kv-2
2
அனந்தாச்சாரி மிகுந்த மனபாரத்தோடு அந்த செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார் . அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதை நினைத்து வருந்தினார் . தன் இயலாமையை நினைத்து அவருக்கே வெறுப்பு வந்தது . உடனே யாருக்கோ போன் செய்தார் .
“ உன்னை நான் என்ன சொல்லி அங்க விட்டுட்டு வந்தேன் .. எப்படி நடந்துச்சு இது ?” கோபமாகக் கத்தினார் .
“ மாமா நான் என்ன செய்யட்டும் . எல்லாம் என் கை மீறி போய்டுச்சு .” மறுபுறம் பேசியவன் வருந்த ,
“ நீ ஒன்னும் சொல்லாத . விஜய்க்கு தகவல் சொல்லியாச்சா ?” மீண்டும் கத்த ,
“ இல்ல மாமா .. யாரும் அவனுக்கு போன் பண்ணதா தெரியல .” தயங்கித் தயங்கி கூறினான் .
“ அடேய் … முட்டாள் .. நீயாவது யாரோ போல அவன் கிட்ட பேசி இருக்கலாமே . உன்னையெல்லாம்… போனை வை .” கொதித்துக் கொண்டிருந்தார் .
செய்வதறியாது குறுக்கும் நெடுக்கும் நடந்தார் . இறுதியில் அவரே அவனுக்குப் பேசிவிட எண்ணினார் .
விஜயின் அலைபேசி எண்ணை அவர் அவனது தந்தை வெங்கடேச பூபதியிடம் இருந்து ஒரு முறை வாங்கி வைத்திருந்தார் . ஆனால் எப்போதும் அவனுக்கு அழைக்கக் கூடாது என்றும் வெங்கடேசன் சொல்லி இருந்தார் .
இப்போது அந்த வெங்கடேசனே போய்விட்ட பிறகு , வாக்கு முக்கியமா என்று யோசித்துத் தான் அவனுக்கு அழைத்தார் . ஆனால் அவன் ப்ளேனில் வந்து கொண்டிருந்ததால் அது அனைத்து வைக்கப் பட்டிருந்தது .
“ விஜய் என்ன பண்ற .. போன எடுக்காம !” என சுவரை கைகளால் குத்தினார் .
“ வெங்கடேசன் கடைசியா விஜய் தான் தனக்குக் கொள்ளி வைக்கணும்னு சொல்லிருக்கானே… இவங்க அதை மதிக்காம அந்த உருபடாத பய கோவிந்தன வெச்சு காரியம் பண்ணிடப் போறாங்க . கடவுளே இங்க இருந்துக்கிட்டு நான் என்ன பண்ண… வழி காட்டுப்பா…” கடவுளிடம் புலம்பினார் .
வெங்கடேசனுக்கு வக்கீல் தொழில் . திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியம் இல்லை . ஒரு நாள் திடீரென ஒரு கைக் குழந்தையை கொண்டு வந்து அவரது மனைவியிடம் கொடுத்தார் .
“ இனி இவன் தான் நமக்கு மகன் . இனிமே நமக்கு குழந்தை பிறந்தாலும் இவன் தான் என் மூத்த மகன் . நீயும் இவனை அப்படித் தான் வளர்க்கணும் ” என்றார் .
அவரது மனைவி மிகவும் சாது . கணவனை எதிர்த்து ஒன்றும் செய்யமாட்டார் . ஆகையால் அவர் கொடுத்த குழந்தையை கையில் எடுத்து முத்தமிட்டு , தனது தாயன்பை முதல் முதலில் அவனிடம் காட்டினார் . அவனைக் கொஞ்சி தாலாட்டி சோறூட்டி அவனிடம் மிகவும் ஒன்றிவிட்டார் .
அன்று முதல் விஜய் அவர்களின் குழந்தை .
அவன் பத்தாவது படிக்கும் போதே அவரது மனைவி இறந்துவிட , மகனை தனித்தே வளர்த்தார் . அவனும் தந்தைக்கு எந்த தொந்தரவும் தராமல் தன் வேலையை தானே பார்த்துக் கொள்வான் . அவருடன் சேர்ந்து கேஸ் எப்படி கையாள்வது என்று பார்ப்பான் . தந்தையிடம் கேட்டுக் கொள்வான் . ஆகையால் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர் . அது நீண்ட நாள் நீடிக்காமல் போகக் காரணம் , வெங்கடேசன் அங்கிருந்த அரச குடும்பத்தின் கேஸை நடத்தியது தான் .
அது தான் அவரது இறப்பிற்கும் காரணமாகிப் போனது .
— திருவனந்தபுரம்
ஏகப்பட்ட மர்மங்களும் குழப்பங்களும் சூழ்ந்த ஒரு இடமாக இருந்தது அந்த வீதி ! போலிஸ் வந்து பாடியைச் சுற்றி நின்று யாரும் அங்கு வராமல் பார்த்துக் கொள்ள , அடுத்த பத்து நிமிடத்தில் ஆம்புலன்சில் வந்து ஏற்றிச் சென்றனர் .
“ வெங்கடேசனுக்கு சொந்தக்காரங்க யார் பா ?” போலீஸ் விசாரிக்க
“ அவருக்கு ஒரு பையன் இருக்கான் . அவன் டெல்லில இருக்கான் .” கூட்டத்தில் ஒருவர் கூறினார் .
“ அவனுக்கு போன் செஞ்சு விஷயத்தை சொல்லுங்க .” என்று அவர்களும் தங்களின் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பினர் .
கூட வந்த சில கான்ஸ்டபில்கள் மற்றவர்களிடம் வெங்கடேசன் எப்படி அங்கு வந்து விழுந்தார் என விசாரித்துக் கொண்டனர் .
அதற்குள் அங்கு வந்த பிரஸ் மீடியா எல்லாரும் அதை நியூசில் போட ஆரம்பித்து இருந்தனர் .
அக்கம்பக்கத்து வீட்டினருக்குக் கூட விஜயின் எண் தெரியாது . ஆகவே யாரும் அவனுக்குக் கூறவில்லை . நல்லவேளையாக நியூஸ் போட ஆரம்பித்த சில நிமிடத்திலேயே விஜய் அதைப் பார்த்துக் கிளம்பிவிட்டான் . இது தான் கடவுளின் செயல் என நினைக்கத் தான் தோன்றும் .
மீண்டும் அனந்தாச்சாரி அவனது எண்ணிற்கு அழைத்தார் . நல்லவேளையாக இப்போது ரிங் போனது . அவனது விமானம் தரை இறங்கி இருந்தது . அனந்துவின் எண் விஜயிடம் இல்லை . புது எண் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன் , பின் அதை எடுத்தான் .
“ விஜய் .. அப்பா இறந்துட்டாரு பா . உடனே கிளம்பி ஊருக்கு வா .” எடுத்ததும் விஷயத்தைக் கூறினார் .
“ நான் நியூஸ் பாத்துட்டு இங்க வந்துட்டேன் . நீங்க யாரு ?” கனத்த மனதுடன் பேசினான் .
“ நான் … நான்…” அனந்து தயங்கினார் .
“ சொல்லுங்க .. நீங்க யாரு ,,?” அவனது குரல் வற்புறுத்தியது .
“ நான் உங்க அப்பா ப்ரென்ட் அனந்தாச்சாரி .”
“ அங்கிள் நீங்களா . நீங்க எங்க இருக்கீங்க .. அப்பாக்கு அங்க என்ன ஆச்சு .. சொல்லுங்க .” ஒரு டாக்சியைப் பிடித்து அதி ஏறிக்கொண்டே பேசினான் .
“ நீ அங்க போய் பாருப்பா . நான் வெளியூர்ல இருக்கேன் .” என இணைப்பைத் துண்டித்தார் .
இருந்த அவசரத்தில் அவனுக்கு மீண்டும் அழைக்கத் தோன்றாமல் முதலில் தந்தையைக் காணத் துடித்தான் .
அவன் வீட்டின் முன்பு கூட்டம் இல்லாவிட்டாலும் , ஐந்தாறு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர் . அவர்கள் அக்கம் பக்கத்து வீட்டினர் . இவன் சென்றதும் , “ யப்பா விஜய்… அப்பா க்கு இப்படி ஆயிடுச்சே !” என வருந்தினார்கள் .
“ எப்படி என்ன ஆச்சு ?” என பக்கத்துவீட்டுகாரரிடம் கேட்டான் .
“ தெரியலப்பா .. நல்லாத் தான் பேசிட்டு இருந்தாரு . கோயிலுக்குக் போயிட்டு வந்தவரு , தெப்பக்குளத்துல கால் நனைக்கும் போது அப்படியே கீழே விழுந்துட்டாரு . அங்கேயே உயிர் போயிடுச்சுப்பா .” அழ ஆரம்பித்தார் ,
“ ஹார்ட் அட்டாக்கா ?” கண்கள் கணக்க நின்றான் .
“ போலீஸ் வந்து எங்க கிட்ட எல்லாம் விசாரிச்சாங்க . நாங்க பாத்துட்டே இருக்கும் போது தான் இது நடந்தது . அதுனால எல்லார்கிட்டயும் கேட்டுட்டு ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயிருக்காங்க . எங்க கிட்ட உன் நம்பர் இல்லப்பா . அதான் சொல்ல முடியல .” அவனுக்கு அழைக்காததற்கான காரணத்தையும் சொன்னார் .
“ பச்ச்…” அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது .
“ நான் உடனே எங்க அப்பாவ பார்க்கணும் .” என்றான் .
“ ஜி .. ஹெச் .. போ விஜய் ..” ஒருவர் சொல்ல ,
“ நானும் கூட வரேன் அண்ணா ..” ஒரு குரல் கேட்டது .
திரும்பிப்பார்த்தான் விஜய் . அங்கே அரவிந்த் நின்று கொண்டிருந்தான் . அவன் அனந்தாச்சாரியின் தங்கை மகன் . அவரிடம் அப்போது போனில் பேசியதும் அவன் தான் .
விஜய்க்கு அவனைக் காண ஆச்சரியமாக இருந்தது . ‘ தந்தை இருந்தவரை அனந்தாச்சாரியின் குடும்பத்தை அவனிடம் ஓட்ட விட்டதில்லை . ஆனால் இப்போது , அவரே போனில் பேசுகிறார் , அவரது தங்கை மகன் தன்னுடன் வருவதாகக் கூறுகிறான் .’ தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றும் விளங்காமல் தவித்தான் .
இப்போது இவனை நம்பலாமா வேண்டாமா ..! தெரியாத நண்பனை விட தெரிந்த எதிரி பரவாயில்லை என்று தோன்றியது . அப்படி ஒன்றும் அவன் எதிரி இல்லை . இருந்தாலும் வெங்கடேசன் இவர்களுடன் சேரவிடாததற்கு அவனே நினைத்துக் கொண்ட காரணம் அது .
“ கொஞ்சம் இரு . என் திங்க்ஸ் எல்லாம் வெச்சுட்டு வரேன் .” வீட்டிற்குள் அவசரமாகச் சென்று வந்தான் விஜய் .
கதவை வெறுமனே சாத்திவிட்டு புறப்பட்டான் . அங்கு வீடுகளைப் பூட்டிச் செல்லும் அளவிற்கு பயம் இல்லை .
இருவரும் அரவிந்தின் பைக்கில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றனர் . அங்கே போலீஸ் சூழ்ந்திருக்க , விஜய் இறங்கி ஓடினான் .
“ சார் நான் தான் விஜய் . எங்க அப்பா தான் வெங்கடேச பூபதி . நான் அவர பாக்கணும் ” அவசரமாகக் கூறினான் .
“ ஓ ! நீங்க தான .. கொஞ்சம் இருங்க போஸ்ட்மார்டம் பண்ணி தான் பாடி குடுப்போம் .” இன்ஸ்பெக்டர் சொன்னதும் , கோபம் கொண்டான் விஜய் .
“ யாரக் கேட்டு போஸ்ட்மார்டம் பண்றீங்க . என் பெர்மிஷன் இல்லாம எப்படி செய்யலாம் .” என மொத்த ஹாஸ்பிடலும் பார்க்குமாறு கத்தினான் .
“ மிஸ்டர் . விஜய் , நாங்க விசாரிச்ச வரைக்கும் உங்க நம்பர் அங்க யாருமே தரல . யாருக்கும் தெரியல . அப்பறம் எப்படி உங்கள கண்டக்க்ட் பண்றது . நீங்க எப்ப வந்து நாங்க ஃபார்மாலிடீஸ் எப்ப முடிக்கறது . அதுனால தான் நாங்க ஆக் – ஷன் எடுத்தோம் . ரூல்ஸ் படி தான் செஞ்சோம் .” மிகவும் தைரியமாகச் சொன்னார் . இல்லை விஜய் கேட்டால் சொல்லும்படி அவருக்கு சொல்லப்பட்டிருந்தது .
“ புல்ஷிட் . இறந்தவரோட செல்போனை ஒரு தடவ ஓபன் பண்ணிருந்தா அவரோட எல்லா காண்டாக்சும் கிடைச்சிருக்கும் . ஒரு பேசிக்கான விஷயம் . இது கூட தெரியாம நீங்க எப்படி போலீசானிங்க . வேணும்னே இத செஞ்ச மாதிரி இருக்கு . நான் உங்க மேல கேஸ் குடுக்கறேன் . சும்மா விட மாட்டேன் .” அவரை வசை பாடியவன் தன் செல்போனை எடுத்து யாருக்கோ அழுத்த ,
அந்த இன்ஸ்பெக்டர் சற்று பயந்தார் . இவனிடம் இத்தனை புத்திசாலித் தனத்தை அவர் எதிர்ப்பார்க்கவில்லை . அத்தோடு அவன் எங்கு வேலை செய்கிறான் , எத்தனை தூரம் அவனுக்கு செல்வாக்கு இருக்கும் என சற்றும் சிந்திக்காமல் பேசிவிட்டார் .
“ விடுப்பா . போன உயிர் திரும்பியா வரப்போகுது . எதுக்கு இந்த சமயத்துல பிரச்சனை பண்ணிட்டு இருக்க . போய் உங்க அப்பாவ பாரு . அவருக்கு செய்ய வேண்டிய கடமையச் செய் ” கணீர் குரலில் பின்னால் இருந்து ஒருவர் பேசினார் .
திரும்பிப்பார்த்தவன் , அவரைக் கண்டு ஒரு நொடி திடுக்கிட்டான் . சாமியார் போன்ற தோற்றம் , நீண்ட தாடி கையில் ஒரு தடி , சட்டையில்லாமல் ஒரு காவி வேட்டி மட்டும் அணிந்திருந்தார் . நெற்றி மொத்தமும் குங்குமத்தால் நிரப்பி இருந்தார் . எப்படியும் ஒரு அறுபது வயது இருக்கும் . கண்களில் மட்டும் அத்தனை தெளிவு . ஆனால் அவரை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு . சிறு வயதில் அவரை எங்கோ பார்த்திருக்கிறான் .
இவரைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் , “ போஸ்ட்மார்ட்டம் முடிந்தது ” என்று ஒன்றுவன் வந்து சொல்ல , தந்தையைப் பார்க்க ஓடினான் .
அந்த சாமியாரும் அங்கிருந்து சென்றிருந்தார் .
வெங்கடேசனின் உடலைக் கண்டதும் கதறினான் விஜய் . “ அப்பா … அப்பா ” என்று உள்ளத்தில் இருந்து அவரைக் கூப்பிட்டான் . அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டான் அரவிந்த் .
ரிப்போர்ட்டில் அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்லி இருந்தனர் .
அரவிந்த் கூட இருந்து அணைத்துக் காரியங்களையும் செய்ய உதவினான் . கூடபிறந்தவன் போல உதவினான் . அனந்தாச்சாரி இல்லையென்றால் அவனை கடித்துக் குதறிவிடுவார் .
அக்கம் பத்தத்தினர் அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்ல வீட்டில் தனிமையில் அமர்ந்திருந்தான் . அரவிந்த் அவனுக்காக உணவு எடுத்து வந்தான் .
“ சாப்பிடுங்க அண்ணா ” என்றான் .
ஒருநாள் முழுவது சாப்பிடாமல் இருந்ததால் சற்று சோர்ந்து விட்டான் . இப்போது இந்த உணவைத் தின்ற பிறகு சற்று தெம்பு வந்தது .
அனந்தாச்சாரி அரவிந்திடம் கூறி சொல்லச் சொன்ன விஷயங்களை மெதுவாகச் சொன்னான் .
“ உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் . நீங்க கோவப் படாம கேளுங்க ” என ஆரம்பித்தான் .
“ உங்க அப்பா ஒரு கேஸ் எடுத்து நடத்துனாருல , அதுல ஆரம்பத்துல அரச குடும்பத்துக்கு சாதகமாத் தான் பேச ஆரம்பிச்சாரு . ஆனா போக போக அவருக்கு அரச குடும்பம் பொய் சொல்றதா தோணிச்சு . அவங்க கிட்ட உண்மைய சொல்லச் சொன்னாரு . அவங்க எதுவும் சொல்லல . ஆனா அப்பாவே சில விஷயங்கள கண்டுபிடிச்சாரு . அது பிடிக்காம … . அது பிடிக்காம அவங்க அப்பாவ மிரட்டினாங்க .
அப்பா கோர்ட்ல அவங்களுக்கு எதிரா பேசப் போறேன்னு சொன்னபிறகு … ” எச்சல் விழுங்கினான் .
“ சொல்லு என்ன ஆச்சு…” vijaya அவனை உலுக்க ,
“ அப்பறம் தான் அவர் இறந்துட்டாரு .”
“ வாட் ,….??” அதிர்ந்தான் . “ அப்பாவ கொலை பண்ணிட்டாங்கன்னு சொல்றியா… ??” கண்கள் சிவந்தது .
“ அது எனக்குத் தெரியாதுண்ணா . ஆனா அதுக்கு அப்பறம் தான் அவர் இறந்தாரு . உங்க கிட்ட சொல்லணும் னு தோனுச்சு .. அதான் சொன்னேன் . நான் வரேன் .” அங்கிருந்து கிளம்ப நினைக்க ,
“ ஒரு நிமிஷம் , ஹாஸ்பிட்டல ஒரு சாமியார் வந்தாரே .. அவர எங்கயோ பார்த்திருக்கேன் .. அவர் யாரு ..?”
“ என்னது சாமியாரா ..? எப்ப வந்தாரு ..?” அரவிந்த் புரியாமல் பார்த்தான் .
“ அப்பாவோட பாடி வாங்கறதுக்கு முன்ன ஒருத்தர் வந்தாரே ..?”
“ அப்படி யாரும் வரலைய .. உங்களுக்கு மட்டும் தெரியுதா… ?” ஒரு பயத்துடன் அவனைப் பார்க்க ..
விஜய் யோசித்தான் .. “ சரி நீ கிளம்பு ” அவனுக்குக் குழம்பியது . ‘ நான் பார்த்தேனே !’ தலையைப் பிடித்துக் கொண்டான் .
விஜய்க்கு அன்றே அப்பாவிற்கு என்ன நடந்தது என தெரியாவிட்டால் மண்டை உண்டைந்துவிடும் போல ஆனது .
அவரது அறைக்குச் சென்றான் . அவரது கேஸ் விவரங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான் .
அந்த பேப்பர்களைத் தொட்டதும் அவனுக்குள் கரென்ட் ஷாக் அடித்தது போன்ற உணர்வு . கண்ணை மூடி அங்கிருந்த சேரில் அமர்ந்தான் . மூடிய அவனது கண்களுக்குள் பத்மநாப ஸ்வாமி தெரிந்தார் . அத்தனை பெரிய உருவம் அவன் கண்களுக்குள் தெரிய ஆரம்பித்தது .
அதன் பிறகு இரண்டு பாம்புகள் பின்னப்பட்ட கதவு . இவை மாறி மாறி அவன் கண்களுக்குள் தெரிந்தது . உள்ளிருந்து அவனது கண்களுக்குப் பூட்டுப் போட்டது போல அவனால் கண்களைத் திறக்க முடியவில்லை .
அந்த பாம்புகள் கொண்ட கதவு அவனிடம் பேசுவது போலத் தோன்றியது .
“ உனக்கான தேடல் இங்கிருந்து ஆரம்பம் .
உன் தந்தை சென்ற இடம் வைகுண்டம் ..
அதை நீ காணப் போகும் பேரின்பம் ..
தடை நீக்கிக் கண்டுகொள் பேரண்டம் ..”
இரண்டு பாம்புகளும் சிரித்தது…
கண்கள் திறந்தான் . அவன் கண்ட காட்சிக்கு என்ன அர்த்தம் . ஊருக்கு வந்ததிலிருந்து ஏன் இந்த குழப்பங்கள் .. மர்மங்கள்… புரியாமல் தவித்தான் . தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான் .
‘ எங்கிருந்து ஆரம்பிப்பது… !’ அவன் தலை வலித்தது ,
‘ முதலில் தந்தையின் இறப்பு . அதைத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் ‘ என முடிவு செய்தவன் கேஸ் கட்டை எடுத்தான் . முழுதும் படிக்க ஆரம்பித்தான் .
அவனுக்காக காத்திருந்த அந்த மூன்றாவது நபர் அந்தச் சாமியார் . அவன் வீட்டு வாசலில் அரூபமாய் நின்றிருந்தார்… .
“ விஜய பூபதி … உன்னைக் குழப்ப நான் இருக்கிறேன் . வா வா ,,,” அந்தத் தெருவே அதிரும்படி சிரித்தார் . ஆனால் அது யார் காதிலும் விழவில்லை .