kv-13
13
அன்று காலை தான் விஜய் வரும் தகவல் வந்திருக்க , மறுநாளே அவன் நிற்பான் என்று அவள் நினைக்கவில்லை . காலையில் எப்போதும் போல அந்த பத்மநாபனை சந்தித்துவிட்டு வழக்கம் போல அந்தப் பொக்கிஷம் தனக்கே கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டவள் , வீட்டிற்கு வந்து தாய் தந்தையுடன் காலை உணவை முடித்தாள் .
நேற்றிலிருந்து தீவிர சிந்தனையில் இருப்பவளை , அவளது தாய் கவனித்தாலும் பெரிதாகக் கேட்கவில்லை . பிரச்சனை என்றால் அவளே சொல்லுவாளே என்று விட்டார் . தந்தையோ உடல் வலியில் இருக்க இதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை . அவள் விஜயின் நினைவில் சாப்பிட்டு எழுந்து தன் அறைக்குச் சென்றாள் , அதற்கு முன் அவளது அலைபேசி ஒலிக்க , புதிய எண்ணைக் கண்டு புருவ முடிச்சுடன் அதை இயக்கினாள் .
இவள் ஹல்லோ சொல்லும் முன்பே ,
“ ஹலோ , ஐ அம் விஜய் . விஜயபூபதி . அம் ஐ ஸ்பீகிங் டு மிஸ் . ஜான்விவர்மா ?” நுனி நாக்கு ஆங்கிலத்தில் அசராமல் பேசியவனின் கம்பீரக் குரல் அவளது காதுகளையும் தாண்டி நெஞ்சுக்குள் இறங்கியது .
அவனது பெயரைக் கேட்டதுமே , ஏனோ உடல் சிலிர்த்து நா வரண்டது . அதுக்குள்ள இங்க வந்துட்டானா ! என வியந்தவள் அவன் இரு முறை ஹலோ ஹலோ என்று கேட்பது நடப்பிற்கு கொண்டு வர ,
“ எஸ் . ஜானவி ஹியர் .” அவளுக்கே உரிய நிமிர்வும் தைரியமும் துளியும் குறையவில்லை அவள் குரலில் .
“ நான் அந்த ஆறாவது அறையை ஆராய வந்துட்டு இருக்கேன் . உங்களுக்கும் தகவல் வந்திருக்கும்னு நினைக்கறேன் . நீங்க தான் இப்போ இன்சார்ஜ்ன்னு சொன்னங்க . நான் கோவில்ல இருக்கறவங்க கிட்ட எதுக்காக வந்திருக்கேன்னு சொன்னா அது கண்டிப்பா பப்ளிக்குக்கு பரவிடும் . நீங்க என்ன நினைக்கறீங்க ?” அவளை வரச் சொல்ல நேரடியாகக் கேட்காமல் இப்படிக் கூற ,
‘ ஓ ! இவரு என்னை வா ன்னு கூப்பிட்டா கெத்து குறஞ்சிடுமோ ! வரேன் டா .. உன்னை வெச்சு செய்யறதுக்குத் தான இருக்கேன் .’
“ பப்ளிக்குக்கு தெரியற மாதிரி நானும் விடமாட்டேன் மிஸ்டர் . விஜய் . நீங்க ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க , நான் அங்க இருப்பேன் .” பதிலுக்குக் அவனை காக்க வைக்க நினைத்தாள் .
“ நான் இனிமே தான் கிளம்பனும் . சோ , அங்க வர பத்து நிமிஷம் ஆகும் . வெய்ட் பண்ணவேண்டிய அவசியம் இல்ல . சி யூ ” என இணைப்பைத் துண்டித்தான் .
‘ என்ன திமிர் உனக்கு . வெய்ட் பண்ண முடியாதோ . என்ன தோரணையா பதில் சொல்றான் . இரு டா , உன்னை கீ குடுக்கற பொம்மை மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்ட வைக்கறேன் .’ பொருமிக்கொண்டே கிளம்பத் தயாரானாள் .
அவனிடம் ஏற்கனவே பத்து நிமிடம் என்று கூறிவிட்டதால் , அதற்கு மேல் தாமதித்தால் தெரிந்துவிடும் என்று , அவனை சற்று விட்டுத் தான் பிடிக்க வேண்டும் மூச்சை வெளியிட்டுத் தன்னை சமன் செய்து கொண்டாள் .
கோவிலுக்குள் பெண்கள் புடவையோ அல்லது தாவணியோ தான் அணியவேண்டும் என்பதால் அவள் போட்டிருந்த அந்த சுடிதாரை விடுத்து , ஓர் அழகிய சிகப்பு நிறப் புடவையைக் கட்டிக் கொண்டாள் .
கண்ணாடி முன் நின்று தன் அழகை சரிபார்த்தவள் , அவளது தங்கக் கைகளில் ஒரு மெல்லிய வைர வளையல் அணிந்து , தன்னுடைய சிவந்த முகத்தில் அதற்கு ஏற்றார் போல சிகப்பு வட்டப் பொட்டிட்டு கருங்கூந்தலை ஒரு சிறிய அளவு க்ளச்சில் அடக்கி கண்களில் மை தீட்டினாள் . தனது அழகிய ஓவியம் போன்ற உதட்டில் மெல்லிதாக க்ளாஸ் மட்டும் போட்டு அதைப் பளபளக்கச் செய்தாள் .
அவளுக்கே உரிய , பிரத்யேகமாக அவளுக்காக மட்டுமே தயாரித்துத் தரப் படும் பர்ஃபியூமை மணிக்கட்டிலும் , கழுத்து வளைவிலும் சிறு உடையிலும் தெளித்தவள் , இதோ கிளம்பிவிட்டாள் !
அவளது வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தக் காத்திருந்தவனை சந்திக்க அவள் சென்றாள் .
அவளது அரண்மனைக்கும் கோவிலுக்கும் வெகு தூரம் இல்லை . நடந்தே வந்துவிடலாம் . அவள் வாசலை அடையும் நேரம் , சரியாக அவனும் எதிரே வந்தான் . இவள் வடக்கு என்றால் அவன் தெற்கு . எதிரெதிரே நின்றனர் .
ஆறடியில் அம்சமாக , வெண்ணிற வேட்டி உடுத்தி , மேல் துண்டை தன் முதுகையும் புஜங்களையும் மறைந்தவாறு போர்த்தி , அடர்ந்த கேசத்தினை அழகாக வாரினாலும் அது காற்றில் கலைந்து தனி அழகைக் கொடுத்தது . நெற்றியில் சந்தனம் கீற்றாகத் தீட்டி , நாங்க நாள் தாடியுடன் , ஒரு கையில் மட்டும் டாக் ஹோயர் வாட்ச் அணிந்து , ஆண்மையின் திமிரோடு , கூறிய விழிகளால் அவளைத் துளைத்தபடி அவள் எதிரே நின்றான் .
அவளோ மனதில் இருப்பதை வெளியில் காட்டாதவாறு முகத்தை நிர்மலமாக வைத்திருந்தாள் . ராஜவம்ச அழகு அவளிடம் கொட்டிக் கிடந்தது . உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அழகுக்கு பச்சமில்லை அவளிடம் . செருப்பில்லாத அவளது பாதம் அந்த மண் தரையில் பதிந்து இருக்க , அவை தும்பைப் பூப் போல இருந்தது .
அனால் அவள் கண்களில் ஒரே நொடி ! ஒரே நொடி தெரிந்த அகத்தை , திமிர் , விஜயின் கண்களில் இருந்து தப்பவில்லை . இவள் தான் அவள் என்று கண்டதும் கண்டுகொண்டான் .
“ மிஸ்டர் . விஜய்வர்மா… !” மெல்லிதாக அவள் சந்தேகமாகக் கேட்க ,
“ எஸ் மிஸ் . ஜானவி .” மருந்துக்கும் சிரிப்பில்லை அவனிடம் .
‘ ஒரு பாவமும் செய்யாத என் தந்தையைக் கொன்ற சூர்பனகை . ஆபத்து எப்போதும் அழகாகவே இருக்கும் என்பதுக்கு இவளே சாட்சி . உன்னை எல்லாம் கொலைகாரின்னு சொன்னா கொழந்த கூட நம்பாது .. ச்சை .. பதவிக்காக கூடப் பிறந்தவங்களயே கொல்ற ராஜவம்சம் தான நீ . அதன் அந்த புத்தி . உன்னை … ’ பல்லைக் கடித்துக் கொண்டு அவள் முன் நின்றான் .
“ வாங்க , உள்ள போகலாம் .” அடக்கத்தின் மறு உருவமாக அவள் பேச , அவனும் அகத்தினை மறைத்து நடந்து கொண்டான் .
அவள் உள்ளே செல்ல , இவனும் பின் தொடர்ந்தான் .
யாருக்கும் அவள் அங்கே பதில் சொல்லவோ அல்லது அனுமதி பெறவோ வேண்டியது இல்லை . நேராக கற்பகிரகத்தில் இருக்கும் சுவாமியை தரிசிக்கும் உரிமையும் அதிகாரமும் அவளுக்கு உண்டு . அப்படி அவள் செல்ல , விஜய்க்கு அவளின் செயலைக் கண்டு உதடு வளைந்தது .
அவள் யாரையோ அழைத்துக் கொண்டு உள்ளே செல்வதை அங்கிருந்த கோவில் அதிகாரிகளும் அங்கு வேலை செய்பவர்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர் . சிலர் மரியாதைக்கு அவளைப் பார்த்து தலையசைத்து வணக்கம் சொல்ல , இவள் பதிலுக்கு உதட்டை சிரித்தபடி வைத்தே நகர்ந்தாள் . ஒரு தலையசைப்புக் கூட இல்லை . சிலருக்கு அதுகூட இல்லை .
‘ ராஜ வம்சம்னா திமிர் வந்துடுமா ? இந்தக் காலத்துல ஏது ராஜாவும் கூஜாவும் .. அடக்கறேன் இரு டி ‘ கருவினான் .
அவளுக்கோ அவனை நேராக அந்த அனந்த சயனத்தில் இருக்கும் சுவாமியைக் காட்டும் விருப்பம் இல்லாததால் அவனை அந்தப் பிரகாரத்தின் பின் பக்கம் வழியாக அழைத்துச் சென்றாள் .
அவன் ஒரு நிமிடம் நிற்க , அவளோ அவனைத் திரும்பிப் பார்த்தாள் .
அவளைக் கேள்வியாகப் பார்த்தான் . அவன் பார்த்ததின் அர்த்தம் ஜானவிக்கு நன்றாகவே புரிந்தது . அவனை ஏன் நேர் வழியில் அழைத்துச் செல்லவில்லை என்பது தான் அவன் பார்வையின் மொழி .
“ இது எங்க குடும்பத்துல இருக்கறவங்க மட்டும் போற வழி . நீங்க தரிசனம் பண்ணனும்னா வேற வழில தான் போகணும் . ஆனா , இப்ப நீங்க பார்க்க வந்திருக்கறது ஆறாவது நிலவறை தானே . அதுக்கு வேற வழி இருக்கு .” அலட்சியம் அவள் குரலில் வழிந்தது . நீ இந்த வழியாக செல்ல அருகதையற்றவன் என்பதை சொல்லாமல் சொன்னாள் .
“ ஓஹோ ! நிலவறை மூலவரோட சிலைக்கு கீழ இருக்கறதா சொன்னங்க !?”
“ ஆமா . ஆனா இந்தக் கதவுகளைத் திறக்க உத்தரவு வந்த போது , எல்லாராலையும் அந்த வழியா கூட்டிப்போக முடியாதுன்னு தான் பின் பக்கம் பூட்டி இருந்த படிக்கட்டு வழியை சரி பண்ணி இருக்கோம் .” விளக்கம் தந்தவள் , மேலும் நடந்த படியே சொல்ல ,
அவளை தொடர்ந்து சென்றான் விஜய் . அவள் செல்லும் வழியில் அந்தச் சுவற்றில் நிறைய சிற்பங்கள் செதுக்கப் பட்டிருப்பதை கவனித்தான் விஜய் , அவை அனைத்துமே அந்தக் கதவுகளைப் போலத் தான் இருந்தது .
இதில் கூட மூடிய கதவுகளைத் தான் செதுக்கி இருந்தார்களே தவிற , அவை திறக்கப் பட்டது போல எதுவும் இல்லை என்பதை அவன் கவனித்தான் .
அவசரமாக ஓடி வந்த ஒருவர் , “ அம்மா , கூட வரட்டுமா ..?” மூச்சுவாங்க விஜய்யை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு நின்றான் .
“ இல்ல , வேண்டாம் சாமிகண்ணு , நானே பாத்துக்கறேன் ” அவனை அனுப்பிவிட்டாள் .
கீழே இறங்கிய கல் படிகளுக்கு ஒரு கதவு இருக்க அதைப் பூட்டியே வைத்திருந்தனர் . தான் கையேடு கொண்டு வந்திருந்த சாவியைக் கொண்டு அவள் கதவைத் திறந்தாள் .
படிகள் கற்களால் இருந்தது . ஒரு ஐம்பது படிகள் இறங்கி செல்லும்படி இருந்தது . அவற்றை கடந்தபின் சமதளம் வந்தது . அங்கே வரிசையாக பல கதவுகள் ஆங்காகே இருந்தது . திறக்கப்பட்ட கதவுளை அரசாங்கமே பூட்டி சீல் வைத்திருப்பதைப் பார்த்தான் .
“ இந்த கதவுகள்ல கிடைத்த நகைகள் நாணயங்கள் எல்லாம் இப்போ எங்க இருக்கு ? அதுக்கும் நீங்க தான் இன்சார்ஜ்ஜா ?” அவளைப் பார்க்காமல் அந்தக் கதவினைப் பார்த்த படி அவன் கேட்க ,
“ அது எல்லாமே கோவில் சொத்து . எங்க பரம்பரை இந்த ஊரையே அந்த பத்மநாபனுக்கு அற்பனிச்சாச்சு . அதுனால எல்லாமே கடவுளுக்குத் தான் சொந்தம் . எல்லாம் அந்தந்த அறையிலேயே வெச்சு பூட்டி இருக்கோம் .” அவளை சந்தேகமாக அவன் கேட்டது பிடிக்காமல் கோபமாக பதில் தந்தாள் .
“ ஒ ! இப்பவும் நீங்க தான் காவலா ?” நக்கலாக அவன் சிரிக்க , அது கூட அவனுக்கு அழகைத் தந்தது .
அதை அவள் உணர்ந்தாலும் ரசிக்கும் நிலையில் இல்லை .
“ ஹல்லோ .. என்ன சொல்றீங்க ? நாங்க அதுக்கு ஆசைப் படரோம்னு சொல்றீங்களா ? அப்படி உரிமை கொண்டாடனும்னா எப்போதோ அதை எங்களால எடுத்து இருக்க முடியும் . நாங்க அதை எல்லாருக்கும் தெரியும்படி தான் வெச்சிருக்கோம் . இப்பவும் கணக்கு சரியா அரசாங்கத்துக்கு கொடுத்திருகோம் .” குரல் சற்று உயர ,
“ அப்படியா… கணக்கு சரியா இருந்தா சரி .” மீண்டும் எள்ளல் அவனது குரலில் .
இப்போது பல்லைக் கடிப்பது அவள் முறை ஆயிற்று .
“ சரி அந்த ஆறாவது கதவு ?” அவள் அடுத்து விளக்கம் கொடுக்கும்முன்
அவளை தவிர்ப்பது போலத் தன் வேலையில் கவனம் வந்தது போல நின்றான் .
“ உங்களுக்குப் பின்னாடி தான் இருக்கு .” அவனை முந்திக் கொண்டு சென்றாள் .
அந்தக் கதவின் அருகே சென்றவனுக்கு உள்ளுக்குள் ஒரு அதிர்வு உண்டாவதை உணர முடிந்தது . அது என்னவென்று அவனுக்குப் புரியவில்லை .
அவனுக்கு ஜானவி முது காட்டி நிற்க , இவனோ அவளைக் கண்டு கொள்ளாமல் கதவைப் பார்த்தபடி நின்றான் .
நாகங்களின் முகங்கள் மட்டும் அந்தக் கதவில் இருந்தது . ஆனால் அவன் கனவில் பார்த்தது போல இல்லை . அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது . இந்தக் கதவிற்குள் தான் இன்னொரு கதவு இருந்தது அதை தான் அவர்களால் திறக்க முடியவில்லை என்று அவான் தந்தையின் கோப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது . உடனே அவளைப் பார்த்து ,
“ இத ஓபன் பண்ணுங்க .” என்றான் .
அவளது பெரிய கண்கள் இன்னும் பெரிதாக விரிய ,
“ வாட் ..!??” புருவத்தை சுருக்கி அவனைப் பார்த்தாள் .
“ இத ஓபன் பண்ணது எனக்குத் தெரியும் . சோ …” தாடையை ஒரு விரலால் தடவியபடி அவன் நிற்க ,
“ ஆமா , இத ஓபன் பண்ணங்க .. அதுக்குள்ள இதே மாதிரி ஒரு கதவு .. அவ்வளோ தான் . சோ எல்லாம் ஒன்னு தான் .” தோளைக் குலுக்கி ஜானவி சொன்னது அவனுக்கு எரிச்சலைத் தந்தது .
“ நான் நீங்க சொல்ற ஸ்டோரிய கேட்க வரல , அரசாங்க உத்தரவோட இதை ஆராய வந்திருக்கேன் . ஹோப் யூ காட் இட் (hope you got it)” குரலில் கடுமை கூடியது .
கண்களை மூடித் திறந்தவள் அதற்கு மேல் வாக்குவாதம் செய்யாமல் , அந்தக் கதவின் வலது பக்கம் இருந்த சிறு பொந்தில் கை வைக்க , அந்தக் கதவு சிறு சத்தம் எழுப்பியது . பின் அந்த நாகங்களின் முகத்தை இரு கைகளாலும் ஒரே நேரத்தில் அழுத்த கதவு திறந்து கொண்டது .
உள்ளே கும் இருட்டு . அத்தோடு மனதை மயக்கும் நல்ல வாசம் வேறு வந்தது . அதை இழுத்து சுவாசித்து உள் வாங்கிக் கொண்டான் விஜய் .
ஜானவியாலும் அதனை தவிர்க்க முடியவில்லை . அவளும் சுவாசிக்க , தன்னிச்சையாக இருவரின் வலது காலும் ஒரே நேரத்தில் உள்ளே வைக்கப்பட்டது .