kv-4
4
ஜானவி அழகின் பெட்டகம் , அறிவின் உறைவிடம் , ஒரு ராஜாவின் குணநலன்கள் அவளுக்குத் தப்பாமல் இருந்தது . எதிலும் முதலில் வரவேண்டும் வெற்றி பெறவேண்டும் என நினைத்து அவள் நினைத்ததில்லை . ஆனால் அனைத்தும் அவளைத் தேடி வந்தது .
வகுப்பில் முதல் மாணவியாக வந்தாலும் அதைப் பெரிதாகவே அவள் நினைக்க மாட்டாள் . படித்தது புரிகிறது , புரிந்ததை தேர்வில் எழுதினேன் என்று அலட்டிக் கொள்ளாமல் கூறிவிடுவாள் . கல்லூரியின் இறுதி ஆண்டை இரண்டு மாதம் முன்பு தான் முடித்தாள் . ஆனால் அவளது வயதிற்கும் அறிவிற்கும் சம்மந்தமே இல்லை .
அரண்மனையின் பல முடிவுகளை அவள் தான் எடுப்பாள் . சொல்லப் போனால் தந்தைக்கே பல சமயங்களில் மந்திரியாக இருந்து ஆலோசனை சொல்பவள் .
அவளது தந்தைக்கு பத்து வருடங்கள் கழித்துப் பிறந்த குழந்தை அவள் . அறிவார்ந்த குழந்தை பிறக்க வேண்டும் என்று ஹோமங்கள் செய்த பிறகு பிறந்தவள் அவள் . ஆனால் அறிவு அதிகமாக இருந்தாலும் அது ஆபத்தில் கூட முடியலாம் என்று அப்போது அவர்கள் உணரவில்லை .
அவளுக்கு இதிகாசங்களும் தெரியும் , இந்தக் கால அறிவியலும் தெரியும் . எப்போதும் இரண்டுக்கும் உள்ள தொடர்புகளைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டிருப்பாள் .
பத்மநாப ஸ்வாமியை வேண்டிக் கொண்டவள் தான் நினைத்தை வெகு சீக்கிரம் அடைய வேண்டும் என்று தீவிரமாக இருந்தாள் .
விஜய் அடுத்து வந்த மூன்று நாட்களுக்குள் தன் தந்தையின் காரியத்தை முடித்துவிட்டு வரும் வரை வேறு யாரையும் தொடர்புகொள்ளவில்லை .. ஆனால் அவன் மூளைக்குள் பல விஷயங்களை குறித்து வைத்துக் கொண்டிருந்தான் . சிறு வயது முதல் தந்தைக்கு இருக்கும் தொடர்புகள் , அவரைப் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என பட்டியல் போட்டுக் கொண்டிருந்தான் .
வெங்கடேசன் ஒரு சாது . யாரிடமும் தேவையின்றி வம்பு வைத்துக் கொள்ள மாட்டார் . அவருடைய நெருங்கிய நண்பர் என்றால் , அது அனந்து மட்டுமே . ஆனால் விஜய் காலேஜ் சேரும் பொழுது யாருக்கும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டதாக அவன் தந்தை கூறி இருந்தார் . அதன் பிறகு அவருடன் இப்போது தான் விஜய் பேசினான் .
திடீரென நினைவு வந்தவனாக , அவருடைய செல்ஃபோனை எடுத்துப் பார்த்தான் . நல்லவேளையாக அவர் லாக் கோட் எதுவும் வைத்திருக்கவில்லை .
அதில் இருக்கும் எண்களை வரிசையாகப் பார்த்தவன் , அதில் அனந்து என நம்பர் இருப்பதைக் கவனித்தான் . அவருக்கு அழைக்க வேண்டுமென அவன நினைத்துக் கொண்டு தான் இருந்தான் . மற்றொரு எண் ஜானவி என்று இருக்க அதையும் குறித்துக் கொண்டான் . மற்ற அனைத்தும் அவனுக்கும் தெரிந்த நபர்களாகத் தான் இருந்தது .
அவரது படங்கள் அடங்கிய கேலரியை ஓபன் செய்தான் . அதில் இருட்டில் எடுத்தது போன்ற படங்கள் இரண்டு மூன்று இருக்க அதை ஜூம் செய்து பார்த்தான் .
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க , எழுந்து சென்று திறந்தான் .
“ அண்ணா காரியம் எல்லாம் முடிஞ்சுது . நீங்க ஊருக்கு போகப் போறீங்களா ?” அரவிந்த் அவன் முன்னால் வந்து நின்றான் .
“ வா டா . ரெண்டு வாரம் லீவ் இருக்கு அரவிந்த் . அப்பாவ அப்படி பாத்தா நிலைல உங்கிட்ட சரியா எதுவும் பேச முடியல . நீ இப்ப எங்க வேலை செய்யற ?” அவனிடம் அவன் பேசியே பல ஆண்டுகள் ஆகி இருந்தது .
“ இங்க தான் ஒரு நாட்டு மருந்து கடை வெச்சிருக்கேன் .” பெருமையாகக் கூறினான் .
“ ஆங்… உங்க மாமா இப்ப எங்க இருக்காரு ?” விஷயத்தை ஆரம்பித்தான் .
“ எந்த மாமாவ கேட்கறீங்க ?” கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் .
“ உனக்கு எத்தனை மாமா ?” சந்தேகமாகப் பார்த்தான் .
“ இல்ல .. இங்க நெறைய பேர அப்படி கூப்டறேன் இல்ல .. அதுனால அப்படி கேட்டுட்டேன் .” திரு திருவென விழிக்க , விஜயின் சந்தேகம் அங்கேயே துவங்கி விட்டது .
“ உங்க மாமா அனந்தாச்சாரி பத்தி தான் கேட்டேன் . அப்பா இறந்தப்ப எனக்குப் பேசினார் . ஆனா எங்க இருக்காரு என்ன னு அப்ப கேட்க முடியல . அப்பறமா ஃபோன் பண்ணனும் . ஆனா நீ தான் சொல்லேன் .. அவர் இப்ப எங்க இருக்காருன்னு . அவர் ரொம்ப நாள் முன்னாடி ஊரை விட்டு போன பிறகு அவரை பத்தி யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சேன் . ஆனா என்னோட நம்பர் எல்லாம் தெரிஞ்சு வச்சு போன் பன்னிருகாரே , அப்ப கண்டிப்பா அப்பா கூட காண்டக்ட்ல இருந்திருக்காரு . அதான் கேக்கறேன் .” விஜயின் கேள்விகள் ஆரம்பித்து இருந்ததை அரவிந்தும் உணர்ந்தான் .
“ மாமாக்கு இந்த ஊர்ல இருக்கப் பிடிக்கல போல . என்ன காரணம்னு தெரியல . ஆனா எனக்கு அப்பப்ப பேசுவாரு . இப்ப வள்ளிக்காடுன்னு ஒரு ஊருல இருக்காரு . இங்க இருந்து ஒரு ஆறு மணி நேரம் ஆகும் அங்க போக . அது ஒரு பக்கா கிராமம் . அங்க வைத்தியரா இருக்காரு .”
“ ஓ .. கண்டிப்பா நான் அவர பாக்கணும் . நீயும் என்கூட வா . நாளைக்குப் போகலாமா ?” உடனே முடிவெடுத்தான் .
“ நானுமா ? நீங்க போயிட்டு வாங்க . எனக்கு இங்க வேலை இருக்கு .” அவசரமாக மறுத்தான் .
எதுவும் விஜயின் கண்களில் இருந்து தப்பவில்லை . அவன் திணறுவது , யோசித்துத் தெளிவாகப் பேசுவது என்று அவனை ஆராந்துகொண்டிருந்தான் .
“ ஏன் வரமாட்ட ?.. எனக்கு வழி தெரியாது . நீயும் கூட வா . பேசிட்டே போலாம் .” புன்னகைத்த படியே கூற ,
‘ பேசிகிட்டே போறதா ? இவன் கிட்ட பத்து நிமிஷம் பேசுனால ஒளறிடுவேன் . பேசிக்கிட்டே போனா என் பாடு அவ்ளோ தான் .’ பயந்தான் அரவிந்த் .
“ இல்ல ணா… நீங்க மட்டும் ..” என மறுக்க வந்தவனை
“ நீ வர , அவ்ளோ தான் . சரி நீ போய் ஒரு கார் வாடகைக்கு எடுத்துக்கோ . நாம கார்லயே போகலாம் ” அத்தோடு முடித்தான் .
அர்விந்த் சரி என தலையை மட்டும் ஆட்டினான் .
“ அப்பறம் அப்பாவ அரச குடும்பத்துக் காரங்க மிரட்டுனாங்கன்னு சொன்னல .. யார் மிரட்டுனா ? அத நீ பாத்தியா ?”
‘ இந்தா ஆரம்பிச்சுடாருல… இது எங்க போய் முடியுமோ ..’ மனதில் சலித்துக் கொண்டவன் ,
“ அப்பாவ ஒரு நாள் நான் கோவில்ல பாத்தேன் . அப்ப அவரு அந்த நாகபந்தக் கதவை பாத்துட்டு வந்ததா சொன்னாரு . அதுக்கப்றம் அரச குடும்பம் இதுல ஏதோ மறைக்கறாங்கன்னு சொன்னாரு . உண்மைய சொல்லாம பொய் சொல்ல என்னால முடியாது .. மிரட்டுனா நான் பயந்துடுவேனா ” அப்படீன்னு சொல்லிட்டு வேகமா கிளம்பி போயிட்டாரு .” அதுக்கு அப்பறம் தான் … .” முடிக்கும் முன்னரே ,
“ அப்ப அவர யார் மிரட்டுனான்னு தெரியாது ?” சந்தேகமாக அவன் கேட்க ,
“ சத்தியமா எனக்குத் தெரியாது அண்ணா…” தன் கை மேலேயே கை வைத்துக் கூறினான் .
“ டேய் .. டேய் .. இதுக்கு ஏன் சத்தியம் எல்லாம் பண்ற .. ஜஸ்ட் தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன் . சரி நீ கெளம்பு , காலைல சீக்கிரமே வந்துடு கிளம்பலாம் ” விஜய் அரவிந்தை அனுப்ப , தப்பித்தால் போதும் என ஓடியேவிட்டான் அரவிந்த் .
அரவிந்த் சென்றதும் தன்னுடைய செல்போனை எடுத்தான் . அதில் அனந்துவின் நம்பரை தேடி எடுத்து அவருக்கு அழைத்தான் .
எப்படியும் விஜயிடம் இருந்து ஃபோன் வரும் என எதிர்ப்பார்த்துக் கொண்டு தான் இருந்தார் அனந்து . உடனே எடுத்துப் பேசினார் .
“ சொல்லு ப்பா விஜய் . அப்பா காரியம் எல்லாம் நல்ல படியா ஆச்சா ?” எடுத்ததும் கரிசனமாக விசாரித்தார் அனந்து .
“ ஆங்… ஆச்சு . அங்கிள் நீங்க அப்பா கூட காண்டாக்ட்ல இருந்திருக்கீங்கன்னு இப்ப தான் எனக்குத் தெரியும் . அப்பாக்கு என்ன ஆச்சு சொல்லுங்க . அரவிந்த் யாரோ அவர மிரட்டுனாங்கன்னு சொல்றான் , உங்களுக்குக் கண்டிப்பா எதாவது தெரிஞ்சிருக்கும் . சொல்லுங்க அங்கிள்” பட்டெனக் கேட்டுவிட , நேரடிக் கேள்விகளை எதிர்ப்பாராத அனந்து சற்று தடுமாறினார் .
“ எனக்கு அங்க நடந்தது எப்படித் தெரியும் பா . நானும் நியூஸ் பாத்து தான் விஷயம் தெரிஞ்சுகிட்டேன் .” எதையோ மறைப்பது அவரது பேச்சில் இருந்து தெரிந்தது .
“ இல்ல அங்கிள் .. என்கிட்ட மறைக்காதீங்க .. இத்தனை நாள் நீங்க இங்க இல்லாம ஏன் வேற ஒரு ஊர்ல இருக்கீங்க .. ஒரு நாள் நீங்களும் அப்பாவும் ரொம்ப தீவிரமா பேசிட்டு இருந்தீங்க . அதுக்கு அப்பறம் நீங்க ஊர விட்டு போய்டீங்க . என்ன நடக்குது இங்க . நான் இங்க நம்புறதுக்கு ஒருத்தர் கூட இல்ல அங்கிள் . நீங்க அப்பாவோட ப்ரென்ட் . உங்களையும் நான் அவர் ஸ்தானத்துல தான் பாக்கறேன் . சொல்லுங்க ப்ளீஸ் . எங்க அப்பாவ யாரவது வேணும்னே கொலை செஞ்சிருந்தா கண்டிப்பா நான் அவங்கள சும்மா விடமாட்டேன் .” கர்ஜித்தான் .
இதற்கு மேல் அவனிடம் மறைத்துப் பலனில்லை என்று முடிவு செய்தவராக , “ அதான் நாளைக்கு என்னைப் பார்க்க வர்றதா முடிவு செஞ்சிருக்கியே .. வா .. ஒரு வழி கிடைக்கும் . நானும் உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லி ஆகணும் . ஆனா ரெண்டு வாரம் லீவ் பத்தாது , போன் செஞ்சு ஒரு மாசம் ஆக்கு . அதுக்கு பிறகு பாத்துக்கலாம் . வரும்போது உன் அப்பாவோட உடமைகள் எதாவது ரெண்டு கொண்டு வா . அவரோட சட்டை , அவர் உபயோகப் படுத்துன சில வஸ்துக்கள் . சரியா ?” கண்ணை மூடி அவனைச் சுற்றி நடப்பவைகளை க்ரஹித்துக் கூறினார் .
“ சரி அங்கிள் ” . விஜய் க்கு அவர் சொன்னது எதுவும் ஆச்சரியத்தைத் தரவில்லை . இது போன்ற அவரது சித்து வேலைகளை அவன் சிறு வயதிலேயே கண்டிருக்கிறான் . அவரிடம் ஒரு தெய்வ சக்தி உள்ளதை அவன் அறிந்திருக்கிறான் .
மீண்டும் அவன் வெங்கடேசனின் போனை எடுத்து அந்த போட்டோக்களைப் பார்க்க , வெறும் இருட்டில் எதையோ கிளிக் செய்திருப்பது தெரிந்தது . அது என்னவென்று உற்று நோக்க , எதுவும் அவனால் பார்க்க முடியவில்லை . அதையும் தன் பையில் வைத்துக் கொண்டான் . அவருடைய சட்டை பின் அவர் பேனா என கண்ணில் பட்ட சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டான் .
அவர் எதாவது குறிப்பாவது வைத்திருக்கிறாரா அந்த அரச குடும்பத்தின் ரகசியம் பற்றி என வீடு முழுவதும் தேடியும் அவன் கண்ணில் எதுவும் படவில்லை . அந்தக் கோவிலுக்கே சென்று பார்க்கலாமா என்று யோசிக்க , பத்து நாட்களுக்கு அவன் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று கூறிவிட்டனர் .
வேறு வழியின்றி வீட்டிலேயே இருக்க , அரவிந்தின் கடைக்குச் சென்று பார்க்கலாம் என்று கிளம்பினான் . அவன் கடை கோவில் உள்ள வீதியில் தான் இருந்தது . கால் நடையாக நந்து சென்றவனை வழியில் கண்டவர்கள் விசாரிக்க ஒரு தலையசைப்பையே பதிலாகத் தந்துவிட்டு சென்றான் .
அரவிந்தின் கடை வாசலில் விஜய் வந்து நிற்க , அவனை வரவேற்றான் .
“ என்ன ணா .. எதாவது வேணுமா . போன் செஞ்சிருந்தா வந்திருப்பேனே ..” அவன் எதற்கு இங்கு வந்தான் எண்பது போல இருந்தது அவன் பேச்சு .
“ சும்மா தான் வந்தேன் . நாளைக்கு ஊருக்கு போக கார் ரெடி பண்ணிட்டியா ?” விஜய் கேட்க
அக்கம் பக்கம் பார்த்து அவனும் , “ ம்ம் சொல்லிட்டேன் ” என பொதுவாகக் கூறி வைத்தான் . அங்கே சுவருக்குக் கூட காது இருக்கும் என்பதை அறிந்தவன் அரவிந்த் .
அவன் பயந்தது போல , அவன் கடைக்கு வந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் ஓடிச் சென்று கிரிஷ்ணமாச்சாரியிடம் ஒருவன் சொல்ல ,
“ ஊருக்கு போறானா ? எந்த ஊருக்கு ? அவன் இனிமே தோண்ட ஆரம்பிச்சுடுவான்னு நினச்சேன் .” துச்சமாக நினைத்து சிரித்தார் .
உடனே ஜானவிக்கு அழைத்து அவர் சொல்ல ,
“ என்னமோ அவன் தான் உலகத்தையே தல கீழா மாத்தப்போறதா சொன்னீங்க . அதுக்குள்ள ஊருக்கு போறானா .. நம்ப முடியலையே .. ஒழுங்கா கேட்டீங்களா ?” நம்பாமல் கேட்டாள் ஜானவி .
“ என் ஆளு தான் அர்விந்த் கடைக்கு அவன் வந்ததையும் ஊருக்கு போக கார் கேட்டதையும் சொன்னான் . ஆனா எனக்கும் சந்தேகமா தான் இருக்கு . எதுக்கும் நான் சரியா விசாரிக்க சொல்றேன் .” என்றவர் மீண்டும் அந்த ஆளை அனுப்ப ,
அதற்குள் விஜய் அங்கிருந்து சென்றிருந்தான் . அவன் வேலைக்கு ஆக மாட்டான் என்று அவரே இறங்கினார் .
கிருஷ்ணமாச்சாரி அவன் மூன்று நாள் காரியம் முடிக்கும் வரை பொறுமை காத்தார் . இன்று அவர் வேலையைத் துவங்கினார் . மீண்டும் அரூபமாக அவனைச் சுற்ற , அவன் யாருடனோ போன் பேசிக் கொண்டிருந்தான் .
அவன் அவனுடைய மேல் அதிகாரியிடம் பேசினான் .
“ இன்னும் எனக்கு ஒரு மாசம் லீவ் வேணும் சார் . இது தவிர்க்க முடியாத ஒன்று .” என அவன் கூற ,
மறுபக்கம் பதில் வந்ததற்கு , “ ரொம்ப தேங்க்ஸ் சார் . நான் என்னோட லேப்டாப்பில் பார்த்து கூட டீடைல்ஸ் அனுப்பறேன் . நான் போற இடம் வள்ளிக்காடுன்னு ஒரு கிராமம் அங்க நெட் கிடைக்கறது கஷ்டம் . நான் வந்ததும் உங்களுக்கு மெயில் பண்றேன் . நன்றி .” என இணைப்பைத் துண்டித்தான் .
கிருஷ்ணமாச்சாரி அவன் ஒரு மாதம் லீவ் கேட்டதை நினைத்து அதிர , அவன் இப்போது செல்லவிருக்கும் இடத்தையும் அறிந்துகொண்டதில் இது எங்கு போய் முடியும் என்பதையும் உணர்ந்தார் .
உடனே ஜானவிக்கு அழைத்து விஷயத்தைக் கூற , அவள்
“ அவன் அங்க போகாம இருக்க என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுங்க . உங்க தம்பி நிச்சயம் அவன் பக்கம் தான் இருப்பாரு . அவர பாத்து அவன் விஷயத்தை தெரிஞ்சுகிட்டா நேரா என்கிட்ட தான் அவனோட அடுத்த மூவ் இருக்கும் . அது நடக்கக் கூடாது .” விஜயை தடுக்க முயற்சி செய்தாள் .
ஆனால் விதி அவள் பக்கம் நிற்க மறுத்தது . விஜயின் செயல்கள் மட்டும் அல்ல , அவனுடன் உண்டாகப் போகும் பந்தமும் அவளால் தடுக்க முடியாத ஒன்று என்பதை அவள் உணர வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது .
ஆனால் கிருஷ்ணமாச்சாரி வேறு நினைத்தார் .
‘ அவன் ஊருக்கு போறத மட்டுமில்ல , உங்க விதிய மாத்த தான் நான் போறாடறேன் ,’ என தனி திட்டம் ஒன்றை வகுத்தார் .
அனந்தாச்சாரி விட்டுப் போன அவரது சக்திகளை மீண்டும் பெற , யாரும் செல்ல அஞ்சும் அந்தக் காட்டுக்கு ஊரடங்கிய பின்னர் சென்று கொண்டிருந்தார் .