LNCrawler

தமிழ் விடுதூது

தமிழ் விடுதூது — www.projectmadurai.org · All chapters

தமிழ் விடுதூது

maturaic cokkanAtar tamiz viTu tUtu

(in tamil script, unicode/ utf-8 format)

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

Acknowledgement:

Our sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.

Etext Preparation (input) : Mr. S. Anbumani, Blacksburg, Virginia, U.S.A.

Etext Preparation (proof-reading) : Ms. Deeptha Thattai, Columbia, South Carolina, U.S.A.

Etext Preparation (webpage) : Dr. Kumar Mallikarjunan

This webpage presents Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).

of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.

https://www.projectmadurai.org/

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.

சீர்கொண்ட கூடல் சிவராச தானி புரந்து

ஏர் கொண்ட சங்கத்துஇருந்தோரும் - போர்கொண்டு     1

இசையும் தமிழரசி என்று ஏத்தெடுப்பத் திக்கு

விசையம் செலுத்திய மின்னும் - நசையுறவே       2

செய்ய சிவஞானத் திரள் ஏட்டில் ஓரேடு

கையில் எடுத்த கணபதியும் - மெய்யருளால்       3

கூடல் புரந்து ஒருகால் கூடற் புலவர்எதிர்

பாடல் அறிவித்த படைவேளும் - வீடு அகலா       4

மன்னும் மூவாண்டில் வடகலையும் தென்கலையும்

அன்னை முலைப்பாலில் அறிந்தோரும் - முன்னரே       5

மூன்று விழியார் முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்

ஈன்றுதரச் சொல்லின் இசைந்தோரும் - தோன்று அயன் மால்       6

தேடி முடியா அடியைத் தேடாதே நல்லூரில்

பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி       7

மட்டோ லைப் பூவனையார் வார்ந்துஓலை சேர்த்துஎழுதிப்

பட்டோ லை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே       8

ஒல்காப் பெருந்தமிழ் மூன்று ஓதியருள் மாமுனியும்

தொல்காப்பியம் மொழிந்த தொல்முனியும் - மல்காச் சொல்      9

பாத்திரம் கொண்டே பதிபால் பாய் பசுவைப் பன்னிரண்டு

சூத்திரம் கொண்டே பிணித்த தூயோரும் - நேத்திரமாம்     10

தீதில் கவிதைத் திருமாளிகைத் தேவர்

ஆதி முனிவர் அனைவோரும் - சாதி, உறும்   11

தந்திரத்தினால் ஒழியாச் சார்வினையைச் சாற்றுதிரு

மந்திரத்தினால் ஒழித்த வல்லோரும் - செந்தமிழில்       12

பொய்யடிமை இல்லாப் புலவர் என்று நாவலர்சொல்

மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்       13

காடவரும் செஞ் சொல் கழறிற்றறிவாரும்

பாடஅரும் தெய்வமொழிப் பாவலரும் - நாடஅரும்       14

கல்லாதார் சிங்கமெனக் கல்வி கேள்விக்கு உரியர்

எல்லாரும் நீயாய் இருந்தமையால் - சொல் ஆரும்      15

என்னடிகளே உனைக்கண்டு ஏத்தின்இடர் தீருமென்றுஉன்

பொன்னடிகளே புகலாப் போற்றினேன் - பன்னியமென்       16

பஞ்சி படா நூலே பலர்நெருடாப் பாவே கீண்டு

எஞ்சி அழுக்கு ஏறா இயல்கலையே - விஞ்சுநிறம்       17

தோயாத செந்தமிழே சொல்ஏர் உழவர் அகம்

தீயாது சொல்விளையும் செய்யுளே - வீயாது      18

ஒருகுலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய்

வருகுலம் ஓர் ஐந்தாயும் வந்தாய் - இருநிலத்துப்       19

புண்ணியம் சேர்உந்திப் புலத்தே வளிதரித்துக்

கண்ணிய வாக்காம் கருப்பமாய் - நண்ணித்      20

தலைமிடறு மூக்குரத்தில் சார்ந்து இதழ்நாத் தந்தம்

உலைவிலா அண்ணத்து உருவாய்த் - தலைதிரும்பி       21

ஏற்பமுதல் முப்பது எழுத்தாய்ச் சார்பு இருநூற்று

நாற்பது எழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே      22

எண்முதலாகப் பகரும் ஈராறு எனும்பருவம்

மண்முதலோர் செய்துவளர்க்கும் நாள் - கண்மணிபோல்       23

பள்ளிக்கூ டத்து அசையாம் பற்பல தொட்டில் கிடத்தித்

தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள் இலகு       24

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்

மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய் - மஞ்சரையே       25

பன்னிஒரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்

உன்னை வளர்த்துவிட ஒண்ணுமோ - முன்னே      26

நினையும் படிப்பெல்லாம் நின்னைப் படிப்பார்

உனையும் படிப்பிப்பார் உண்டோ - புனைதருநல்       27

செய்யுள்சொல் நான்கும்உயர் செந்தமிழ்ச்சொல் ஓர்நான்கும்

மெய்உட்பொருள் ஏழ்விதத் திணையும் - மையில் எழுத்து       28

ஆதியாப்பு எட்டும் அலங்காரம் ஏழ்ஐந்தும்

பேதியாப் பேரெழில் மாப்பிள்ளையாய்ச் - சாதியிலே       29

ஆங்குஅமை செப்பல்பண் அகவல்பண் துள்ளல்பண்

தூங்கல்பண் பட்டத்துத் தோகையரா - ஓங்குமனத்து       30

எண் கருவி ஐந்துஈன்றிடு நூற்று மூன்றான

பண்களும்பின் கல்யாணப் பாவையரா - எண்கொளும்      31

நல்தாரகமா நவரசமாம் பிள்ளைகளைப்

பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்று அகலாப்      32

பண்கள்முதல் பெண்களொடும் பாலரொடும் நாடகமாம்

பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே - மண்புகழத்      33

தாழ்விலா அட்டாதச வன்னனைகள் எனும்

வாழ்வுஎலாம் கண்டு மகிழ்ந்தாயே - ஆழ       34

நெடுங்கோல வையையில் என் நேசர்மேல் பட்ட

கொடுங்கோல் செங்கோலாகக் கொண்டாய் - அடங்காத      35

எம்கோவே பத்தென்று இயம் பு திசைக்குள்ளே நின்

செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கே உன்      36

தேசம் ஐம்பத்தாறில் திசைச்சொல் பதினேழும்

மாசற நீ வைத்த குறுமன்னியரோ - வீசு       37

குடகடலும் கீழ்கடலும் கோக் குமரியாறும்

வடவரையும் எல்லை வகுத்தாய் - இடைஇருந்த       38

முன்உறும் தென்பாண்டி முதல் புனல்நாடு ஈறான

பன்னிரண்டு நாடும் அப்பால் நாடோ - அந்நாட்டுள்       39

வையை கருவை மருதாறு மருவூர் நடுவே

ஐய! நீ வாழும் அரண்மனையோ - செய்யபுகழ்      40

மூ வேந்தர் வாகனமா மூவுலகும் போய் வளைந்த

பாவேந்தே நீ பெரிய பார்வேந்தோ - கா ஏந்து       41

விண்ணவரும் காணரிய வேத ஆகமங்கள் எலாம்

புண்ணியனே உன்றன் புரோகிதரோ - எண்ணரிய       42

நல்ல பெருங்காப்பியங்கள் நாடகம் அலங்காரம்

சொல்லரசே உன்னுடைய தோழரோ - தொல் உலகில்       43

சார்புரக்கும் கோவே நல்சாத்திரங்கள் எல்லாம் உன்

பார் புரக்கும் சேனாபதிகளோ - வீரர் அதிர்       44

போர்ப் பாரதமும் புராணம் பதினெட்டும்

சீர்ப்பாவே உன்னுடைய சேனைகளோ - பார்ப்பார்கள்      45

அக்கரவர்த்தி எனலாம் என்பார் பூலோக

சக்கரவர்த்தியும் நீதான் அன்றோ - சக்கரம்முன்பு      46

ஏந்தி நெடுந் தேர்மேல் ஏறிச் சுழிகுளம்

நீந்திஓர் கூடநிறை சதுக்கம் - போந்து       47

மதுரம் கமழ் மாலைமாற்று அணிந்து சூழும்

சதுரங்க சேனை தயங்கச் - சதுராய்      48

முரசம் கறங்க முடிவேந்தர் சூழ

வர சங்கம் மீதிருந்து வாழ்ந்தே - அருள் வடிவாய்      49

ஓங்குபுகழ் மூவர் ஒருபஒருபஃதும்

ஆங்கு அவை சொல் வாதவூராளி சொல்லும் - ஓங்கும் அவன்      50

கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோதில்தாய்

மாற்றா இரட்டைமணி மாலையும் - தேற்றம்உற       51

பற்றாம் இலக்கண நூற்பாவும் நூற்பா அறிந்து

கற்றார் வழங்கு பஞ்சகாப்பியமும் - கொற்றவருக்கு       52

எண்ணிய வன்னனைகள் ஈரொன்பதும் அறியக்

கண்ணியம் மிக்க பெருங்காப்பியமும் - நன்ணியே      53

இன்புறு சேரந் அரங்கேற்ற மகிழ்ந்து அம்பலத்தான்

அன்புறு பொன்வண்னத்து அந்தாதியும் - முன்பு அவர்சொல்       54

மாத்தமிழாம் மும்மணி மாலையும் பட்டினத்தார்

கோத்தணிந்த மும்மணிக் கோவையும் - மூத்தோர்கள்       55

பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்

கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடக மா       56

வெற்புஅனையார் மாதை விமலரிடத்தே இருவர்

கற்பனையால் சொன்ன கலம்பகமும் - முற்படையோடு       57

ஆடல் கலிங்கம் அழித்து ஆயிரம் ஆனைகொன்ற

பாடற்கு அரிய பரணியும் - கூடல்       58

நராதிபன் கூத்தன்எதிர் நண்ணி ஓர்கண்ணிக்கு

ஓராயிரம்பொன் ஈந்த உலாவும் - பராவும் அவன்      59

பிள்ளைத் தமிழும் முன்னாம் பேராத பல்குரவர்

வெள்ளத்தினும் மிகுத்தோர் மெய்காப்ப - உள்ளத்து      60

வீரியம் செய்து வினையொழியவே ராச

காரியம் செய்யும் கவிதையே - பாரில்       61

அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச்

சரியாரும் உண்டோ தமிழே - விரிஆவுர்      62

திகழ்பா ஒருநான்கும் செய்யுள் வரம்பாகப்

புகழ் பாவினங்கள் மடைப்போக்கா - நிகழவே       63

நல்ஏரினால் செய்யுள் நால்கரணத்து ஏர்பூட்டிச்

சொல்லேர் உழவர் தொகுத்து ஈண்டி - நல்லநெறி       64

நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்

மேலே பலன்பெறச் செய்விக்கும் நாள் - மேலோரில்      65

பாத்தனதாகக் கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லி ஒட்டக்

கூத்தன் இவர் கல்லாது கோட்டி கொளும் - சீத்தையரைக்       66

குட்டிச் செவிஅறுத்துக் கூட்டித் தலைகள் எல்லாம்

வெட்டிக் களைபறிக்க மேலாய்த் தூர் - கட்டி       67

வளர்ந்தனை பால் முந்திரிகை வாழைக் கனியாய்க்

கிளர்ந்த கரும்பாய் நாளிகேரத்து - இளங்கனியாய்       68

தித்திக்கும் தென்அமுதாய்த் தெள்ளமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்       69

உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் - மண்ணில்       70

குறம்என்று பள்என்று கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ ! திறம்எல்லாம்       71

வந்துஎன்றும் சிந்தாமணியா இருந்த உனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச் சிந்துமே - அந்தரம்மேல்      72

முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ

குற்றம் இலாப் பத்துக்குணம் பெற்றாய் - மற்றொருவர்       73

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோ நீ

நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் - நாக் குலவும்       74

ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள் உணவு

ஆன நவரசம் உண்டாயினாய் - ஏனோர்க்கு       75

அழியா வனப்பு ஒன்றுஅலது அதிகம் உண்டோ

ஒழியா வனப்பு எட்டு உடையாய் - மொழிவேந்தர்       76

வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார்நீ

ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே - பாங்குபெற      77

ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனைப்போலச்

சீர் முப்பதும் படைத்த செல்வர் ஆர் - சேரமான்       78

தன்னடிக் கண்டு தளை விடுத்தாய் ஏழ்தளை உன்

பொன்னடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ - என் அரசே       79

திண் பாவலர்க்கு அறிவாம் செந்தமிழாய் நின்றஉன்னை

வெண்பா என்று ஓதுவது மெய்தானோ - பண்பு ஏர்       80

ஒலிப்பாவே சங்கத்து உகம் மூன்று இருந்தாய்

கலிப்பா என்று ஓதல் கணக்கோ - உலப்பு இல்       81

இருட்பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை

மருட்பா என்று ஓதல் வழக்கோ - தெருள்பாப்       82

பொருத்தம் ஒருபத்துப் பொருந்தும் உனைத்தானே

விருத்தம் என்று சொல்லல் விதியோ - இருள்குவையை      83

முந்தி ஒளியால் விலக்கும் முச்சுடர் என்பார் உனைப்போல்

வந்து என் மனத்து இருளை மாற்றுமோ - சிந்தா      84

மணி கொடையின் மிக்கது என்பார் வண்கொடையும் உன்பேர்

அணியும் பெருமையினால் அன்றோ - தணியும்       85

துலங்கு ஆரம் கண்டசரம் தோள்வளை மற்றுஎல்லாம்

அலங்காரமே உனைப்போல் ஆமோ - புலம்காணும்      86

உன்னைப் பொருள்என்று உரைக்கும் தொறும் வளர்வாய்

பொன்னைப் பொருள் என்னப் போதுமோ - கன்னமிட்டு      87

மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்

என்ன பொருள் உனைப்போல் எய்தாவே - நன்னெறியின்       88

மண்ணில் புகழ்உருவாய் வாழ்வதற்கும் வாழுநர்

விண்ணில் போய்த் தேவுருவாய் மேவுதற்கும் - எண்ணிஉனைக்       89

கொண்டு புகழ் கொண்டவர்க்கே கூடும் உனைக்கூடாத

தொண்டருக்குத் தென்பாலே தோன்றுமால் - தண்தமிழே       90

ஈங்கு உனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ

ஓங்கும் அவரால் நீ உயர்ந்தாயோ - பூங்கமல      91

வீடுஆளும் வாணி அங்கை மேலே இருந்தாயோ

ஏடா உன்மேல் இருந்தாளோ - ஆடு அரவத்       92

தாழ் பாயலாளரை நீ தானே தொடர்ந்தாயோ

சூழ் பாயோடு உன்னைத் தொடர்ந்தாரோ - வாழ்வே என்று      93

ஓதி முனிகேட்க உனை முருகர் சொன்னாரோ

சோதி யவரை நீ சொற்றனையோ - பேதியா       94

நேசர் உனக்கே பொருளாய் நின்றாரோ - நீள்மதுரை

வாசருக்கு நீ பொருளாய் வந்தாயோ - பாசமுறும்      95

என்செய்தி நீ கண்டு இரங்குவது நீதி அல்லால்

உன் செய்தி நானோ உரை செய்வேன் - இன்சொல்லாய்       96

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக என்ற - சொற்குள்ளே      97

எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற

வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ - சொல்லியஉன்      98

ஈரடிக்குள்ளே உலகமெல்லாம் அடங்கும் எனின்

நேரடிக்கு வேறே நிலன்உண்டோ - ஓரடிக்கு ஓர்       99

ஆயிரம் பொன் இறைக்கும் இயரை வீதியிலே

போய் இரந்து தூது சொல்லப் போக்கினோய் - ஆயிருந்தும்       100

மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என்வருத்தம்

காண்பாய் என் பெண்மதி நீகாணாதே - ஆண்பனைநல்       101

பெண்பனை ஆக்கினையால் பெண்களிலே காரைக்கால்

வண்பதியார் ஒளவைஎன வந்து உதித்தாய் - நண்புஆர்      102

திலகவதியா ருடனே சென்மித்தாய் மாடக்

குல தவ தியானத்தார் கூடல் - பல தவம் சேர்      103

மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டு உருகும்

மானியார் தேசிகனா வந்துஉதித்தாய் - ஞானியார்       104

துங்க மகவாகத் தோன்றி வனப்பகைக்கும்

சிங்கடிக்கும் தாதையாய்ச் சீர் செய்தாய் - இங்குநீ      105

பெண்கள்எல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்

புண்கள் எல்லாம் ஆறப் புரிகண்டாய் - ஒண்கமலத்து       106

அன்னம்தனை விடுப்பேன் அன்னந்தான் அங்குஅவரை

இன்னம்தான் கண்டு அறியாது என்பரே - மன்எந்தாய்      107

அப்பால் ஓர் வண்டை அனுப்பின் அவர் காமம்

செப்பாதே என்றால் திகைக்குமே - தப்பாது       108

மானைப் போய்த் தூது சொல்லி வா என்பேன் வல்லியப் பூந்

தானைப் பரமர்பால் சாராதே - ஏனைப்பூங்       109

கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கையினம்

ஆகி வலியானுக்கு அஞ்சுமே - ஆகையினால்      110

இந்த மனத்தைத் தூதாய் ஏகுஎன்பேன் இம்மனமும்

அந்த மனோதீதர்பால் அண்டாதே - எந்தவிதம்       111

என்றுஎன்று இரங்கினேன் என் கவலை எல்லாம்பொன்

குன்று அனையாய் உன்னுடனே கூறுகேன் - சென்றாலும்!      112

பண்ணிய பத்தொன்பதின் ஆயிரத்து இருநூற்று

எண்ணிய தொண்ணூற்று ஒன்றெனும் தொடையாய் - நண்நீ      113

ஒருதொடை வாங்கி உதவாயோ ஓர்சே

விருது உடையார்க்கு நீ வேறோ - தருமிக்கே      114

ஓர் வாழ்க்கை வேண்டி உயர்கிழி கொள்வான்கொங்கு

தேர் வாழ்க்கை என்று எடுத்த செய்தியும் - கீரன்      115

இசையா வகையின் இயம்பினான் என்றே

வசையாடித் தர்க்கித்த வாக்கும் - இசையான      116

பாட்டுக்கு இரங்கி ஒருபாணனுக்குச் சேரலன்மேல்

சீட்டுக்கவி விடுத்த சீராட்டும் - பாட்டியலில்      117

நாத்திரமா மேவுபொருள் நன்றா அறுபதெனும்

சூத்திரமாப் பாடியருள் தோற்றமும் - மாத்திரமோ       118

உன்னோடு அவர்விளையாட்டு ஒன்றோ வடமதுரைக்கு

அந்நேரம் உன்பிறகே யார் வந்தார் - மன்னவன் மேல்      119

காரியார் நாரியார் கண்ட கவியைப் பகிர

வாரிஇலாக் கானகத்தில் வந்தவர்ஆர் - நாரினொடும்      120

போற்றிஉறும் பத்திரற்காப் போந்து கிழஉருவில்

தோற்றி விறகு சுமந்தவர்ஆர் - தேற்றி அவற்கு       121

ஈயரிய பொற்பலகை இட்டவர்ஆர் மற்றுஅவன்தன்

நேய மனைவிக்கு எதிரா நேர்ந்தவளைப் - போய்அவையில்      122

தள்ளிஇசை தாபிக்கத் தக்கவர்ஆர் தென்மதுரைக்கு

உள்ளிருந்த சொக்கர் உனக்குள் அன்றோ - எள்ளி      123

வடமொழியில் வேத வசனமே ஈசர்

திட மொழியா என்பார் சிலரே - அடரும்       124

பரசமய கோளரியாய்ப் பாண்டி நாடுஎங்கும்

அரசமயம் நீ நிறுத்தும் அந்நாள் - விரசு நீ      125

ஆதிக்கண் வையையில் வேதாகமத்தைத் தாபித்தாய்

சோதிக்கிந் ஏடகமே சொல்லாதோ - வேதத்தேவு      126

ஆதவன் அங்கு அண்டாது அடைத்த கதவம் திறந்தாய்

வேதவனம் கண்டால் விளம்பாதோ - வேதம்       127

அமிழ்தினும் மிக்கென்னும் முனிக்கு அன்பர் உனைச் சொன்னார்

தமிழ்முனி என்னும் பேர் தாராதோ - தமிழால்       128

அறம் பொருள் இன்பம் வீடு ஆரணர் சொன்னார்அத்

திறம் பரமர் வாக்கே செப்பாதோ - மறந்திடல்இல்       129

கற்புஅலகை ஓதுமறை காணார் கீழ் நிற்கவும் நீ

பொன்பலகை மேலிருந்தாய் போதாதோ - தற்பரரேண்டு       130

எண்இரந்த வாசி அழைத்திட்டாய் சதுர்வேதப்

பண்நிறைந்த வாசி பகராதோ - அண்ணலார்      131

தென்பால் உகந்தாடும் செய்தி எல்லாம் உன்னிடத்தில்

அன்பால் என்று அப்பாலும் ஆரறியார் - உன்பேர்       132

பழிஆர் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்

மொழியார் குழறி மொழிவார் - அழியா      133

உருவால் அவாய் இருக்கும் ஓதரிய முத்தித்

திருவாலவாய் இருக்கும் செல்வர் - ஒரு மால்       134

வடமதுரை ஏறுமுன்னே வந்த வடிவு என்னத்

தடமதுரை மீன்உயர்த்த தாணு - படர்தீர்க்கும்      135

சத்திபுரத்து ஓர்பால் தழைத்து மகிழ்ந்தோர் சீவன்

முத்திபுரத்து ஓர்பால் முளைத்து எழுந்தோர் - அத்திசைபோல்       136

ஆங்குஓர் இருநான்கு அயிராவதம் சுமக்கும்

பூங்கோயிற்குள் உறைந்த புண்ணியனார் - பாங்காம்      137

இடம் பவனம் ஈது ஆக இந்திரன் வந்து ஏத்தும்

கடம்பவனம் மீதிலுறை காந்தர் - அடும்பேர்      138

அலகு அம்பு அரிக்கும் அரியார் முடிவேய்ந்து

உலகம் பரிக்கும் முறைஉள்ளார் - பலநாளும்       139

நின்றவூர்ப் பூசலார் நீடு இரவெலாம் நினைந்து

குன்று போலே சமைத்த கோயிலும் - நன்றிதரும்       140

தாயான கங்கைமுடி தான் குளிரக் கண்ணப்பர்

வாயால் உமிழ்ந்த திருமஞ்சனமும் - தூயமழைத்      141

துன்புஆர் திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில்

அன்பாய் அளித்த பரிவட்டமும் - இன்பாத்       142

தணிவுஅரிய மானக்கஞ்சாறணார் சாத்தும்

மணிமுடி சூழ் பஞ்சவடியும் - அணிவிடையார்      143

காமன்பால் முன்சேந்த கண்போல மூர்த்தியார்

தாம் அன்பால் முன்சேர்த்த சந்தனமும் - பூமன்போல்       144

காக்கும் அரிபுனைந்த கண்மலரும் காதலொடு

சாக்கியர் தாம்சாத்திய பூந்தண்மலரும் - போக்கியமா      145

ஆக்கிய மாறன் அமுதும் சிறுத்தொண்டர்

மார்க்கறியும் தாயர் தரு மாவடுவும் - நீக்கரிய      146

கார்ஆர் இரவில் கணம்புல்லர் தம்முடிமேல்

சீராக ஏற்றிய செந்தீபமும் - ஆரால்       147

அமைத்து வணங்கல் உறும் அங்கணர்க்குப் பூசை

சமைத்து வணங்கத் தகுமோ - உமைக்கு அன்பர்      148

அற்சனை பாட்டேயாம் என்று ஆரூரர்க்கு ஆதியிலே

சொற்றமிழ் பாடுகஎனச் சொன்னமையால் - சொற்படியே       149

செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்கப் பித்தன்என்று

வைதாய் நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான்      150

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன் - வருந்தினன் மால்      151

வெல்லானை தின்ற விளங்கனி ஆனேன் விரகக்

கல் ஆனை தின்ற கரும்பானேன் - நல் அவரைத்      152

தேடு நிழல் சிந்தனையின் தேம்பினேன் வெம்பனியால்

வாடிய செந்தாமரை ஒத்தேன் - ஓடம்மிசைக்      153

கொள்ளம்பூதூர் வெள்ளக் கொள்ளை கடந்தாய் என்மால்

வெள்ளம் கடத்திவிட வேண்டாவோ - தள்என்று      154

மாறுஇட்ட சாக்கியரை வன் கழுவேறச் செய்தாய்

சீறிட்ட வேளை அது செய்யாயோ? - நீறு இட்டே       155

அங்குஅரும் பின் கூன் ஒழித்தாய் அன்று வழுதிக்கு மதன்

செங்கரும்பின் கூந் ஒழியச்செய்யாயோ - அங்கம்உறு       156

வெப்புநோய் தீர்க்காய் அவ்வேந்தனுக்கு என்வெவ்விரக

வெப்பு நோய் தீர்க்க விரும்பாயோ - தப்பு அலவே       157

சாக்கியர் இட்ட நஞ்சுதன்னை அமுதாக்கினை இன்று

ஆக்கிய நஞ்சை அமுதாக்காயோ - நீக்க அரிய       158

வெந்தீக்குள்ளே கிடந்தும் வேவாய் என்பார் காமச்

செந்தீச் சுடாது இருக்கச் செய்யாயோ - வந்து கொங்கில்      159

அப்பனியால் வாடாதே யார்க்கும் துயர்ஒழித்தாய்

இப்பனியால் வாடாது இரங்காயோ - அப்பரை      160

மைக்கடல் கொல்லாதபடி வன்கல் மிதப் பித்தாய்

அக்கடல் கொல்லாமல் உறவாக்காயோ - மிக்கு உயர்ந்த      161

மன்றில் பனைவடிவம் மாற்றினாய் அப்பனைமேல்

அன்றில்புள் வேறொருபுள் ஆக்காயோ - தொன்றுதொட்டுத்      162

தென்பொதியில் சாந்தினொடு தென்றல் உறவாய் வந்தாய்

அன்புற என்னோடும் உறவு ஆக்காயோ? - முன்புஇருந்து       163

பாடும் இசை எல்லாம் உன் பாவையராச் சேர்ந்தாய்என்

னோடு முனியாதிருக்க ஓதாயோ - பாடலால்      164

சின்னமொடு காளம் சிவிகை பந்தர் முத்துஅடைந்தாய்

பொன்னே சுடாது அணியப் பூட்டாயோ - முன்இறந்தாள்      165

அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினாய் ஆதலின்என்

அங்கத்தைப் பூம்பாவை ஆக்காயோ - மங்கத்தான்      166

மாய்ந்தாலும் மாமுதலைவாய்ப் பிள்ளையைப் படைத்தாய்

மாய்ந்தாலும் பின்படைக்க வல்லையே - ஏய்ந்தஉரை      167

செய்தான் என்று என்சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு

எய்தாமல் அங்குஇருக்க எண்ணாதே - பொய்தீரத்      168

தேசு இவரும் சொக்கருக்கே சென்றிருந்து ஆங்கு அவரைப்

பேசி வரும் தூது பிறிது உண்டோ - நேசமொடு      169

தைவரினும் காட்டத் தகாதாரைத் தாதையர்க்குக்

கைவிரலால் காட்டி அருள்காளையும் - தெய்வவெள்ளிப்170

பூதர வானவரைப் போற்ற முயன்று ஐயாற்றில்

ஆதரவாய்க் கன்ட அரசரும்- நாதர்       171

அளந்து அருள் செம்பொன்னை மணியாற்றில் இட்டு ஆரூர்க்

குளம் தனிலே தேடிஅருள் கோவும் - வளம் திகழும்      172

காளத்தியில் வந்த காட்சி கயிலாயத்து

நீளத்தான் சொற்றவனும் நீயன்றோ - கேள்அப்பால்       173

அம்மை தமக்கு இல்லாதார் அம்மை தாமா இருந்தார்

அம்மை என்று முன்உரைத்த அம்மையார்த் - தம்எதிரே       174

வெள்ஆனை மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த

வெள்ஆனை மேற்கொன்ட வித்தகராய்த் - தள்ளாது      175

விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்றுபணிந்து

அஞ்சலி செய்து ஆட்செய்த அன்பராய்ச் - சஞ்சரியாத்      176

தென்கையிலாய வரைச் செல்வர்பால் சென்றாயே

உன்கையில் ஆகாதது ஒன்று உண்டோ - என்கையால்       177

ஆயும் அவள் பாகத்து அன்பரும் உக்கிரராம்

சேயும் புரந்திருக்கும் தென்மதுரை - வாய் இனிய      178

செவ்வழியே செல்வாய் நீ செல்வழி நல்வழிதான்

எவ்வழி என்றால் இயம்பக் கேள் - எவ்வழியும்       179

வெல்வாய் உனைநினைந்து வேயுறு தோளி என்று

செல்வார் தம் காரியம் சித்திக்குமே - செல்வாய்       180

தடைஉண்டோ ஐயாறு தன்னிலே பொன்னி

இடைவிலங்கச் சென்றது அறியேனோ - இடையிலே      181

பாலைநிலம் நெய்தலாப் பண்ணினாய் இன்னும்அதைச்

சோலைநிலம் ஆக்குவை நான் சொல்லுவதுஎன் - மேலானார்       182

கூறும் பொதிசோறு கொண்டுவரின் உனக்கு

வேறும் பொதிசோறு வேண்டுமோ - வீறாகக்       183

கற்பார் பொருள்காணார் காசுபணம் காணில் உனை

விற்பார் அவர்பால் நீ மேவாதே - கற்றாரை      184

எள்ளிடுவார் சொல்பொருள் கேட்டு இன்புறார் நாய் போலச்

சள்ளிடுவார் தம் அருகே சாராதே - தெள்ளுதமிழ்ப்       185

பாயிரம்முன் சொன்னபடி படியாமல் குழறி

ஆயிரமும் சொல்வார்பால் அண்டாதே - ஆய்தருநூல்       186

ஓதிஅறியாத ஒண் பேதையருடனே

நீதி முறையா நிகழ்த்தும் நூல் - பேதமையாம்      187

காணாதான் காட்டுவான் தான்காணான் கண்எதிரே

நாணாது இராதே நவிலாதே - வீணாக       188

ஆற்றின் அளவறிந்து கல்லாது அவைஅஞ்சும்

கூற்றினர் பால் ஏகாதே கூடாதே - போற்றாரை      189

வேண்டாதே கேடில் விழுச்செல்வங் கல்விஎன்று

பூண்டாய் நீதானே பொருள் அன்றோ - ஆண்ட       190

வலவா நல ஆவடுதுறையில் உன்போல்

உலவாக்கிழி பெற்றார் உண்டோ - நல இருப்புஅது      191

ஆக்க அரும் செங்கலைப் பொன் ஆக்கினாய் மண் முழுதும்

மாக்கனகம் ஆக்கிவிட வல்லையே - நோக்கு புகார்      192

பாடியதுஓர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு

கோடிபொன் கொண்டது நின்கொற்றமே - தேடி அருள்      193

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார் கண் பட்ட திருக் கண்டாயே - கல்லார்பால்      194

ஏகாதே அன்பிலார் இந்திரன்போல் வாழ்ந்தாலும்

போகாதே அங்கே புசியாதே - மாகவிஞர்      195

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு

காமுறுவர் கற்றரிந்தார் என்னும் - மாமகிமை      196

சேர்ந்தது உன்பால் அன்றோ திருப்பாற்கடல் அமுதம்

ஆர்ந்தவர்க்கு அல்லாது பசி ஆறுமோ - சேர்ந்து உன்னை      197

நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்

தம்பால் இருந்து தரித்து ஏகி - வம்பாகப்       198

பின்போய் யமன்ஓடப் பேர்ந்துஓடும் வையையிலே

முன்போய் எதிர்போய் முழுகியே - அன்போட      199

தாழ்ந்து நீள் சத்தம் தனைக் கற்றார் உள்ளம்போல்

ஆழ்ந்த அகழி அகன்று போய்ச் - சூழ்ந்து உலகில்      200

மேன்மேல் உயர்ந்துஓங்கு வேதம்போல் மேலாக

வான்மேல் உயர்ந்த மதில் கடந்து - போனால்       201

மிருதி புராணம் கலைபோல் வேறுவேறாக

வரு திருவீதி சூழ்வந்தே - இருவினையை      202

மோதும் சிவஆகமம்போல் முத்திக்கு வித்தாக

ஓதுந் திருக்கோயிலுள் புகுந்து - நீ தென்பால்       203

முன்னே வணங்கி முறையின் அபிடேகமுனி

தன் நேயம் போலாம் தளவிசையும் - தன் அடைந்து       204

தேறும் படிவர் சிவலோகம் சேர்ந்து இருக்க

ஏறும் படி நிறுத்தும் ஏணிபோல் - வீறு உயர்ந்த       205

கோமேவு கோபுரமும் கூடலின்மேல் முன் ஒருநால்

மாமேகம் சேர்ந்தது போல் மண்டபமும் - பூமேவும்      206

மட்டு அளையும் வண்டுஎனப்போய் மாளிகைப்பத்தி அறைக்

கட்டளையும் கண்டு களி கூர்ந்தே - இட்ட மணிச்      207

சிங்கா தனத்தில் சிறந்ததிரு வோலக்கம்

எங்காகிலும் ஒருவர்க்கு எய்துமோ - பைங்கழல் சூழ்      208

தேம்கமலத் தேசு தெரிசனம் செய்து அவர்க்கே

பூங்கமலக் கண் கொடுத்த புத்தேளும் -ஓங்கு அமல       209

மையில் அடியில் வணங்காத் தலை ஒன்றைக்

கையில் அளித்த கடவுளும் - மொய் இழந்த      210

மானம் தனக்கு வகுத்த கடம்பாடவிக்கு

மானம் தனை வகுத்த வானவனும்- தேன் அங்கு      211

அணி மலர்த்தாள் நெஞ்சூடு அழுத்தி அழுத்தாதே

மணிமுடிகள் நீக்கி வணங்கக் - கணநாதர்      212

ஓதுதுனியோடு சினம் உற்ற பகை செற்ற முரண்

போத முனிவர் புடைசூழத் - தீதுஇல்       213

அரிய திசைப்பாலர் அத்தம் முதல் தாங்கி

தெரிசனக் கண் பார்த்து ஏவல் செய்யப் - பரவியே      214

முன்இருவர் எண்மரொடு மொய்த்த பதினொருவர்

பன்னிருவர் நின்று பணிசெய்ய - முன்னே      215

நதிகள் எனக்கண்டு நந்தி பிரம்பு ஓங்க

உதகம் இருபாலின் ஒதுங்கிப் - பதினெண்       216

குலத்தேவர் தம் மகுடகோடி பதினெட்டு

நிலத்தோர் முடியால் நெரிய - நிலத்தே       217

செருக்கும் சிநேகம் உற்ற தேவியுடனே

இருக்கும் சினகரத்துள் எய்திப் - பொருக்கெனப்போய்      218

எந்தாய் என்று ஏத்தும் இடைக்காடன் பின்போன

செந்தாமரை போல் திருத்தாளும் - வந்து மனம்       219

தேறிக் கழுத்து அரியத் தென்பாண்டி நாடனுக்கு

மாறித் திரும்பும் மணிக் குறங்கும் - சீறிப்      220

பணிக்கற்கு மாறாப் படைஉடைவாள் சேர்த்து

மணிக்கச்சு உடுத்த மருங்கும் - துணிக்கு அமையத்      221

தொண்டுபடு வந்தி சொரிந்திடும் பிட்டு அள்ளிஅள்ளி

உண்டு பசிதீர்த்த உதரமும் - அண்டும் ஒரு       222

தாய்முலைப்பால் உண்டு அறியாத் தாம் பன்றிக்குட்டிகளின்

வாய் முலைப்பால் ஊட்டிய பூண்மார்பகமும் - தூயமுடி      223

ஆணிக் கனகத்து அழுத்த வழுதிக்கு

மாணிக்கம் விற்ற மலர்க்கையும் - காணிக்காப்      224

பூம்படலை ஆத்திப் புனைமலரைப் பூணாமல்

வேம்பு அலரைப் பூண்ட வியன்புயமும் - ஓம்புகொடி      225

வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம்

காதில் புகன்ற கனிவாயும் - தீதுஇல் சொல்       226

வாயிலா நீ இருந்து வாழும்படி உனக்குக்

கோயிலாத் தந்த குழைக்காதும் - போய் வணிகப்      227

பெண்நீராள் கண்ணீர் பெருகத் தழுவித் தம்

கண்ணீரால் ஆற்றி அருள் கண்களும் - தெண்ணீரார்       228

பண்சுமந்த பாட்டினுக்கும் பாவைதந்த பிட்டினுக்கும்

மண்சுமந்த சோதி மணிமுடியும் - கண் சுமந்து      229

கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள்உருகித்

தொண்டு செய்து தாள்முடிமேல் சூடியே - மண்டும்       230

உடுக்கலம் தம்கோக்குலம் என்று உற்றறிந்தால்என்ன

அடுக்கு இலங்கு தீபம் எதிராகக் - கடுத்திடேல்      231

வெங்கதிர் உண்டு உன்குலத்து வெண்மதிஉண்டு என்னல்போல்

தங்க ஆரத் தீபம் தாம் அசையத் - துங்க விடை      232

ஏங்கும் ஒருமீன் உயர்த்தின் எங்கிருப்பேன் என்பதுபோல்

ஆங்கு இடபதீபம் அழன்றுஆட - நீங்காது      233

அருள் தாம் மிருகத்துஉரு ஆனார்க்கு உவந்தே

புருடா மிருகத் தீபம் போற்ற - மருவார்      234

வருகுலத்தார் பானு வரல் நடுக்குற்று என்ன

அருகு உலவும் தட்ட அசைய - இருசுடர்க்கும்       235

சொக்கர் உனைத்தானே சுடர்என்று காட்டுதல்போல்

அக்கரா லத்தி ஒளியாய் விளங்கத் - தக்கவளோடு       236

எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல்போல்

பொற்கும்தீபம் எதிர்போய் வளையச் - சொற்குஉருகும்       237

அற்புஊர் அத்தொண்டர்க்கு அருள்முத்தி ஈதுஎனல்போல்

கற்பூரத் தட்டில் வாய்ப்பப் - பொற்புஆக      238

நம்குலத்தும் வந்துஉதித்தார் நாதர்என்று பானுமகிழ்ந்து

அங்கு உறல்போல் கண்ணாடி அங்கண்உற - இங்குஅரசர்      239

எம்குலத்தார் ஆயினார் என்றுபிறை தோற்றுதல்போல்

துங்க முடிமேல் குடை வெண்சோதிவிடப் - பொங்கிஎழும்       240

முந்துகடல் வெண்திரைகள் முன்னே மாமிக்காக

வந்தவன்போல் வெண்சாமரை இரட்ட - விந்தை செயும்      241

ஆடுஅரவச் சித்தர் இவர் ஆதலினால் ஆலவட்டம்

நீடுஅரவம் போல எதிர்நின்று ஆட - நாடு அகலா      242

வால நறும்தென்றல் நம் மன்னர்என்று காண்பதுபோல்

கோல விசிறி குளிர்ந்து அணுகக் - காலைத்      243

திருவனந்தல் முன்னாகச் சேவிக்கும் காலத்து

உருஅனந்த தேவருடனே - மருவி எதிர்       244

போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்அனுப்பித்

தோற்றரவு செய்து துதித்தன்பின் - ஆற்றல்      245

அரிய சிவஆகமத்தோர் ஆதிசைவர் தம்பால்

உரிய படையா ஒதுங்கி - அருமையுடன்       246

மூவர் கவியே முதலாம் கவிஐந்தும்

மூவராய் நின்றார்தம் முன்ஓதி - ஓவாதே      247

சீபாதம் எண்ணாத தீவினைப்பாவி செய்த

மாபாதகம் தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப்       248

பைந்நாகம் சூழ் மதுரைப் பாண்டியனே பாரமணிக்

கைந்நாகம் சூழ்கோயில் கண்மணியே - மன்ஆக       249

மைக்கண் கரும்பை மருவிப் பிரியாத

முக்கண் கனியே முழு முதலே - மிக்க புனல்       250

கங்கா நதிக்கு இறையே கன்னித்துறைக்கு அரசே

சிங்காதனத் துரையே செல்வமே - எம்கோவே      251

நாட விளைஆடி வந்த நற்பாவைபோல் அடியார்

கூட விளையாடி வந்த கோமானே - தேடஅரிய      252

சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடியநாள் ஓடிஎதிர்

வந்த விளையாட்டு இனிமேல் வாராதோ - வந்து அருளால்      253

பாவும் புகழ்சேர் பழிக்கு அஞ்சி என்று உலகில்

மேவும் பெயர் இனிமேல் வேண்டாவோ - ஆவலினால்      254

புக்கு வந்தார் தம்மேல் பொடிபோட்டு உளம் மயக்கிள்

சொக்கலிங்கம் என்று எவரும் சொல்லாரோ - இக்கு அணைத்த      255

அங்கை வேள்தானே அரசாளவும் சிறிய

மங்கைதனைக் கோட்டி கொளல் வல்லமையோ - கங்கை எலாம்       256

நல்ல மைக்கண் ஊடுவர நல்குதியேநல்நங்கை எல்லாம்

வல்ல சித்தர் என்று அழைக்கமாட்டாளே - நல்லவர்போல்      257

மைக் குவளைக்கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தம்

கைக்கு வளை விற்கக் கனக்கு உண்டோ - திக்கு வளை      258

தோள் தாரும் வேம்பாய்த் தொடர்ந்து தொடர்ந்தே ஒருதார்

கட்டாரும் வேம்பு ஆகக் கேட்டோ மே - நாட்டம்உற      259

வேளைஎரித்தாய்க்கு இயல்போ மின்னார் கலைகவர்தல்

காளையிடை இருந்து கற்றதோ - மீளாது      260

சென்று இலகு நாரை அன்று சென்ற சிவலோகத்தே

இன்று எனை அங்கு எய்தவிடல் ஆகாதோ - அன்றி அழல்      261

குன்றே விருத்த குமாரர் இளம்பாலர்

என்றே ஓர் பெண் வீட்டு இருக்கலாம் - சென்று ஒருநாள்      262

பொன்னனையாள் வீடும் புகுந்திருக்கலாம் எனின்என்

பொன் அனையாள் வீடும் பொருந்தாதோ - என்னும் மொழி      263

எல்லாம் திருச்செவியில் ஏறும்படி உரைக்க

வல்லாய் உன்போல் எவர்க்கு வாய்க்குமே - நல்லாள்       264

கருணை விழியாள் அங்கயற்கண்ணி தன்னோடு

அருள் புரிய வாழ்ந்திருக்கும் ஐயர் - திருமதுரை      265

தானே சிவ ராசதானி என்று வீற்றிருந்தால்

தேனே நம் பாக்கியத்தின் செய்தியே - ஆனமையால்      266

அந்தரலோகத்தின் மேலான திருஆலவாய்ச்

சுந்தர மீனவன் நின் சொற்படியே - வந்து       267

துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க

மறவாதே தூதுசொல்லி வா.       268

-----------