக்கணும் . அப்போ இந்த உலகத்தை விட்டு நாம தள்ளி நின்னு பாத்தா , இங்க நடக்கற எல்லாமே தெரியும் இல்லையா . அதைத் தான் அவங்க சொல்றாங்க .” வேணுவின் விளக்கம் , ஏற்கனவே தலை சுற்றலுடன் இருந்த கிருஷ்ணனை மேலும் குழப்ப , அவர் அங்கிருந்த மெத்தையில் கண்ணை மூடிப் படுத்தே விட்டார் .

மறுபுறம் அங்கே விஜயிடம் வழிமுறைகளைச் சொல்லிக் கொண்டு இருந்தான் அந்தக் காட்டுவாசி .