LNCrawler

kv-5

Kv — www.smtamilnovels.com · All chapters

kv-5

5

அப்பண்ணா அன்று ஆனந்துவிற்கு மருந்து அரைக்க உதவிக் கொண்டிருந்தான் . ஆனால் அப்பண்ணாவிற்கு நன்றாகத் தெரிந்தது அவனுடைய குரு அன்று வேறு சிந்தனையில் இருக்கிறார் என்று .

நீண்ட நேரம் பொறுத்துப் பார்த்தும் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை . மருந்தை அரைத்துவிட்டு அவரிடம் வந்தான் .

“ எதாவது மருந்து குடுத்துவிட மறந்துட்டீங்களா ஐயா ?” காதை சொரிந்த படி அவரின் முன் நின்றான் .

நிமிர்ந்து அவனைப் பார்த்தவர் , “ இல்லையே ஏன் ?” யோசனையாகக் கேட்டார் .

“ காலையில் இருந்து ஒரு மாதிரி சிந்தனையில் இருக்கீங்க . அதனால கேக்கறேன் .”

“ இல்லபா . நாளைக்கு என் நண்பனோட மகன் இங்க வரான் . அவனுக்கு நான் உதவனும் . அது எனக்கு இருக்கற கடமை . என் நண்பன் எனக்காக நிறையா செஞ்சிருக்கான் . அவனுக்காக அவன் மகனுக்கு நான் திருப்பி செய்யனும் .” சிந்தனை வயப்பட்டார் .

“ நான் எதாவது உங்களுக்கு உதவ முடியும்னா சொல்லுங்க . கண்டிப்பா செய்யறேன் .” குருவின் மேல் உள்ள மரியாதையால் கேட்டான் .

“ ஒரு பத்து நாளைக்கு இந்த வேலை எல்லாம் நீயே பாத்துக்கோ . யார் யாருக்கு மருந்து குடுக்கணுமோ நீயே குடு . எல்லாம் இங்க தயாரா தான் இருக்கு . ரொம்ப முக்கியமான விஷயம் இல்லனா என்னைத் தொல்லை செய்யாதே . அவன் ஊருக்கு கிளம்புன பிறகு நான் இதுல கவனம் செலுத்தறேன் .” அவனிடம் பொறுப்பைக் கொடுத்தார் .

“ கண்டிப்பா செய்யறேங்க . இது கூட நான் பண்ண மாட்டேனா ..” அப்பண்ணா சம்மதித்தான் .

ஒரு வேலை முடிந்தது என்று அனந்து நினைக்க , இனி தான் உனக்கு வேலை தலைக்கு மேல் ஏற்றப் போகிறேன் என்று விதி நினைத்தது .

“ நான் இன்னிக்கு ராத்திரி காட்டுகுள்ள போகணும் . எனக்கு சில பொருட்கள் மட்டும் வாங்கிட்டு வந்து தந்துட்டு நீ கெளம்பு அப்பண்ணா .” என்றார் .

அவனும் மறுபேச்சின்றி ஒத்துக்கொண்டான் . அவர் காட்டுக்குள் போவது அவனுக்குப் புதிதல்ல . அவர் மட்டுமே அதக் காட்டுக்கு பயமின்றி சென்று வருவார் .

அவன் காரணம் கேட்டதில்லை . ஆனால் அவர் தன்னுடைய தெய்வத்தை அங்கு தான் காண முடியும் என்பார் .

அனந்து கேட்டபடி அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டு , “ ஐயா என்னோட சைக்கிள வேணும்னா விட்டுட்டு போகட்டுமா ? உங்களுக்குத் தேவைப்படுமா ?” அக்கறையாக் கேட்க ,

“ இல்ல அப்பண்ணா . நான் நடந்தே போய்டுவேன் . நீ எடுத்துட்டுப் போ ” என்றுவிட்டார் .

அவனும் சென்றுவிட , அவன் வாங்கி வந்த பொருட்களை ஒரு பையில் போட்டுக் கொண்டு , ஒரு தூக்கில் பழைய சாதமும் , பச்சை மிளகாயும் சிறு வெங்காயமும் எடுத்துக் கொண்டார் . அவருடைய தோட்டத்தில் வைத்திருந்த துளசி செடியில் இருந்து சில இளைகைப் பறித்துக் கொண்டார் . மாலை ஆறுமணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினார் .

இரு கைகளிலும் பையை எடுத்துக் கொண்டு நடந்தார் . ஊரில் ஓரளவு ஜன நடமாட்டம் குறைந்திருந்தது . அதுவும் காட்டுப் பாக்கம் நிச்சயம் யாரும் வரமாட்டார்கள் .

விறுவிறுவென நடந்தவர் இருபது நிமிடத்தில் ஊர் எல்லையில் இருந்தார் . மனதிற்குள் பத்மநாபனை வேண்டிக்கொண்டு காட்டிற்குள் அடி எடுத்து வைத்தார் .

சிறிது தூரம் நடக்க ஆரம்பித்த போதே அவருக்குள் குளிர் பரவ ஆரம்பித்தது . காடு கும் இருட்டாக இருக்க , அப்பண்ணா கொடுத்த பொருட்களில் ஒரு சீமெண்ணெய் விளக்கும் இருந்தது . அதை ஏற்றிக் கொண்டார் .

அவர் நடக்க நடக்க கூடவே ஒருவர் நடந்து வருவது போன்று உணர்ந்தார் . போன முறை பூஜை செய்த இடத்திற்கே இம்முறையும் சென்றார் . பொருட்களை அழகாக ஒரு வாழை இலையில் வரிசைப் படுத்தி வைத்தார் . பக்கத்தில் பழைய சோற்றையும் , தொட்டுக்கொள்ள மிளகாயும் சிறு வெங்காயமும் வைத்தவர் ஒரு சிறு தீபத்தையும் ஏற்றி அதற்கு முன் அமர்ந்தார் .

முதலில் அவரது குல தெய்வத்தை வேண்டியவர் , பின் கண்ணை மூடி தான் தனியே விட்டு வந்த பத்மநாபனை கண்ணுள் கொண்டு வர முயற்சித்தார் .

நீண்ட பதினெட்டு அடியில் படுத்துக் கொண்டிருந்த பெருமாள் கண்களுக்குள் தெரிய ஆரம்பித்தார் . உடலெங்கும் புல்லரித்தது .

“ உன்னை விட்டு வந்ததில் இருந்து இந்தக் காட்டில் தான் மீண்டும் உன்னை காண வரம் கிடைத்தது . வா , வந்து சாப்பிடு .” கையில் இருந்த துளசிய அற்பனித்து உரிமையாக அழைத்தார் .

அழைத்துக் கொண்டே இருந்தார் . ஒரு மணி நேரம் சென்ற பிறகு , கழுகு சத்தம் கேட்டது . அதன் பின் காலடி சத்தம் கேட்டது . பக்கத்தில் ஒருவர் அமர்ந்து மூச்சு விடும் உணர்வு ஏற்பட ஆரம்பித்தது .

அனந்துவிற்கு அந்த வெட்டவெளியில் வியர்த்துக் கொட்டியது . உடலெங்கும் நடுக்கம் .

என்ன ஆனாலும் கண்ணை மட்டும் அவர் திறக்காமல் இருந்தார் .

“ பழைய சோறும் சின்ன வெங்காயமும் கூடவே மிளகாயும் உனக்கு விருப்பம்னு எனக்குத் தெரியும் .” அனந்து சொல்ல , தூக்கில் இருந்த பழைய சோற்றை உறிஞ்சும் சத்தம் தெளிவாகக் கேட்டது .

சிரித்த அனந்து , “ ரொம்ப நாள் ஆச்சு நான் ஆன்மா கிட்ட பேசி , நாளைக்கு நான் நண்பனோட பேசணும் . என்னுடைய ஆழ் மனசுல பொதிஞ்சு கிடக்கற என்னோட சக்திகள திரும்பவும் கொண்டு வரணும் . அதுக்கு எனக்கு தைரியம் வேணும் . அதை மட்டும் எனக்கு கூடவே இருந்து நீ தான் குடுக்கணும் .” கண்களில் கண்ணீருடன் குலுங்கியபடி வாய்விட்டு பேசிக் கொண்டிருந்தார் .

சிறிது நேரம் மூச்சுவிடும் சத்தம் மட்டும் கேட்க , அது சம்மதமாக எடுத்துக் கொண்டு அனந்து வணங்கினார் . மீண்டும் கழுகின் சத்தம் கேட்க , மெல்ல அவரது கண்களைத் திறந்தார் .

அற்பனித்த துளசி அங்கு இல்லை . ‘ நிச்சயம் என் பத்மநாபன் அதை ஏற்றுக் கொண்டான்’ , பூரிப்பு அவருக்குள் ஏற்பட நள்ளிரவைக் கடந்த அந்த நேரத்தில் எழுந்து வீட்டிற்கு நடந்தார் .

எல்லோருக்கும் அந்தக் காட்டில் கேட்கும் பேச்சு சத்தம் அவர் காதுகளையும் துளைத்தது .

அனைத்தையும் கேட்டபடி நடந்து கொண்டிருக்க , அவருக்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டது .

அதைக் கவனமாகக் கேட்டுத் தலையசைத்தார் .

“ விதி யாரை விட்டு வைக்கும் . நானும் அதனுடைய கருவியே !” சிரித்து விட்டு வீடு வந்து சேர்ந்தார் .

அதிகாலை எழுந்து குளித்த விஜய் , தன் பையை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான் . தந்தையை நினைத்து இரண்டு நிமிடம் தயங்கியவன் ,

‘ உங்களுக்கு என்ன ஆச்சு , யார் இதுக்குப் பின்னாடி இருக்காங்க இதையெல்லாம் நான் கண்டுபிடிக்காம இங்கிருந்து போக மாட்டேன் அப்பா ‘ அவருடைய படத்தின் முன் நின்று பேசியவன் , தெளிந்த முகத்துடன் , அரவிந்துக்கு போன் செய்தான் .

இவன் பேச ஆரம்பிக்கும் முன்னமே , “ அண்ணா , வந்துட்டே இருக்கேன் . நீங்க வீட்டை பூட்டிட்டு வெளிய வாங்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன் .” பேசி முடித்தான் .

‘ ஓகே ‘ என விரைந்தவன் தந்தையின் படத்தின் முன்பு ஒரு விளக்கை மட்டும் எரியவிட்டு அங்கிருந்து கிளம்பினான் .

கிருஷ்ணமாச்சாரி ஜானவியின் சொல்படி அவனைப் போகவிடாமல் தடுக்க முயற்சிகள் செய்வதாக அவளிடம் கூறினார் .

ஆனால் ஏனோ அவனைப் போகவிட்டு வேடிக்கை பார்த்தார் . ‘ புலிய கூண்டுக்குள்ள விட்டுட்டு வெளிய நின்னு அதை மிரட்டுறது வீரமா ? நான் நேருக்கு நேர் சந்திக்கிற அளவு துணிவு இருக்கறவன் . புலி வெளிய வரட்டும் . அப்பறம் நான் யாருன்னு காட்றேன் .’ அந்த அதிகாலை வேளையில் மயானத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தார் .

முதல் நாள் இரவு முழுதும் அவர் தேடி எடுத்த இரண்டு மண்டை ஓடுகளை தன்னுடைய கருப்பு துணியில் செய்த பையில் போட்டுக் கொண்டு நடந்தார் . தனது சக்திகளை அவர் மேலும் ஏற்றிக் கொண்டே போக அவர் கையாண்ட யுக்தி .

சூரியன் வரும் முன்பு அதை எடுத்துச் சென்றவர் , அதை ஒரு குட்டையில் வைத்துக் கழுவினார் . நன்றாக துடைத்து அதை மீண்டும் தனித்தனி துணியில் சுற்றி பையில் வைத்துக் கொண்டு தன் இருப்பிடம் சென்றார் .

விஜய் காரில் தன் உடமைகளை வைத்தவன் , அரவிந்தை பக்கவாட்டில் உட்காரச் சொல்லிவிட்டு அவனே வண்டியை எடுத்தான் .

“ மணி இப்ப நாலு . பத்து மணிக்கெல்லாம் அங்க போய்டலாம் .” என்றான் அர்விந்த் .

“ அதுக்கு முன்னாடியே போய்டலாம் .” இறுக்கமாக இருந்த தன் முகத்தை அவனிடம் காட்டாமல் இருக்க முயன்றான் . வண்டியை எடுத்த சில நிமிடத்தில் ஊரைக் கடந்தான் . அப்போது அவன் கண்ணில் மீண்டும் கிருஷ்ணமாச்சாரி பட்டார் .

“ அர்விந்த் அங்க பாரு . அவர் தான் நான் அன்னிக்கு பாத்தேன் . அந்த சாமியார் என வண்டியை மெதுவாக செலுத்தியபடி அவனிடம் காட்ட , அர்விந்த் உடனே குனிந்து கொண்டு தான் இருப்பதை மறைத்துக் கொண்டான் .

“ அண்ணா , சீக்கிரம் போங்க . அவர் கண்ணுல நான் படக் கூடாது .” பயந்தபடி அவன் கூற ,

கிருஷ்ணமாச்சாரியும் அதே சமயம் விஜய் வண்டியில் செல்வதைப் பார்த்தார் .

“ ஏன் ? யார் அவரு .. அன்னிக்கு உன் கண்ணுல படல . இன்னிக்கு தெரியறாரா ?”

“ அவரு நினச்சா எப்படி வேணா வருவாரு . ரொம்ப டேஞ்சரான ஆளு . பாருங்க சுடுகாட்டுலேந்து வெளிய போறாரு . எவன் மண்டைய உருட்டப் போறாரோ . சீக்கிரம் போங்க ணா ..” விட்டால் அழுதுவிடுவான் போல .

சற்று யோசித்தவன் , வேகமாக வண்டியைச் செலுத்தினான் .

அதன் பிறகு ஒரு பத்து நிமிடம் அப்படியே இருந்தவன் , பின் மெல்ல தலையைத் தூக்கி நிமிரிந்து அமர்ந்தான் . ஊரைத் தாடி வெகு தூரம் வந்துவிட்டோம் என்பதை உறுதி செய்த பிறகு தான் அவனுக்கு மூச்சே வந்தது .

காரை ஒரு ஓரமாக நிறுத்திய விஜய் , “ என்ன பிரச்சனையை , அவர் யாருன்னு முதல்ல சொல்லு . அன்னைக்கு உன் கண்ணுக்குத் தெரியல , என் கண்ணுக்குத் தெரிஞ்சாரு . ஆனா இப்ப அவர பாத்து நீ ஒளியற . எனக்கு நீ இப்ப உண்மைய சொல்லியே ஆகணும் .” முறைத்துக் கொண்டே கேட்க ,

“ உண்மைய சொல்லனும்னா , அவர் ஒரு பயங்கரமான மந்திரவாதி . அவருக்கு நின்னசது கிடைக்க எது வேணும்னாலும் செய்வாரு . சொல்லப் போனா அவரு எங்க தாத்தாவையே பலி வாங்கினவரு .” சொல்லும்போதே அவனுக்குத் தொண்டையை அடைத்தது .

“ உங்க தாத்தாவ ஏன் அவரு பலி வாங்கணும் . உனக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் ?” புருவத்தை நெருக்கி விஜய் பார்க்க ,

“ நீ வண்டி ஒட்டிட்டே கேளுங்க சொல்றேன் ” என்றவனை நம்பி வண்டியை எடுத்தான் விஜய் .

“ அவரும் எனக்கு ஒரு மாமா . சொந்த தாய் மாமா . பேரு கிருஷ்ணமாச்சாரி . இப்ப பார்க்க போறோமே அனந்து மாமா , அவரும் இவரும் ரெட்டைப் பிறவிங்க . இவங்களுக்கு அப்பறம் பொறந்தவங்க தான் என் அம்மா .

எங்க அம்மாக்கு ரெண்டு அண்ணன்களையும் ரொம்ப பிடிக்கும் . எங்க தாத்தா ஒரு ஜோசியர் . அதுமட்டும் இல்லாம , ஊர்ல இருக்கற எல்லாருக்கும் மந்திரிக்கறது , ஹோமம் செஞ்சு வைக்கறது , இப்படி நிறைய விஷயம் பண்ணிட்டு இருந்தாரு . ரெண்டு பசங்களுக்கும் முறையா தனக்குத் தெரிஞ்ச விஷயங்கள் அனைத்தும் சொல்லிக் கொடுத்தாரு .

எல்லாமே நல்ல விதமா தான் போயிட்டு இருந்தது . அப்ப ஒரு நாள் எங்க தாத்தா ரெண்டு மகன்களையும் தன்னை விட அதிகமா இந்த ஜோசியம் அதுக்கும் மேல இருக்கற பல விஷயங்கள் கத்துக்க அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கிட்ட அனுப்பினார் .

ஆனா அங்க போறதுக்கு முன்னாடி ரெண்டு பேரையும் கூப்பிட்டு ஆசீர்வாதம் செஞ்சாரு . உங்களுக்கு உங்க மனம் போல எல்லாம் நடக்கும்னு .

அவரோட ஆசீர்வாதம் நல்லாவே பலிச்சது . இவருக்கு மனம் முழுசும் சுயநல எண்ணம் தான் . தனக்கு மட்டுமே எல்லாம் கிடைக்கணும்னு நினச்சாரு . அவருக்கு அனந்து மாமா தன்னை விட பெரியாள் ஆகிடக் கூடாதுன்னு எண்ணம் இருந்துச்சு .

அவங்க ரெண்டு பேரையும் கேதர்நாத் அனுப்பி வெச்சாரு . அதுவும் பயங்கர குளிர் இருக்கும் காலத்துல .

அவங்க ரெண்டு பேரும் தாத்தா சொன்னவரை தேடிக் கண்டுபிடிச்சு போனப்ப அவங்க இருந்த இடம் ஒரு சிறு குடிசை . இவங்களுக்கு பக்கத்துல ஒரு சின்ன குடிசை ஏற்பாடு பண்ணிக் குடுத்தாரு .

அவரும் ரெண்டு பேருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க , கிரிஷ்ணனுக்கு ஏனோ அது அவ்வளவாக பிடிக்கவில்லை . எப்போதும் அடுத்தவர் நலனே முக்கியம் னு ஏடுகளையும் பாடங்களையும் சொல்ல வேண்டாவெறுப்பா கத்துகிட்டாரு . ஆனா அனந்து எல்லாத்தையும் முறையா கத்துக்க பாத்தாரு .

“ இதெல்லாம் எனக்குத் தெரியும் , வேற எதாவது புதுசா சொல்லித் தாங்க ” என்று கிருஷ்ணன் அலட்சியத்தைக் காட்ட , சொல்லிகொடுப்பவருக்கு புரிந்தது , இவன் லாயக்கு இல்லை என .

அதனால் தான் முதலில் தெரிந்தவற்றையே போதனை செய்தார் .

“ பொறுமையா இருப்பா . அடுத்தது எல்லாம் மிக முக்கியமான பாடங்கள் .” என அவர் முடிக்கும் முன்னே ,

“ அப்ப நான் அடுத்த பாடம் சொல்லித் தரும் போது வரேன் ” என எழுந்து சென்றுவிட்டார் .

அந்த ஊரின் அழகு அவரை அழைக்க , அதைக் காணச் சென்றார் .

“ உன் உடன்பிறந்தவனுக்கு போரும்மை இல்லை . அடுத்து நான் சொல்லித் தரப்போவது இந்த உலகத்தையே உன் வசப்படுத்தும் பாடங்கள் . நம்ம உடலில் இருக்கும் அனைத்து உயிர் நாடிகளையும் இணைக்கும் ஏழு சக்கரங்களை கட்டிப்போடும் யோகத்தை உனக்கு மட்டும் சொல்லித் தருகிறேன் . அவனுக்கு இனி நான் குரு இல்லை என்றார் .”

“ அவனுக்கு நல்ல எண்ணம் நான் புகட்டறேன் . அவனுக்கும்…” என சொல்லவந்த அனந்துவை கை காட்டி நிறுத்தினார் .

“ அவனுக்கு இப்ப வேற குரு கிடைச்சாச்சு . நீ அவனுக்கு எதுவும் சொல்லித் தர வேண்டாம் .” என்றார் .

அப்போது தான் கிருஷ்ணன் சென்ற மலைப் பாதையின் ஒரு குகையில் ஒரு அகோரியைக் கண்டான் .

அவருக்கு முன் சில மண்டையோடுகள் இருக்க அங்கே அந்தரத்தில் ஒரு நெருப்பு உருண்டை சுழன்று கொண்டிருந்தது . அது அவர் சொன்னபடியெல்லாம் ஆடியது .

அதைக் கண்டு அந்த வித்தையைக் கற்க ஆசைப் பட்டார் கிருஷ்ணன் .