LNCrawler

kv-6

Kv — www.smtamilnovels.com · All chapters

kv-6

6

கிருஷ்ணமாச்சாரி அந்த அகோரியின் சித்து விளையாட்டில் தன் மனத்தை பறிகொடுத்தார் .

“ இப்படிப் பட்ட வித்தைகளை அந்த கிழவன் சொல்லிதருவானா … இல்ல இவர் கிட்ட எப்படியாவது இதை நாம கத்துகிட்டு அங்க போய் காட்டனும் . நான் தான் பெரியாளுன்னு நிரூபிக்கணும் .” அகோரி அமர்ந்திருந்த அந்த சிறு குகை போன்ற அமைப்பை நோக்கிச் சென்றார் .

உக்கிரமாக ஏதோ மந்திரங்களைச் சொன்னவர் , பறந்து கொண்டிருந்த நெருப்பு உருண்டைகளைச் சுற்றி அந்த மண்டை ஓடுகளையும் சுழல வைக்க பலமாகச் சிரித்துக் கண்விழித்தார் . எதிரே கண்களில் ஆவலுடன் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்து கை காட்டி அழைத்தார் .

“ உனக்கும் இது கத்துக்கணுமா ?” எனவும் ,

“ ஆமா ஐயா .. எனக்கு சொல்லித் தரீங்களா ?” என்றதும் , அவனது கண்களில் தெரிந்த எதுவோ ஒன்று அவர சம்மதிக்க வைத்தது .

“ வா என் பின்னாடி ..” வெகு தூரம் காட்டுக்குள் அழைத்துச் சென்றார் . குளிர் உடலைக் கிழிக்க ஆரம்பித்தது . வெறும் பருத்தி வேஷ்டியும் மேல் துண்டும் போட்டிருந்தவருக்கு நடுங்க ஆரம்பிக்க , உடையே இல்லாமல் வெறும் கோமணம் மட்டும் கட்டி உடலெங்கும் விபூதியைப் பூசிக் கொண்டிருத்த அகோரி அதெல்லாம் ஒன்றுமே இல்லை எண்பது போல நடந்து கொண்டிருப்பது வியப்பை அளித்தது .

சில தூரம் சென்ற பிறகு , “ ஐயா ரொம்ப குளிருது , இதுக்கு மேல நடந்து வர முடியாது . இன்னும் எவ்ளோ தூரம் கூட்டிட்டு போவீங்க ” எனக் கத்த , அந்த அகோரி உடனே சிரித்துவிட்டு , கிருஷ்ணனைச் சுற்றி ஒரு நெருப்பு வளையும் உருவாக்கினார் .

அதன் கதகதப்பு சுகமாக இருக்க , அதை அனுபவித்த கிருஷ்ணன் , “ குருவே , எனக்கும் இதெல்லாம் சொல்லித் தாங்க ” என அவர் முன் மண்டியிட்டார் .

அதன் பிறகு அந்த அகோரியிடமிருந்து கற்கக் கூடாத மாந்த்ரீகத்தை கற்க ஆரம்பித்தார் . காற்றில் கண்ணுக்குத் தெரியாமல் திரிகின்ற துஷ்ட சக்திகளை ஈர்க்கும் வித்தையை சுலபமாக கற்றுக் கொண்டார் . அதுமட்டுமின்றி தன் உடலை விட்டு வெளியேறி மீண்டும் தன் உடலுக்குள் புகும் தந்திரம் வாய்க்கப் பெற்றார் .

இவை அனைத்தையும் கற்கும் அந்த நேரத்தில் அனந்தாச்சாரி முறைப்படி ஆகம விதிப்படி மந்திரங்கள் கற்றுக் கொண்டார் . தன் உடலில் இருக்கும் நூற்றிப்பண்ணிரடு நாடிகளை ஒரே நேர்க்கோடான சக்கரங்களில் பிடித்து நிறுத்தி அவற்றைக் கையாலும் முறையைக் கற்றுக் கொண்டார் . அதுபோக , மூலிகை வைத்தியம் கற்றார் .

ஒரு நாள் அந்தப் பெரியவர் அனந்துவை அழைத்து , “ உனக்கு சில ரகசிய ஏடுகள் தேறேன் . அதை படிச்சுத் தெரிஞ்சுக்கோ . உனக்கு அது பிற்காலத்துல உதவும் ” என்றவர் சில நைந்து போகும் நிலையில் உள்ள ஏடுகளைக் கொண்டு வந்து கொடுத்தார் .

அங்கிருந்த நதியில் குளித்துவிட்டு , கடவுளை வேண்டிக் கொண்டு அந்த ஏடுகளை படிக்க ஆரம்பித்தார் . படிக்கப் படிக்க அவரது தொண்டை வரண்டது .

“ ஐயா , இது…” என்று தயங்க ,

“ இந்த உலகத்தில் யார் கண்களுக்கும் தெரியாத விஷயங்கள் . இது அகத்தியர் கைப்பட எழுதியதுன்னு என்னுடைய தாத்தா வுக்கு தாத்தா அவங்க தாத்தா என்று பரம்பரையா பாதுகாத்து வரது . ஆனா என் பரம்பரைல யாரும் இதை முயற்சி செய்யல . நீயும் செய்ய முடியாது . ஏன்னா உனக்கு அந்த ரேகை இல்ல . யாருக்கு அது வைக்கணும்னு இருக்கோ அவனை நீ உன் வாழ்வுல சந்திப்ப . அவனுக்கு நீ ஒரு கருவியா இரு .” என்று வாசிக்கச் சொல்லிச் சென்றார் .

அவரின் ஆணைப்படி அவற்றைத் தெரிந்து கொண்டவர் , உள்ளம் தூய்மை அடைவதை உணர்ந்தார் . அப்போது அவருக்கு வயது இருபதின் முடிவில் இருக்க , ஆனால் எண்பது வயதினைப் போல மனம் பக்குவப்பட்டது .

அவரின் குரு அவருக்கு ஆசி வழங்கி அனுப்ப , கிருஷ்ணனைத் தேடிச் சென்றார் . ஊர் முழுக்கத் தெரியும் கிடைக்கவில்லை . பின்பு அவர் மட்டும் தனியே ஊருக்குச் சென்றார் .

கிருஷ்ணன் வரவில்லை . நடந்தது அனைத்தையும் தந்தையிடம் சொல்ல , அவரோ அன்று ஆரூடம் பார்த்து தெரிந்துகொள்ள நினைத்தார் .

அவன் திரும்பி வரும்போது அவனாக இருக்க மாட்டான் என்று அறிந்துகொண்டார் .

அவருக்கு அப்போதே அது தெரிந்திருந்தது .

ஆனால் அனந்துவின் முகத்தில் ஒரு புதிய ஒளி தெரிந்தது . முன்பை விட இன்னும் நிதானமாகவும் தெளிவாகவும் சிந்தித்து செயல்பட்டார் . நாட்களும் வருடங்களாகிச் சென்றது .

அவரது தங்கை ஒரு நாள் கிணற்றடியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள் . மிகுந்த சிரமப் பட்டு அவள் வேலை செய்வதைப் பார்த்தவர் அவளுக்குத் திருமண வயது எட்டி விட்டதை அப்போது தான் உணர்ந்தார் . அவளுக்கு ஒரு நல்ல வாழ்வை அமைத்துத் தர வேண்டியது அண்ணனின் கடமை என அவளிடம் சென்று கேட்டார் .

“ சித்ரா உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் ?” அவளுக்கு கிணற்றில் தண்ணீர் இரைத்து ஊற்றினார் .

சற்று வெட்கம் கொண்டவள் , “ எனக்கு இது மாதிரி எல்லாம் கஷ்டப் படாம வீட்டில் வேலையாட்கள் இருப்பது போல வாக்கப்படனும் .” தனது ஆசையைக் கூறினாள் .

தங்கையின் ஆசை புரிந்தது .

“ சரிம்மா பாக்கறேன் .” என்றவர் அவளது ஜாதகத்தை கையில் எடுக்க , அந்த நேரம் அங்கு வந்தார் கிருஷ்ணமாச்சாரி .

“ அவ அண்ணனான எனக்கும் அந்தக் கடமை இருக்கு . நான் பாத்துகறேன் .” பிடுங்கிக் கொண்டார் . அந்த நல்ல பேரும் தனக்கே வந்து சேரவேண்டும் என்ற ஆசை .

“ என்ன டா இத்தனை வருடம் என்ன பண்ண ? எங்க போன ?” அவர்களது தந்தை வந்து நின்றார் .

“ எனக்கு வேண்டியதை நான் கத்துகிட்டேன் . கேட்டது கிடைக்கும் சக்தி . நினைத்ததை அடையும் திறன் . என்ன வேணும் கேளுங்க .. என்னால கொண்டு வர முடியும் . உங்க பையன நினச்சு நீங்க பெருமை படலாம் .” ஆணவத்தோடு கூறினார் .

அனந்துவிற்கு எல்லாம் புரிந்தது . கிருஷ்ணனின் நடவடிக்கை அவரது நெற்றியில் இருந்த கருப்பு நிற பொட்டு , அணிந்திருந்த கருப்பு உடை , கருப்பு மாலை சொன்னது , அவன் இப்போது ஒரு மாந்திரீங்கன் என்று . எதுவும் பேசாமல் அந்த இடம் விடு அகன்றார் .

அவரது தந்தைக்கு பொருக்கவில்லை . “ டேய் கிச்சா .. உன்னை நான் எப்படி எல்லாம் பாக்கனும்னு ஆசைப் பட்டேன் . இது என்ன கோலம் . உன் நடவடிக்கை எனக்குப் பிடிக்கல . நான் யார் கிட்ட உன்னை பாடம் படிக்க அனுப்பினேன் . நீ யார் கிட்ட என்ன கத்துட்டு வந்திருக்க ..? வருத்தமாக ஆரம்பித்து கோபத்தில் முடித்தார் .

“ அப்பா .. இந்த உலகத்தை ஆளும் திறமை என்னிடம் இருக்கு .. இன்னும் கொஞ்ச நாள்ல அதையும் சாத்தியப் படுத்திடுவேன் . இதை விட உங்களுக்கு என்ன வேணும் ?” முறைப்பாகவே சொல்ல ,

“ ச்சீ… பேசாத . இந்த உலகத்தை ஆள ஒருத்தனால தான் முடியும் . அது அந்தக் கோவில்ல பள்ளி கொண்டிருக்கும் பத்மநாபன் . வேற யாருக்கும் அந்த அருகதை இல்லை . நீ எல்லாம் ஒரு தூசி . உன்னால ஒரு கல்லைக் கூட அசைக்க முடியாது . மொதல்ல இதை எல்லாம் கழட்டி வீசிட்டு குளிச்சுட்டு சுத்தமான வெண்ணிற ஆடை எடுத்து உடுத்து . நெற்றியில் சந்தனம் வை .” கோபத்தில் கத்தினார் .

“ என்னால இனிமே அது முடியாது . என்ன சொன்னீங்க , கல்லைக் கூட அசைக்க முடியாதா… இப்ப சொல்லுங்க .. இந்த வீட்டில் இல்லாத பொருளை எல்லாம் கொண்டு வரவா ? இல்ல இந்த வீட்டையே தங்கத்தாலா ஆக்கிடவா ?” பதிலுக்கு கர்ஜிக்க ,

கடைசி முயற்சியாக மகனை வழிக்குக் கொண்டு வர நினைத்தார் .

“ அனந்து… ” உள்ளே சென்றவரை அழைத்தார் தந்தை .

ஆனந்து சாந்தமாக வர , “ நம்ம ஸ்வாமி அறையில இருக்கற அந்த சின்ன வெள்ளிப் பெட்டியைக் கொண்டு வா…” உத்தரவிட்டார் .

அனந்து சென்று அந்தக் கடவுளை ஒரு முறை வணங்கிவிட்டு அந்த சிறிய பெட்டியைக் கொடுக்க , அதைப் பெற்றுக் கொண்டார் .

“ இதுக்குள்ள என்னோட தெய்வம் இருக்கு . உன்னால முடிஞ்சா இந்தப் பெட்டிய திறந்து எடுத்துக்காட்டு பாக்கறேன் .” தன் கையை நீட்டினார் .

கிருஷ்ணமாச்சாரி முதலில் சாதாரணமாக நினைத்து அதை தொடப் போக , அந்தப் பெட்டி நகர்ந்தது . ஆச்சர்யத்துடன் கிருஷ்ணன் பார்க்க , இப்போது தீவிரமாக மனதில் ஏதோ மந்திரத்தைக் கூறி மீண்டும் தொடப் பார்க்க , மறுபடியும் அது நகர்ந்தது .

தந்தை முன் அவமானப் பட மனமில்லாமல் கண்ணை மூடி அந்தப் பெட்டிக்குள் இருக்கும் கடவுளை காண நினைக்க , அவர் கண்களுக்கு ஐந்து தலை நாகம் காட்சி தந்தது .

சாட்சாத் அந்த பத்மநாப சுவாமி என புரிந்துகொண்டார் . அது அவரால் தொடமுடியாத ஒன்று என்றும் தோன்ற ,

“ உள்ள இருக்கற அந்த சாளக்ராம கல்லை உன்னால தொடக் கூட முடியாது இல்லையா ?” தந்தை ஏளனமாகச் சிரித்தார் .

“…”

“ அதுக்குத் தான் சொன்னேன் . ஒரு கல்லைக் கூட அசைக்க உன்னால முடியாதுன்னு .. இப்ப புரிஞ்சுக்கோ . தெய்வ சக்திக்கு மிஞ்சுன சக்தி எதுவும் இல்ல . உன் வாழ்க்கைய அழிச்கிக்காத . நான் சொல்ற படி கேளு .” சிறுபிள்ளைக்கு சொல்வதைப் போல அவனுக்கு எடுத்துரைக்க ,

அவமானப் பட்ட கிருஷ்ணன் தந்தை சொல்லை ஏற்க மறுத்தார் .

“ இப்ப வேணா என்னால முடியாம இருக்கலாம் . ஆனா நான் செஞ்சுக் காட்டறேன் .” சபதம் செய்தார் .

“ அப்ப உனக்கு இந்த வீட்டுல இடம் இல்ல . வெளிய போ ” என்றுவிட்டார் .

அதற்கு மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்றார் கிருஷ்ணன் . போகும்போது அனந்து தங்கையின் ஜாதகம் கேட்க , அதை விட்டெறிந்து விட்டு சென்றார் .

இதில் மிகவும் வருந்தியது தங்கை சித்ரா தான் . வீட்டை விட்டு சென்ற அண்ணனை யாரும் அறியாமல் தேடிச் சென்றார் . அவர் ஒரு மண்டபத் திண்ணையில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார் .

சித்ரா அவருக்கு நீர் மோர் எடுத்துச் சென்று கொடுத்தார் . தங்கையின் பாசத்தை உணர்ந்த கிருஷ்ணன் அதை வாங்கிக் குடிக்க ,

“ அண்ணா , உன்னால எல்லாம் முடியுமா ?” ஆசையாக கேட்க ,

“ முடியும்மா .. உனக்கு என்ன வேணும் சொல்லு ..” என்றார் .

தான் வாழப் போகும் இடம் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்ல ,

“ உன்னோட ஆசையை நான் நிறைவேத்தறேன் . உன்னைத் தேடி மாப்பிள்ளை வருவான் . நீ கவலைப் படாத .” என்றார் .

“ நீ எங்க தங்குவ ..” வருத்தம் மேலிட அவள் கேட்க ,

“ கவலைப் படாத நான் அரண்மனைல தாங்கிப்பேன் .”

ஆச்சரியமாக பார்த்தாள் சித்ரா . “ என்னது அரண்மனையா ?”

“ ஆமா மா . அரண்மனைல இருக்கற ராஜா எனக்குத் தெரிந்தவர் , அவரை எப்படியாவது என் சித்து வேலை காட்டி மயக்கி நான் சொல்றபடி கேட்கவைப்பேன் . அவரே எனக்கு அங்க தங்க ஏற்பாடு செய்வார் .” சிரித்தார் கிருஷ்ணன் .

“ அப்பப்ப என்னை கவனிச்சுக்கோ அண்ணா…” தங்கையும் சிரிக்க , இருவரும் தங்கள் பாதையை நோக்கிச் சென்றனர் .

கிருஷ்ணன் சொன்னபடியே சில விஷயங்கள் நடக்க அந்த ராஜா அவரை அருகில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு அங்கேயே தங்க ஒரு இடமும் கொடுத்தார் . ராஜ போக உணவை உண்டு நிம்மதியாக இருந்தார் கிருஷ்ணன் .

அனந்து முன்னை விட பூஜைகளில் கவனம் செலுத்தினார் . அவ்வப்போது கோவிலுக்கு சென்று வந்தார் . அப்போதே அவருக்கு கோவிலுக்குள் இருக்கும் ரகசிய அறைகள் பற்றி அகக்கண்ணில் தெரிந்தது .

அதுவும் பத்மனாபரின் நிவலரைக்குக் கீழ் இருக்கும் அந்த அறையில் இருக்கும் மர்மங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது என்று உணர்ந்தார் . கண்ணை மூடி அவற்றைக் காண அவர் நினைக்கும் போதெல்லாம் ஒரு பெரிய ஒளி அதைக் காணவிடாமல் செய்தது .

அதை அறிந்து கொள்ள நினைத்து அவர் தன் குரு சொல்லிகொடுத்த படி தனது சக்திகளை அடக்கி மூன்றாவது கண் வழியாக அதைக் காண விரும்பினார் . கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்தது அந்த சக்தியைப் பார்த்து .

கிருஷ்ணன் தன் தங்கைக்கு வரன் ஏற்பாடு செய்து கொடுக்க அன்றிரவு யாரும் அறியாமல் காட்டுப் பக்கம் சென்றார் . அங்கே கோலமிட்டு அக்னியை அந்தரத்தில் வளர்த்தார் . யட்சிணி உபாசனம் செய்தார் . ஒரு சில நேரத்திலேயே தீயில் இருந்து ஒரு நீல உருவம் தலையை மட்டும் காட்டி காட்சி கொடுத்தது .

“ என் தங்கைக்கு இருக்கும் வரை பணக்கார வாழ்வு வேண்டும் . திருமணம் செய்து அவள் செல்வ செழிப்பில் இருக்க வேண்டும் . அதற்கு ஒரு மாப்பிள்ளையை அனுப்பு ” என்று கட்டளையிட்டார் .

“ அப்படியே !” என்று கூறி யட்சி நிமிடத்தில் மறைந்தது .

அவர் கேட்டது போலவே அடுத்த நாளே மாப்பிள்ளை வீட்டார் வாசலில் வந்து நிற்க ,

அனந்து வந்தவர்களை அழைத்து அமர வைத்தார் . திடீரென எப்படி வந்தார்கள் என வெகுவாக யோசிக்கவில்லை . கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருப்பான் என்று தெரியும் . ஆனாலும் அவன் எப்படி ஏற்பாடு செய்தான் என்பதை அந்த நேரத்தில் யோசிக்காமல் விட்டார் .

சித்ராவைத் தான் திருமணம் செய்வேன் என ஒற்றைக் காலில் நின்று அடுத்த ஒரே மாதத்தில் திருமணமும் செய்து கொண்டான் . அதன் பிறகு தான் விதி விளையாடியது .